Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிவேகம், அலட்சியம், அஜாக்கிரதையால் அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல் : மாவட்டத்தில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. விபத்தினை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. மேலும் மாவட்டத்தின் கிராமப்புற சாலைகளில் இருந்து நகரத்திற்கு செல்லும் சாலைகளிலும் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. விபத்துகளில் உயிரிழப்பது போக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கை,கால்களை இழக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் தடுப்புவேலி எச்சரிக்கை, பலகை மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் போன்ற மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை. இதில் 99 சதவீத உயிரிழப்புக்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களால் தான். போலீசாரும் அடிக்கடி வாகன சோதனை செய்து ஹெல்மெட் அணிவதன் கட்டாயத்தை எடுத்துக் கூறி அபராதமும் விதித்து வருகின்றனர். விபத்துக்கான காரணங்களாக அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குவது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமலும், சீட்டு பெல்ட் போடாமல் செல்வது என போதிய விழிப்புணர்வு இல்லாமலும் அஜாக்கிரதையாக செயல்படுவதால் தான் அதிக விபத்துக்கள் நடந்துள்ளன. எனவே விபத்தினை குறைத்திடும் வகையில் போலீசார் நடவடிக்கையை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘அரசு சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், விபத்தில்லா வாரம் அனுசரிப்பு என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் சீட்டு பெல்ட் அணியாமல் வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது. முன்பு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அது தற்போது 1000 கூடுதலாக விதிக்கப்படுகிறது. இருந்த போதிலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும், ஹெல்மெட் போடாமல் வாகனங்களை ஓட்டுவதும் இன்னும் குறைந்த பாடில்லை.

போலீசார் இன்னும் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். முக்கிய சாலைகளில் வாகன சோதனைகளை எப்போதாவது செய்து அபராதம் விதிப்பதை விட டோல்கேட்டுகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நம்பர் பிளேட் கேமரா போன்று முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து அதில் இந்த தானியங்கி கேமராக்களை நிறுவி வாகனங்களை கண்காணிக்க வேண்டும்.

அதில் பதிவாகும் வாகனங்களின் ஆவணங்களை சரிபார்த்து இன்சூரன்ஸ், லைசென்ஸ், ஆர்சிபுக் போன்ற ஆவணங்கள் இன்றி அல்லது புதுப்பித்தல் இன்றி இயக்கப்படும் வாகனங்களில் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நவீன கேமராக்கள் பதிவுகளை ஒரு கண்ட்ரோல் ரூமில் இணைத்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தால் விபத்துக்கள் குறையும்’’ என்றனர்.

மாணவர்களுக்கு வாகனம் வேண்டாமே

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இப்போது பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஓட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உரிய லைசென்ஸ் இல்லாமல் இவர்கள் வாகனம் ஓட்டுவதால், சாலை விதிகளை பற்றி தெரியாமல் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. பெற்றோர் பள்ளிக்கு செல்வதற்கு டூவீலர்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் சாலையில் வாகனத்தில் செல்லும் போது,திடீரென சாலையை கடக்கின்றனர்.

அப்போது விபத்தில் சிக்கி விடுகின்றனர்.போலீசார் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு ஓட்டும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அபத்தானது என விளக்கி கூற வேண்டும்’’ என்றனர்.