Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிகள் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்: பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அரசு விடுமுறை நாட்களில் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் குவிந்து விடுகின்றனர். தற்போது பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையிலும் மற்ற வகுப்புகளுக்கு பெரும்பாலான தேர்வுகள் நிறைவு பெற்றதால் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை முதலே திருச்செந்தூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். இன்று வெள்ளி மற்றும் சனி, ஞாயிறுக்கிழமையில் இங்கு தங்குவதற்காக விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் திருச்செந்தூரில் தங்குவதற்கு இடம் கேட்டு பக்தர்கள் விடுதிகளில் அறைகள் கேட்ட வண்ணம் இருந்தனர். மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கோயில் வாசல் பேருந்து நிலையத்திலும் அரசு பேருந்து சென்று வருவதில் நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது.

அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதை என அனைத்திலுமே நீண்டநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.