Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

*துணை சபாநாயகர், கலெக்டர் தொடங்கி வைத்தனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துணைசபாநாயகர், கலெக்டர் தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்நேற்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கம், உள் விளையாட்டு அரங்கம், அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானம், முருகையன் நினைவு மாதிரி மேல்நிலைப்பள்ளிஉள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

தடகளம், நீச்சல், கபாடி, செஸ், இறகுப்பந்து நீச்சல், கிரிக்கெட், கேரம், கைப்பந்து, கால்பந்து,கோகோ, மேசைப்பந்து, வளைகோல் பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனியாக நடத்தப்படுகிறது.மேலும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இப் போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெற்றது. அதையொட்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக மாநிலத்திலேயே அதிகபட்சமாக 1.25 லட்சம் பேர் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று விமர்சையாக தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி போட்டிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகால ஆட்சியில் விளையாட்டுத் துறையில் பல வியக்கதக்க முன்னேற்றங்களை தமிழ்நாடு கண்டிருக்கிறது.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் உலக அளவிலான செஸ் போட்டியை சென்னையில் நடத்தினார்.

அதைப்போல், ஆசிய அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தி காட்டினார். ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் பெற்றிருக்கிறது. மேலும், ஆசியாவிலேயே எங்கும் நடைபெறாத அளவிற்கு சென்னை மவுன்ட் ரோட்டில் கார் ரேஸ் நடத்தியிருக்கிறார்.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலமாக, மாணவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகமான பதக்கங்களை பெற வழிவகுக்கும்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் இன்று துவக்கி வைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நொய்லின் ஜான்,மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் இறகுபந்து போட்டிக்கு 932, செஸ் போட்டிக்கு 1774, நீச்சல் போட்டிக்கு 1543, கேரம் போட்டிக்கு 3622, சிலம்பம் போட்டிக்கு 391, சிரிக்கெட் போட்டிக்கு 3795 நபர்கள் பதிவு செய்திருந்தனர்.இந்நிலையில், முதலமைச்சர் கோப்பைக்கான இரண்டாம் நாள் விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.