Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்ன சொல்லுது உங்க ராசி: மிதுன ராசி பெண் புத்திசாலி, யதார்த்தவாதி

முனைவர் செ.ராஜேஸ்வரி

பொதுவாக மிதுன ராசி பெண்ணின் மூளையில் ஏராளமான அறிவு சார்ந்த விஷயங்கள் நிரம்பி இருக்கும். விசுவாசமாக இருப்பார். ஏமாற்றும் குணம் கிடையாது. சுதந்திரமாக இருக்க விரும்புவார். அறிவாளிகளுடன் இருக்க விரும்புவார். அவர்களின் பேச்சை கருத்து விளக்கத்தைக் கேட்டு ரசிப்பார். [டிவியில் பட்டிமன்றமும் செய்தி சேனலும் டாக் ஷோவும் இவர்களின் ஃபேரைட்], பேசி மயக்குவதை ஒரு விளையாட்டாகச் செய்வார். அதில் சீரியஸ் லவ் எல்லாம் இருக்காது. எப்போதும் நண்பர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பார். முடிந்த வரை வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்வார்.

குடும்பத்திலும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு தன்னுடைய பங்கையும் பணியையும் சிறப்பாகச் செய்வார். வெடுக் தொடுக் என்று பேச மாட்டார். கவுன்சலிங் செய்வதில் கெட்டிக்காரர்.. குடும்ப சச்சரவுகளைப் பேசித் தீர்த்து வைப்பார். சுறுசுறுப்பாக இருப்பார். ஏதேனும் வேலை செய்துகொண்டோ படித்துக்கொண்டோதான் இருப்பார். அடுத்தவருக்கு வேலை பார்க்க மாட்டார்; சுயநலவாதி; தனக்கு ஆதாயம் இல்லாத எந்த வேலையையும் யாருக்காகவும் செய்யமாட்டார்.

இவர் இலட்சியவாதியோ ஊழியம் செய்பவரோ கிடையாது. படிப்போ வேலையோ, காதலோ, கல்யாணமோ எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார். காடுமேடெல்லாம் சுற்ற ஆசைப்படுவார். அட்வென்ச்சர் விரும்பி. பார்க்க ஒல்லியாக இருப்பார். ஆனால் சிரித்த முகத்துடன் மலை ஏறுவார்; ஸ்கூப் டிவிங் அடிப்பார். மராத்தான் ஓடுவார். விளையாட்டு வீராங்கனை கிடையாது. புதியவற்றைச் செய்வதில் ஆர்வமும் மனோ தைரியமும் பிரச்னை வந்தால் சமாளிக்கும் அறிவுக் கூர்மையும் உடையவர். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மிதுன ராசிப் பெண் அவசியம். அவர் பேச்சைக் கேட்டு நடப்பது அந்த வீட்டினருக்கு நல்லது.

இரட்டைப் பண்பு

மிதுன ராசிக்காரருக்கு ஆணுக்குரிய குணமும் பெண்ணுக்குரிய குணமும் சேர்ந்து இருக்கும். துணிச்சலாகவும் இருப்பார் நளினமாகவும் இருப்பார். உடல்வலிமை மனவலிமை இரண்டும் இருக்கும்; ஆனால் இவை இருப்பது போல காட்டிக்கொள்ள மாட்டார். கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்குவார் கர்நாடக இசைப் பாடல்களும் பாடுவார். ஒரு இடத்தில் பேன்ட் ஷர்ட் என்று வருவார் மறு இடத்துக்குப் பாவாடை தாவணியுடன் வருவார்.

இரண்டு இடங்களிலும் இடத்துக்கேற்றபடி தனது பேச்சு சிரிப்பு ஆகியவற்றை தகவமைத்துக் கொள்வார். அரசியலும் பேசுவார் ஆன்மிகமும் பேசுவார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிலேடையாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேச வல்லவர். இவரது கண்கள் அழகாக சிரிக்கும். இதழ்க் கடையோரத்தில் ஒரு புன்னகையை பதுக்கி வைத்திருப்பார். அடிக்கடி அவரது உதடுகளில் ஒரு ரகசியப் புன்னகை ஜொலிப்பதைக் காணலாம். நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். அவ்வப்போது ஒரு ஏளனப் புன்னகை தெறிக்கும். இவரது கோபத்தையும் வெறுப்பையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சகித்துக்கொண்டு சாந்த சொரூபியாக வலம் வருவார்.

மனநிலை

மிதுன ராசிப் பெண்கள் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை. பொறுமையாக நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்ல முடிவு எடுப்பது பழக்கம். முடிவின் விளைவு விபரீதமானால் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் தயங்குவதில்லை. மாற்றங்கள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மாற்றம் பயன் அளிக்குமா இல்லையா என்பது பற்றி மட்டுமே சிந்திப்பர்.

புதுமை நாட்டம்

மிதுன ராசி பெண்கள் பலதுறை வல்லுனர்கள். பன்மொழி வித்தகர்; மல்ட்டி டாஸ்க் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்களில் சேர்ந்து படிப்பார்கள். ஒரே சமயம் இரண்டு மூன்று வருமானத்துக்கு வழி தேடிக் கொள்வர். பல இடங்களில் பார்ட்டைம் வேலை பார்த்து நல்ல வழியில் பணம் சம்பாதித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கண்ணியமாக வாழ்வதுண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் செய்வதில்லை.

கலா ரசிகை

புதன் ராசியினர் நல்ல சங்கீத ரசிகை. ஓவியங்கள் மற்றும் படங்களை ரசித்து மகிழ்வர். நுண் கலைகளின் ரசிகை. ஆட்டங்களை விட பாடல்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர். மிதுன ராசிப் பெண் தன்னை இளையராஜா ரசிகை, ஜேசுதாஸ் ரசிகை. பி பி ஸ்ரீனிவாஸ் ரசிகை என்று வரையறை செய்து கொள்வார். தையல், பூ வேலைப்பாடு போன்றவற்றில் வல்லவர். பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சமையல் செய்யும் போது பாடல்களைக் கேட்டு ரசிப்பார். ஆடாமல் அசங்காமல் பாட்டு கேட்பார். சிலரைப் போல ஆட மாட்டார்கள். அமைதியாக ரசிப்பார். இவர்களுக்கு ஆயிரம் பாடல்களாவது தெரிந்திருக்கும். ஆனால் இவர்களுக்குத் தெரியும் என்பது யாருக்கும் தெரியாது. அலட்டிக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள்.

மொழி விற்பன்னர்

பல் மொழி கற்பதில் ஆர்வமும் திறமையும் உடையவர். கண்ணால் பார்த்தால் கையால் செய்துவிடும் கெட்டிக்காரர். எந்த மொழிப் படத்தையும் பார்த்துப் புரிந்து கொள்வர். மொழி ஒரு வலிமையான வேலைக்காரனாக இவர்களிடம் செயல்படும். இவர்கள் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது கிடையாது. முடியாது, பிடிக்காது என்று இவர்கள் ஒற்றை சொல்லில் உறுதியாக தமது கருத்தை எடுத்துரைப்பர், அதுதான் final ஜட்ஜ்மென்ட். சத்தம் போட்டு பேசி ஆர்ப்பாட்டம் செய்வது கிடையாது. விவரம் போதாத கணவன்மார் அமைந்தால் இவர்களும் தமது அறிவை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல குடும்பம் நடத்துவார்.

கதை சொல்லி

மிதுன ராசிக்காரப் பெண் பத்திரிகையாளராக கதாசிரியராக வர வாய்ப்புண்டு. சின்ன விஷயத்தைக் கூட ஊதி பெரிதாக்கி விடுவார். ஒன் லைன் ஸ்டோரி கிடைத்தால் போதும் சீரியலே எழுதிவிடுவர். இவர்களை சுற்றி ஒரு கூட்டம் கதை கேட்டு ரசிப்பதற்காக சுற்றிக்கொண்டே இருக்கும். சிரிக்காமல் கதை சொல்லி மற்றவர்கள் வயிறு புண்ணாகும் அளவுக்கு சிரிக்க வைத்து விடுவார். கற்பனை குதிரையைத் தட்டி விட்டு சுகம் காண்பதில் ஆர்வமுடையவர். கட்டுக் கதைகளை உருவாக்குவார். கற்பனையில் புதிய புதிய கதாபாத்திரங்களை உருவாக்குவார். சினிமா துறையில் சிலர் இயக்குனராகவும் வரக்கூடும். சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர், பேராசிரியர், வக்கீல் போன்ற வாய்ப் பேச்சுக்கு முக்கியத்துவம் உள்ள தொழிலில் வெற்றி காணலாம்.

பொறுப்புணர்ச்சி மிக்கவர்

மிதுன ராசி பெண்கள் அதிகமாக அலட்டாவிட்டாலும் பொறுப்பாக நடந்து கொள்வர். சிறந்த இல்லத்தரசியாக விளங்குவர். அதே சமயம் நல்ல நிர்வாகியாக, டீச்சராக, கணக்காளராக, பாடகியாக விளங்குவர். மிதுன ராசி பெண் ஒருவர் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய மாட்டார். அடுத்தவர் வேலையை பரிதாபப்பட்டு செய்ய மாட்டார். தனது வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார். பிறர் வேலைகளில் தலையிட்டு தொந்தரவு செய்ய மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். கரெக்டாக ஆபீஸ் முடிந்ததும் கிளம்பி விடுவார். கொடுத்த சம்பளத்துக்கு சரியாக அளவாக வேலை பார்ப்பார். பணியிடத்தில் குறைத்து வேலை செய்வதோ வேலை நேரங்களில் கதை பேசுவதோ, புலம்புவதோ, வதந்தி கிளப்புவதோ இவரிடம் கிடையாது.

நிறைவு

மொத்தத்தில் மிதுன ராசி பெண் பலதுறை அறிவு பெற்றவர்; எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் இருப்பர். அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்; புன்னகை தவழும் முகம் உடையவர்; பொறுப்புணர்ச்சி மிக்கவர்; குடும்பத்துக்கும் பணியிடத்துக்கும் ஏற்றவர்.