Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆய்வறிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியது; தாம்பரம்-வேளச்சேரி-கிண்டி வரை புதிதாக மெட்ரோ ரயில் வழித்தடம்: விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தாம்பரம்- வேளச்சேரி- கிண்டி வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான போக்குவரத்து ஆய்வறிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற்கட்டமாக 54.1 கி.மீ தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னையின் புறநகர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 2ம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ₹63,246 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் பல புதிய வழித்தடங்களை கண்டறிந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரை 17 கி.மீ தூரத்திற்கும், மாதவரம் முதல் நல்லூர் வரையில் 10 கி.மீ தூரத்திற்கும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் 43.63 கி.மீ தூரத்திற்கும், கோயம்பேடு முதல் ஆவடி வரையில் 16.07 கி.மீ தூரத்திற்கும், சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கத்திற்கு 23.5 கி.மீ தூரம் வரையும்,

மாதவரம் முதல் விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரை 16 கி.மீ தூரத்திற்கு என மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து மெட்ரோ ரயில் சாத்தியத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. தென் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடமான தாம்பரம், வேளச்சேரி, கிண்டி வரையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான போக்குவரத்து ஆய்வறிக்கை (traffic study) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே, தாம்பரம் முதல் வேளச்சேரி வரையில் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அந்த ஆய்வின் முடிவில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் அந்த வழித்தடத்தை பயன்படுத்தாததால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வேளச்சேரி வழியாக தாம்பரம் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மீண்டும் மறு ஆய்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த சில மாதத்திற்கு முன்பு முடிவு செய்து அதனை கிண்டி வரையில் இணைக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தாம்பரம் வேளச்சேரி வழியாக கிண்டிக்கு வரும் இந்த புதிய வழித்தடத்தை, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா அல்லது சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இணைப்பதா என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஆய்வறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.