Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயிரியல் பூங்கா ஊழியரை முட்டிக்கொன்ற 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு: வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்: சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புள்ளிமான், கடமான், முதலை, குரங்கு, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் என 200க்கும் மேற்பட்ட வன உயிரினங்களை வனத்துறை பராமரித்து வருகிறது. இப்பூங்காவிற்கு சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்களும், ஏற்காட்டிற்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவு வந்து, விலங்குகளை பார்த்துச் செல்கின்றனர். இங்குள்ள வன விலங்குகளை வனத்துறை ஊழியர்கள் மற்றும் தற்காலிக விலங்கு பாதுகாவலர்கள் பராமரிக்கின்றனர். அவர்கள், புள்ளிமான், கடமான் உள்ளிட்ட அனைத்து வன உயிரினங்களுக்கும் உணவு வைக்கின்றனர். இந்தவகையில் கடந்த வாரம், கடமான்கள் இருக்கும் கூண்டிற்குள் உணவு வைக்க சென்ற தமிழ்ச்செல்வன் (25), முருகேசன் (45) சென்றபோது ஒரு கடமான் இருவரையும் முட்டி தள்ளியது.

இதில், தற்காலிக வன ஊழியர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சேலம் மண்டல வனபாதுகாவலர் ராகுல், மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆக்ரோஷமாக வன ஊழியர்களை முட்டி தள்ளிய கடமானை வன விலங்குகளுக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 4 நாட்கள், அதன் செயல்பாட்டை அறிய கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது, தற்காலிக வன ஊழியர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பிற்கு காரணமான ஆண் கடமான் மற்றும் பெரிய கொம்புடைய மற்றொரு கடமான் என 2 கடமான்களை காட்டிற்குள் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சேலம் மண்டல வனத்துறை சார்பில் தமிழ்நாடு தலைமை வன விலங்குகள் பாதுகாவலர் சீனிவாசரெட்டிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது குரும்பப்பட்டி பூங்காவில் 37 கடமான்கள் உள்ளன. அவற்றில் 7 கடமான்கள் ஆண். அதில் இருந்து 2 கடமான்களை காட்டிற்குள் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்காலிக வன ஊழியரை முட்டிய கடமானும், மற்றொரு கடமானும் ஆக்ரோஷமாக இருக்கிறது. அந்த கடமான்களின் கொம்புகள் பெரிய அளவில் இருக்கிறது. அந்த மான்களை தொடர்ந்து பராமரிப்பதில், சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக அவற்றை அடர்ந்த காட்டிற்குள் விட முடிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி முறையாக கிடைக்கப்பெற்றவுடன், 2 கடமான்களையும் காட்டிற்குள் கொண்டு சென்று விடுவோம்,’’ என்றனர்.