Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் காவல் நிலையம்: ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்தார்

வேளச்சேரி: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் துவங்கப்பட்டபோது 20 காவல் நிலையங்கள் இருந்தன. அதன் பிறகு 21வது காவல் நிலையமாக கிளாம்பாக்கம் காவல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கரணை காவல் மாவட்டம், சேலையூர் சரகத்திற்குட்பட்ட பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் புதிதாக துவங்கப்பட்டது. இது தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 22வது காவல்நிலையம்.

இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இது 10.27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்தம் 1,20,000 மக்கள் தொகை கொண்டது. இந்த காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றபிரிவு என தலா ஒரு இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 75 போலீசார் என மொத்தம் 82 பேர் பணி அமர்த்தபட்டுள்ளனர். மேடவாக்கம் காவல் நிலையம் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேடவாக்கம் காவல் நிலையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி புதிய காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில், மேடவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா மற்றும் போலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.