Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்: 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மணல் பரப்பில் குவிந்துள்ள உடைந்த சிலைகளை அகற்றும் பணி, மாநகராட்சி சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்து, கடந்த 11, 14, 15 ஆகிய தேதிகளில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, காசிமேடு ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதன்படி, கடந்த 11ம் தேதி சென்னையில் சிறிய அளவிலான சிலைகள் கரைக்கப்பட்டன.

அதை தொடர்ந்து, கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் சிலைகள் கரைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பட்டினப்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், சாலையில் இருந்து கடல் அருகில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல டிராலி, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கரைப்பு நிகழ்ச்சிக்காக மொத்தம் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூருக்கு கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1,524 விநாயகர் சிலைகளில் 1,277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 591 சிலைகளில் 405 சிலைகளும், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 366 விநாயகர் சிலைகளில் 196 சிலைகளும் என மொத்தம் 1,878 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

இதன் காரணமாக, கடற்கரை பகுதியில் குப்பை கழிவுகள் குவிந்து காணப்பட்டது. நேற்று அதிகாலை முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட கடற்கரையிலும் ஏராளமான குப்பை கழிவுகள் கடற்கரையில் காணப்பட்டது. அதேபோல் கரையாமல் சிதலமடைந்த விநாயகர் சிலைகள், மரக்கட்டைகள், இரும்பு உலோகங்கள் ஆகியவற்றையும் தூய்மை பணியாளர்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்புக்காக அமைத்த கண்காணிப்பு கோபுரங்களையும் அகற்றி வருகின்றனர்.