Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் ரூ1,055 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

இந்த ஆண்டில் ரூ1,055 கோடியில் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கந்தர்வகோட்டை மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்) கேட்ட கேள்விகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டைச் சாலை 19.6 கிலோமீட்டர் நீளமுள்ள மாவட்ட இதர சாலையாகும். இந்த சாலையை 3.8 கிலோமீட்டர் சாலைப்பகுதியை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித்தடமாக அகலப்படுத்துகிற பணி நடக்கிறது. இதை தொடர்ந்து நடப்பாண்டில் சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின்மூலம் 3 கிலோமீட்டர் சாலை 3.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எஞ்சியிருக்கிற 12.8 கி.மீ சாலையை அடுத்த நிதியாண்டில் அகலப்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தளவில் இதுபோன்ற சாலைகள் எல்லாம் பல ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை வேண்டும், சாலை வேண்டும் என்ற பல மனுக்கள் எல்லாம் கிடப்பில் கிடந்த காரணத்தினால்தான், முதல்வர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற ஒரு அற்புதமான திட்டத்தைக் கொடுத்துள்ளார். அதன்படி உறுப்பினர்கள் அனைவரும் சாலைகள் சம்பந்தப்பட்ட மனுக்களை கொடுக்கலாம். இந்த ஆண்டில் ரூ.1,055 கோடி மதிப்பில் அவைகளையெல்லாம் செயலாக்க இருக்கிறோம். சின்னதுரை: கந்தர்வகோட்டை குன்றாண்டார்கோவில், கரம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதியில் கிராமப் புறத்தில் இருக்கக்கூடிய ஆர்ஆர் சாலை உள்பட சாலைகள் போடப்படாததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விபத்துகள் அதிகரிக்கிறது.

கீரனூரிலிருந்து கந்தர்வகோட்டை செல்லக்கூடிய சாலை 31 கிலோ மீட்டர். ஒடுகம்பட்டி, குன்றாண்டார்கோவில், வத்தனாக்கோட்டை, ராசாப்பட்டி, பாப்புடையான்பட்டி, மின்னாத்தூர், ராமுடையான்பட்டி, அரவம்பட்டி வழியாக பிரதான சாலையில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையை இணைக்கக்கூடிய 31 கிலோ மீட்டர் சாலையை செய்து கொடுத்தால் மிக உதவியாக இருக்கும். அமைச்சர் எ.வ.வேலு: இந்த ஆட்சியில் 40 சதவிகித மூலதனச் செலவை முதல்வர் சாலைக்கு ஒதுக்குகிறார். மூலதனச் செலவு செய்து அரசாங்கத்திற்கு சொத்து சேர்க்க வேண்டும் என்பதில் முன்னுரிமை அளிப்பதன் காரணத்தினால்தான் 10 ஆண்டுகளாக பாராமுகமாக இருந்த சாலைகளை எல்லாம் இப்போது பணிக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோம். மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை, மாநில நெடுஞ்சாலை என்று மூன்று வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றையும் பணிக்காக எடுத்துக்கொண்டிருக்கிறோம். மனுதாரரின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியாண்டில் அதை செயல்படுத்த முயற்சி செய்வேன்.