Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பழுதான ‘ரோப் கார்’ சேவை மீண்டும் தொடக்கம்

*பக்தர்கள் மகிழ்ச்சி

குளித்தலை : குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் 9.10 கோடியில் அமைக்கப்பட்டு, பழுதான ரோப் கார் சேவை நேற்று மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிரசித்தி பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு கரூர், திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கார்த்திகை மாத சோமவாரங்கள், சித்திரைத் தேர் திருவிழா, பிரதி மாதம் பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

இந்த பூஜைகளில் பங்கேற்க மலை அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு 1,017 படிக்கட்டுகளில் ஏறி உச்சியிலுள்ள கோயிலுக்கு செல்லவேண்டும். இதனால், குழந்தைகள், நோயாளிகள், முதியோர் செல்லமுடியாத நிலை இருந்தது. இதனால், பழனி உள்ளிட்ட மலை கோயில்களில் நடைமுறையில் உள்ள ‘ரோப்கார்’, ‘வின்ச்’ உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தமிழக அரசு ₹9 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் ரோப் கார் வசதி அமைக்கும் பணி மேற்கோள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூலை 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளியில் திறந்து வைத்தார். இந்த ரோப் கார் 5 நிமிடங்களில் மலைக்கு செல்லும், அதேபோன்று 5 நிமிடத்தில் கீழே வந்துவிடும். ஒரு தடைவை 8 பேர் கோயிலுக்கு செல்லலாம், 8 பேர் கீழே வரலாம்.

ரோப் கார் சேவை தொடங்கி 2ம் நாளில் மலையில் பலத்த காற்று வீசியதில், காரின் வீல் விலகி, பழுது ஏற்பட்டது. இதையடுத்து, மலை உச்சிக்கு சென்ற நான்கு பெட்டிகளும் எல்லையை அடையாமல் மலை உச்சியிலேயே 3 மணி நேரம் நின்றதால், அதில் பயணம் செய்த 3 பெண்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். தொழில்நுட்ப குழுவினர் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறது, கோளாறுகளை சரி செய்தனர்.

இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் பொறியாளர்கள் கோயில் ரோப்கார் மற்றும் வழித்தடங்களை ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாத வகையில் காற்றின் வேகத்தை பொறுத்துதொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்து மீண்டும் ‘ரோப் கார்’ சேவை தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின்படி அரசு வல்லுனர் குழுக்களை அமைத்து நேரடி ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் விசாரணை திருமகள் தலைமையில் ஆய்வு பணிகள் நடைபெற்றன. அப்போது, அதிகாரிகள் ‘ரோப் காரில்’ அமர்ந்து மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சென்று, ரோப் கார் தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து, ஆய்வு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் சிரமைத்தனர்.காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப் கார் சிறிது நேரம் நின்று, கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கிடைத்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கும் வகையில் ‘தானியங்கி கருவிகள்’ பொருத்தப்பட்டுள்ளன. பின்னர், இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு படி, ‘ரோப் கார்’ சேவை மீண்டும் நேற்று முதல் தொடங்கியது.

இந்த ரோப் காரில் பயணம் செய்ய மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர், சிறியவர் என யாராக இருந்தாலும் நபர் ஒருவருக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்து, தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டதால், மக்கள் அச்சமின்றி தினந்தோறும் மலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மீண்டும் துவங்கப்பட்ட ரோப் கார் சேவையில் குறைந்த அளவே பக்தர்கள் வருகை புரிந்தனர். தொடர்ந்து ப்ரோப் கார் சேவை நடைபெறுமையானால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.