Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உக்ரைன் போரை நிறுத்தாததால் ரஷ்யாவை சுற்றிவளைத்த 2 அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள்: டிரம்ப் உச்சகட்ட கோபம்

வாஷிங்டன்: ரஷ்யா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 அணு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி நிறுத்த உத்தரவிட்டுள்ளார். உலகில் நடக்கும் எல்லா போரையும் நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். இதுவரை, இந்தியா-பாகிஸ்தான் உட்பட பல போர்களை அவரே நிறுத்தி உலகை அமைதியாக்கி வருவதாக கூறுகிறார். இதற்காக தனக்கு நோபல் விருது தரப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறார்.

உலகில் எல்லா நாடுகளையும் வர்த்தகத்தை காட்டி மிரட்டி வைக்க முடிந்த டிரம்பால், ரஷ்யாவை மட்டும் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியாக, உக்ரைன் போரை நிறுத்தாத ரஷ்யாவுக்கு 50 நாள் கெடு விதித்துள்ளார். அதற்குள் போரை நிறுத்தாவிட்டால் வரி விதிப்புகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார். மற்ற நாடுகளை போல ரஷ்யாவை வர்த்தகத்தை வைத்து அமெரிக்காவால் பணிய வைக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியா தான். ஏனெனில் ரஷ்யா பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து அமெரிக்காவுக்கு அடிபணியும் என எதிர்பார்த்தது.

ஆனால் அதை கைகூட விடாமல் செய்த நாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கது. நடப்பு 2025ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் - செப்டம்பர் 2024), இந்தியா சுமார் 47.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ரூ.4,40,295 கோடி மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்தியாவின் ராணுவத்திற்கு தேவையான பல ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்தே வாங்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவும், இந்தியாவும் செத்த பொருளாதாரம் என டிரம்ப் விமர்சித்தார். இதற்கு ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெத்வதேவ் கண்டனம் தெரிவிக்க வார்த்தை மோதல் ஆரம்பித்தது. ரஷ்யா வலிமை மிக்க சக்தி என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டுமென மெத்வதேவ் கூறியதுடன் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். தனது டெலிகிராம் பக்கத்தில், பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட ‘டெட் ஹேண்ட்’ என்றழைக்கப்படும் தானியங்கி அணு ஆயுத பதிலடி அமைப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

மெத்வதேவின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ராணுவ ரீதியிலான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ரஷ்யாவின் முட்டாள்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் - அமெரிக்க அதிபர் இடையிலான வார்த்தைப் போர், தற்போது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ராணுவ மோதலாக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இந்திய அதிகாரிகள் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படவில்லை. இதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எப்போதும் போல் நேரம், விலை நிலவரம், தேவை ஆகியவற்றின் அடிப்படையில் கச்சா எண்ணெய் வாங்கப்படும். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால ஒப்பந்தம் உள்ளது. அதை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது சட்டப்பூர்வமானது’’ என்றனர்.

யார் பலசாலி?

அமெரிக்கா, ரஷ்யா இரண்டுமே உலகின் அதிசக்தி வாய்ந்த ராணுவங்கள் என்றாலும், நீர்மூழ்கிக் கப்பல்களை பொறுத்த வரையில் சமபலத்துடன் உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ், சீவோல்ப் வர்ஜீனியா, ஓஹியோ என 4 வகையான 71 நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டுள்ளது. இவற்றில் 53 கப்பல்கள் அணு ஆயுத ஆதரவு கப்பல்கள். நீண்ட தூர இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வசதி கொண்டவை 14 நீர்மூழ்கிக் கப்பல்கள். ரஷ்யா போரி, டெல்டா-4 ஆகிய 2 வகையான 66 நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது. 14 கப்பல்கள் அணு ஆயுத கப்பல்களாகும்.