புதுடெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவிக்கு 3 ஆண்டு தேர்வு எழுத தடை விதித்து யு.பி.எஸ்.சி அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு போலி ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கெட்கர் என்பவரின் தற்காலிகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர், 2022ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற, தனது அடையாளத்தை மறைத்து, ஓ.பி.சி. ‘நான்-கிரீமி லேயர்’ மற்றும் மாற்றுத்திறனாளி எனப் போலியான சான்றிதழ்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவரது தந்தை தேர்தலில் போட்டியிட்டபோது ₹40 கோடி சொத்துக் கணக்கு காட்டியது தெரியவந்த நிலையில், பூஜா தனது குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சம் எனத் தவறான தகவல் கொடுத்தது அம்பலமானது. இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, தற்போது மற்றுமொரு அதிரடி நடவடிக்கையை யு.பி.எஸ்.சி எடுத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு ஒன்றின்போது, மாணவி ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு அறையில் அவரிடமிருந்து குற்றச்சாட்டுக்குரிய சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தேர்வு விதிகளை மீறிய செயல் என்பதால், அவரது இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பத்தை ரத்து செய்து யு.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த மாணவி அடுத்த 3 ஆண்டுகளுக்கு யு.பி.எஸ்.சி. நடத்தும் எந்தவொரு தேர்வையும் எழுதத் தடை விதித்தும் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து எ.பி.எஸ்.சி. தலைவர் அஜய் குமார் கூறுகையில், ‘தகுதி மற்றும் நேர்மையான நடைமுறைக்கு யு.பி.எஸ்.சி சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை தேர்வு ஆணையம் உறுதி செய்கிறது. தேர்வின்போது முறைகேடு அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் எந்தவொரு தேர்வர் மீதும், விதிகளின்படி எதிர்காலத்தில் அவர்கள் தேர்வுகளை எழுதத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.