Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராசிகளின் ராஜ்யங்கள் மிதுனம்

மிதுனம் என்றால் இரட்டையர் என்று பொருள். காலபுருஷனுக்கு மூன்றாம் பாவகமாக மிதுன ராசி வருகிறது. இந்த ராசியை முயற்சி ஸ்தானம் என்று சொல்கிறோம்.காற்று (வாயு) ராசியாக வருகிறது. இரட்டைத் தன்மை உடையதாகவும் உள்ளது. சிவ பெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயு ஸ்தலத்தை மிதுனம் குறிக்கிறது. ஆகவே, வாயு லிங்கமான காளஹஸ்தீஸ்வரக் கோயில் இந்த ராசிக்குள் உள்ளது. காரணம் திருவாதிரை ராகுவின் நட்சத்திரமாக அமர்ந்து சர்ப்ப சாந்தியை செய்து தரும் ஈசன் உள்ளார். மூன்றாம் பாவகம் தகவல் தொடர்பை குறிக்கிறது. அதற்கு ஏற்றாற் போலவே இந்த ராசியின் அதிபதியாக புதன் வருகிறார். இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சம் பெறுவதும் இல்லை; நீசம் பெறுவதும் இல்லை; ராசியின் சிறப்பாகும்.நடுநிலைத் தன்மையோடு உள்ள பாவகம் என்றே இந்த ராசி குறிப்பிடலாம். தூது செல்லும் ராசி எனலாம். என்ன தூது? சமரச தூது, காதல் தூது, களவுத் தூது என்றும் சொல்லலாம்.

மிதுனத்தின் சிறப்பு...

லத்தீன் மொழியில் மிதுனத்தை ஜெமினி என்று அழைக்கிறோம். ஜெமினி என்றால் இரட்டையர்கள் என்று பொருள். புதன் இரட்டைத்தன்மை உள்ள கிரகம். இந்த இரட்டைதன்மையைத்தான் அலிதன்மை என சொல்கிறார்கள். அலிதன்மை என்றால் சமாதனமும் உண்டு; போரும் உண்டு என பொருள் கொள்ளலாம். வாயு ராசிக்கு உருவமில்லை ஆனால், மிக்க உணர்வுத் தன்மைைய கொடுக்கக்கூடியது. நினைக்கின்ற எண்ணத்தை காற்றில் கலந்து மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விஷயத்தை இந்த ராசியே செய்கின்றது. சமநிலைத் தன்மையை இந்த ராசி பெற்றுள்ளது.இரட்டையின் மகத்துவம் பாதரசமாகும். இது திரவமாக? அல்லது திடமா? என்ற முடிவு செய்ய முடியாத ஒரு திரவ உருவம் கொண்ட உலோகம்.குருவானவர் சூரியனோடு வாயு ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குருவாயூரப்பனாக காட்சிதருகிறார். அதுவே குருவாயூரப்பனின் தனிச்சிறப்பாகும். தமிழில் இரட்டைக் கிளவி என்ற வார்த்தை உள்ளது. அதுவும் இரட்டைத் தன்மை போலத் தோன்றினாலும் ஒரு பொருளைத் தருகிறது. இரட்டைக்கிளவியிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு என்னவென்றால் சட சட, மட மட என்று சொன்னாலும் அது வாயுவை அதாவது காற்றை பற்றிச் சொல்கிறது என்பதே. இரட்டைக் கிளவியின் காரகத்தை கொண்டுள்ள ராசி.

மிதுனத்தின் புராணம்...

கிரேக்க இதிகாசத்தில் உள்ள ஜெமினி ராசியின் புராணமாகும். ஏஸ்பார்டா நகரத்தின் இளவரசியான லிடாவிற்கு இரட்டை குழந்தைகள் ஒருவர் பெயர் காஸ்டர் மற்றொருவர் பெயர் போலக்ஸ். இவர்களுக்கு ஒரே தாயாக ஏஸ்பார்டா இருந்தாலும் இரண்டு தந்தையாகச் சொல்லப்படுகிறது. இருவரும் போர்வீரர்களாக இருந்துள்ளனர். காஸ்டர் குதிரை வீரனாகவும் போலக்ஸ் குத்துசண்டை வீரனாகவும் உள்ளனர். ஒரு போரில் காஸ்டர் மரணமடைகிறார். இதை கேட்ட போலக்ஸ் மிகவும் வருத்தத்தில் தனது உயிரையும் போக்கிக் கொள்ள வேண்டும். தனது சகோதரன் இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்ற சூழ்நிலையில். தங்களின் கடவுளான ஸீயூஸிடம் வேண்டுதல் வைக்கிறார். அவர்களின் அன்பை பாராட்டி ஸீயூஸ் இரட்டை நட்சத்திரமாக வானில் மிளிரச் செய்தார் என்பதே புராணம். இவர்களே ஜெமினி ராசியின் சகோதரர்கள் என கிரேக்க புராண ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.நமது புராணத்தில் அருந்ததி நட்சத்திரம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தை இரட்டை நட்சத்திரம் என்று சொல்கிறார்கள்.

அருந்ததி என்ற கற்புக்கரசியான இவள் வசிஸ்டருடன் இணைந்து அறம், தவம், சிருஷ்டி ஆகியவற்றை செய்து பரிபூரணத்துடன் வாழ்ந்த தம்பதிகளாவர். இந்த அருந்ததி சென்ற பிறவியில் பிரம்மாவின் மகளாக பிறந்தார். தியாகத்திற்காக பிறந்து கணவனுடன் தியாக வாழ்வை மேற்கொண்டாள். எனினும், தர்மபத்தனியான இவள் புனிதமாக கருதப்பட்டாள். பின்னாளில் ஆசீர்வதிக்கப்பட்டு இரட்டை நட்சத்திரமாக வானில் அருந்ததி, வசிஸ்டராக மிளிர்கிறார்கள். இவர்களே இன்று வானியல் ஆய்வாளர்களால் அல்கார், மிஸார் என்ற நட்சத்திரங்களாக சொல்கின்றனர். நாம் திருமணத்தின்போது அம்மி மிதித்து இவர்களைப் பாரத்துதான் ஆசி பெறுகிறோம். இந்த நட்சத்திரமானது மிதுனத்திற்குள்தான் இருக்கின்றன என்பது சிறப்பே.திருப்பதியில் உள்ள பெருமாளை சிலர் முருகனாக பாவித்து வழிபடுவது உண்டு. அதன் காரணமும் இரட்டைத் தன்மை உடைய ராசியில் மிருகசீரிட நட்சத்திரம் இருப்பதால்தான். இயற்கை நமக்கு எவ்வாறு அணுகிரகித்துள்ளதோ அவற்றை அவ்வாறே உணர்வது சாலச்சிறந்தது. எவ்வாறு நினைத்து வழிபட்டாலும் பிரம்மம் நமக்குள் ஆசீர்வதிக்கும்.

மிதுனத்திற்கான இடங்களும் பெயர்களும்...

மிதுனத்திற்கான இடங்கள் அனைத்தும் இரட்டைத்தன்மை கொண்டவை. இரட்டைக்கோபுரம், ெரட்டை விநாயகர், இரட்டைக்காப்பியங்கள், இரட்டை குழந்தைகள், வங்கிகள் இருக்கக்கூடிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிக் கூடங்கள், மார்க்கெட், தரகர்கள் அதிகம் கூடும் இடம், ஷேர் மார்க்கெட், தொலைத்தொடர்புடைய இடங்கள், ஜோதிட நிலையம், பெருமாள் கோயில்கள்... ஐந்து என்ற எண் (5) அதிகமாக புழங்கும் இடங்கள். இன்றைய நாளில் வாட்ஸ் ஆப் என்பதுபுதனுடைய தொடர்பு உள்ளது.யோகன், பெருமாள், கிருஷ்ணன், வேணு, ஷ்யாம், நாராயணன், நந்தன், ரேவதி, வித்யா, கேசவன், ஸ்ருதி, வேணி, விவேகா, விநோதா, துவைதா, ஜாமினி, பச்சை வண்ணன், பச்சையம்மாள்...

மிதுனத்திற்கான பரிகாரம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொலைவில்லி மங்கலம் பகுதியில் அமைந்துள்ள இரட்டைத்திருப்பதி கோயில் உள்ளது. ராகு தலமான மூலவர் தேவப்பிரான் கிழக்கு நோக்கி அருள் செய்கிறார். கேது ஸ்தலமான அரவிந்தலோசனார்மேற்கு நோக்கி அருள் செய்கிறார்.துளசி மாலை கொடுத்து பச்சை ப்பயறு கொண்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடுவது இன்னும் சிறப்பாகும். எங்கெல்லாம் இரட்டைத்தெய்வங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் மிதுனத்தின் தொடர்பு வரும். அங்கு வழிபடலாம்.திருவாதிரை அன்று திருப்பதி சென்று வழிபடுவதும் சிறப்பான பலன்களை நமக்கு அருளச் செய்யும். காளஹஸ்திஸ்வரர் தரிசனம் செய்வதும் சிறப்பான நற்பலன்களை அளிக்கும்.