இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் ஜனனம் எடுக்கின்றன. ஜனனம் எடுப்பதற்கு தாயும் வேண்டும்; தந்தையும் வேண்டும். இந்தத் தாயும் தந்தையும் சந்திரனும் சூரியனும். தாய் தந்தையால் ஒருவன் இந்த உலகத்தில் ஜெனித்த பின்னால்தான், அவனுக்கு மற்ற மற்ற விஷயங்கள் நடக்கின்றன. அந்த மற்ற மற்ற விஷயங்களுக்குத் தான் மற்ற கிரகங்கள் வேண்டும். ஆனால், உயிர் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் இந்த இரண்டு கிரகங்கள்தான் வேண்டும். எனவே ஒரு ஜாதகத்தின் ஆதாரமான இரண்டு கிரகங்கள் சூரியனும் சந்திரனும்.அதனால்தான் சூரியனை தந்தையின் பிரதிநிதியாகவும், சந்திரனை தாயின் பிரதிநிதியாகவும் சொன்னார்கள். குழந்தை துவக்கத்தில் இந்த இருவரின் பராமரிப்பில்தான் வளர்கிறது. எனவே தந்தையாகிய சூரியனும் தாயாகிய சந்திரனும் ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சூரியன், ஒரு ஜாதகத்தில் சிறப்பாக அமைந்திருந்தால் அந்த ஜாதகர் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து விடுவார் என்பதைப் பார்த்தோம்.
இப்பொழுது சந்திரனை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக அமைந்துவிட்டால், அவர்கள் எந்தப் பிரச்னை இருந்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஒரு லக்னத்தை நிர்ணயிப்பது சூரியனின் கதி. ராசியை நிர்ணயிப்பது சந்திரனின் கதி. திருவள்ளுவர் ஊழைப் பற்றி மிக அழகாகச் சொல்லி இருக்கின்றார். ஊழை விட வலிமையானது வேறு ஒன்றும் இல்லை. என்னதான் முயற்சி செய்தாலும்
ஊழ்வினை முன்னால் வந்து நிற்கும்.
ஊழிற் பெருவலி யாவுள; மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
(அதிகாரம்: ஊழ் குறள் எண்:380)
ஊழ் - அதாவது வினைகளைவிட வலிமையானது வேறொன்றும் இல்லை. இந்த வினைகளை எதிர்த்து ஏதாவது செய்தாலும், அதையும் எதிர்த்து, வினைகள் முன்னே வந்து தன்னுடைய வேலையைக் காட்டிவிடும். இதுதான் இந்தக் குறளுக்குப் பொருள். என்னதான் முயன்றாலும் ஒருவனுக்கு என்ன கொடுப்பினை, என்ன விதிக்கப்பட்டதோ, அதுதான் கிடைக்கும். அதுதான் ஜென்ம ஜாதகம். பிறக்கும் போது வாங்கிவந்த வரம். “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி இதற்குப் பொருந்தும். ஜாதகத்தில் கொடுப்பினை இருந்தால்தான் வாழ்க்கையில்அனுபவிக்க முடியும் என்பது இதன் பொருள். இதைத் தீர்மானிப்பதுதான் லக்னம். ஆனால், ஒரு ஜாதகத்தில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. படிப்பு, திருமணம், குழந்தைகள், வீடு கட்டுதல், வாகனங்களை வாங்குதல், கௌரவம் பெறுதல், பதவி பெறுதல், என எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
அவைகளெல்லாம் எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பதுதான் சந்திரன். இன்னதுதான் நடக்கும் என்பதை ஜாதகம் சொன்னாலும், அது எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பதுசந்திரன். விதியைத் தீர்மானிப்பது ஜாதகம். அது எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது சந்திரன். இதை இன்னொரு விதமாக சொல்லலாம். ஒருவனுக்கு சீட்டாட்டத்தில் விழுந்த சீட்டுகள் அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அதுதான் ஜாதகக் கட்டம். ஆனால், அதை வைத்துக்கொண்டு அவன் எப்படி ஆடுகிறான் என்பது அவனுடைய மூளையைப் பொறுத்தது. அதுதான் சந்திரன். எனவேதான் சந்திரன் ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்து விட்டால், அந்த ஜாதகம் என்னதான் பிறப்பில் கஷ்டப்பட்டாலும், மற்றவர்களால் கஷ்டப்படுத்தப் பட்டாலும்,எல்லாவற்றையும் கடந்து தன்னை நிறுத்திக் கொள்வான். எப்படியாவது வாழ்ந்துவிடுவான். அதற்கான புத்தி அவர்களிடத்திலே இருக்கும். அதனால்தான், ஊழைவிட வலிமையானது இல்லை என்று சொன்ன அதே திருவள்ளுவர்,‘‘முயற்சி திருவினையாக்கும்’’ என்றார்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்
(அதிகாரம்: ஆள்வினையுடைமை குறள் எண்:620)
சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்வார். இந்த சோர்வின்மைதான் சந்திரபலம். ஒருவனுக்கு ஜாதகமும் சரியில்லை, சந்திரனும் சரியில்லை. அதாவது லக்கினமும் சரியில்லை, ராசியும் சரியில்லை என்று சொன்னால், சுயபுத்தியும் இல்லை, சொல் பேச்சும் கேட்க மாட்டான் என்று பொருள். தானாக வருகின்ற கஷ்டம் பாதி. இவனாகப் போய் வாங்கி வருகின்ற கஷ்டம் மீதி என்று வாழ்க்கை செல்லும். அப்படிப்பட்ட ஜாதகத்தில், லக்னமும் கெட்டுக் கிடக்கும், சந்திரனும் கெட்டுக் கிடக்கும். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம், சந்திரன் வலிமையைப் புரிந்து கொள்ள வேண்டும். சந்திரனை (மதியை) எப்படி வாழ்க்கையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த தசாபுத்தி நடந்தாலும், அந்த தசாநாதனையும் புத்திநாதனையும் நகர்த்துவது சந்திரன்தான். எனவேதான், ஜாதகத்தில் ராசிக்கு முக்கியத்துவம் வைத்தார்கள். கோள்சாரத்தை லக்ன ரீதியாகவும்பார்க்கலாம் என்றாலும், ராசியை வைத்துத்தான்எல்லோரும் பார்ப்பார்கள்.
காரணம், லக்னம் என்பது கொடுப்பினை. ராசி என்பது நிகழ்வினை. நிகழ்வினை சொல்வது சந்திரன் என்பதால்தான், ராசியை அடிப்படையாக வைத்துக்கொண்டு தசாபுத்தி, கோள்சாரங்களைப் பார்த்து, எந்த நிகழ்வு எப்போது எப்படி நடக்கும் என்பதைத் தீர்மானம் செய்தார்கள். சந்திரனுக்கு மனோகாரகன் என்று பெயர். சந்திரன் உறுதி அடைதலையே வலிமை அடைதல் என்று சொன்னார்கள். சந்திரவலிமை என்பது மனம் வலிமை அடைதல் என்று பொருள். யாருக்கெல்லாம் மனம் சஞ்சலம் இல்லாமல், வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் எது வந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். கலங்க மாட்டார்கள். தெளிவாக இருப்பார்கள். அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்கும் திறன் இருக்கும். ஜாதகப்படி கஷ்டம் வந்தாலும், அதை எப்படிச் சமாளிப்பது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அந்தக் கஷ்டத்தையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்டு முன்னேறும் வழியைப் பார்ப்பார்கள். எந்த ஜாதகத்திலும் எல்லா கிரகங்களும் கெட்டதும் செய்வதில்லை. எல்லா கிரகங்களும் நல்லதும் செய்வதில்லை.
எனவே, எப்பொழுது நல்லது நடக்கும் என்பதை சந்திரன் மூலம் தெரிந்து கொண்டு, நல்லது நடக்கும்போது நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து நமக்கு வேண்டியதைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். கெட்டது நடக்கும்பொழுது, அந்த பலத்தை வைத்துச் சமாளிக்க வேண்டும். உதாரணமாக, குறிப்பிட்ட சில புத்திகள், எப்பேர்ப்பட்ட தரித்திர ஜாதகனுக்கும் நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். அப்பொழுது அவன் முயற்சி செய்து நன்றாகச் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அவனுக்கு இறக்கமான நேரம் வந்துவிடும். அப்பொழுது ஏற்கனவே சம்பாதித்ததை வைத்துக்கொண்டு சமாளித்துவிடலாம். இதற்கு உதவுவதுதான் ஜாதகம். ஜாதகத்தில் இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு அடிப்படையாக உள்ளதுதான் சந்திரன்.“லக்னம் கெட்டால் ராசியைப் பார்” என்று சொல்வதற்கும் காரணம் இதுதான். இதை ஒரு உதாரண ஜாதகத்தோடு பார்த்தால் நமக்கு நன்கு விளங்கும்.