Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய 2 வாரங்களே உள்ளதால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக கடலில் மீன்வள பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்.14ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன.

தடைக்காலத்தில் இந்த விசைப்படகுகளை பல லட்சம் ரூபாய் செலவில் பழுது நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் நடந்து வந்தன. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்பட தமிழக கரையோரத்தில் பெரும்பாலான படகுகள் சீரமைப்பு பணிகள் முடிந்து தயாரான நிலையில் கடலுக்குள் இறக்கப்பட்டு வருகின்றன. தடைக்காலம் முடிய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் படகுகளை கடலுக்கு மீன் பிடிக்க அனுப்புவதற்கான ஆயத்த பணிகளில் படகு உரிமையாளர்களும், மீனவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய மீன்பிடி வலை கட்டுதல், வலை பலகை அமைத்தல், வண்ணம் தீட்டுதல், புதிய உபகரணங்கள் வாங்குதல் என மீனவர்கள் பரபரப்பாக தயாராகி வருகின்றனர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் 45 நாட்களுக்கு பிறகு பரபரப்பாக காணப்படுகிறது. ஜூன் 14ம் தேதி மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெறுகிறது.

அன்று முதல் பாக் ஜலசந்தி கடலில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும். மன்னார் வளைகுடாவில் ஜூன் 15ம் தேதி முதல் படகுகள் கடலுக்கு செல்லும். மீன்பிடி தடையினால் வேலையிழந்த மீனவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு மீன்பிடி கூலி வேலைக்கு சென்றனர். பலர் கட்டுமான வேலை உள்ளிட்ட பலதரப்பட்ட தொழிலுக்கு அன்றாட கூலிகளாக சென்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் இறால், கடல் நண்டு, கனவாய் மீன் உள்ளிட்ட பலவகை மீன்களின் ஏற்றுமதி முற்றிலும் நின்று போனதால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், உள்நாட்டு மீன் வர்த்தகமும் முடங்கியது. தமிழக கடலில் அமலில் உள்ள 2 மாத மீன்பிடி தடைக்காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடியும் நிலையில் கேரளா உள்ளிட்ட அரபிக்கடல் பகுதியில் தடைக்காலம் நாளை முதல் துவங்குகிறது.