பூந்தமல்லி: வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியுடன் அடிக்கடி போனில் தகராறு ஏற்பட்டு வந்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த அண்ணனூர் ஜோதி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு யோவான் (40) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி நித்யா (38) சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், மனைவி வெளிநாட்டில் இருப்பதால், கணவன் மனைவிக்குள் மொபைல் போனில் அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. இதில், வழக்கம் போல், இரு தினங்களுக்கு முன், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் மாலை, மன உளைச்சலில் இருந்த யோவான், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவதன்று, உறவினர் ஒருவர் யோவானுக்கு போன் செய்தபோது எடுக்கவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. எனவே, ஜன்னலை உடைத்து பார்த்தபோது, யோவான் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து, யோவான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.