Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

யோகங்களுக்கான யோகம் கர்த்தாரி யோகம்

ஜாதகர் ஒருவர், ஒரு ஜோதிடரை கண்டு, ‘சார் எனக்கு இந்த யோகம் இருக்கு. அந்த வகையான யோகம் இருக்கு’ எனச் சொல்லி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுக்கிறார். ஜோதிடரும் பதில் ஏதும் சொல்லாமல், ‘ஆமாம், அந்த யோகம் இருக்கு... இந்த யோகம் இருக்கு’ எனச் சொல்கிறார். ஜாதகர் உடனே ‘ஏன்? அந்த யோகம் எனக்கு கிடைக்கல’ என கேள்வி கேட்கிறார். ஜோதிடர் சிரித்துக்கொண்டே சொல்கிறார். ‘நீங்கள் யூகித்தது சரிதான். ஆனால், அது செயல்படவில்லை’ எனச் சொல்கிறார். இன்று பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆம், கிரகங்கள் கிரகங்களை செயல்பட வைக்கின்றன. கிரகங்களே கிரகங்களை ஆக்கிரமித்து செயல்படும் தன்மையை கெடுக்கின்றன என்றால், உங்களால் புரிந்துகொள்ள இயலுமா? அப்படித் தடை செய்வதையும், ஒரு யோகம் என்றும், அப்படி ஒரு யோகம் செயல்படுத்துவதையும், ஒரு யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

கர்த்தாரி யோகம் என்பது என்ன?

அது என்ன யோகம்? கர்த்தாரி யோகம் என்று உள்ளது. கர்த்தாரி என்றால், இரண்டிற்கும் நடுவில் உள்ளது என்று பொருள்படும். அதாவது, கத்தரி போன்று உள்ள அமைப்பு என யூகித்துக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட பாவகத்திற்கு இரண்டு புறமும் கிரகங்கள் அமைவது கர்த்தாரி யோகம் என்று சொல்லப்படுகிறது. இடைப்பட்ட நடுவில் உள்ள பாவகமானது இந்த இரண்டு கிரகங்களின் வலிமைகளுக்கும் தன்மைகளுக்கும் தகுந்தாற்போல இயங்குவது என்பதே அந்த அமைப்பாகும்.இந்த கர்த்தாரி யோகம் என்பது சுப-கர்த்தாரி யோகம் என்றும், பாப-கர்த்தாரி யோகம் என்றும், கலவையான கர்த்தாரி யோகம் என்றும் விஸ்தரித்து ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஒரு லாஜிக் ஜோதிடம் சொல்கிறது. அந்த லாஜிக் சரியாக இருப்பதற்கும், விலகி இருப்பதற்கும் மற்றொரு லாஜிக் ஒன்றை ஜோதிடம் ஏராளமான இடங்களில் வைத்துள்ளது. மேலோட்டமாக ஒரு யோகம் அடிப் பகுதி மிகுந்த கடினமான அல்லது மென்மையான அமைப்பை ஜோதிடத்தில் காணும் பொழுது, ஜோதிடம் என்பது ஒரு முடிவிலி என்பதை உணர முடியும்.

கர்த்தாரி யோகத்தின் சிறப்பு நிலைகள் என்ன?

சுப-கர்த்தாரி யோகம் என்பது சுப கிரகங்களான வியாழன், சுக்கிரன், புதன், சந்திரன் (வளர்பிறை) ஆகிய கிரகங்கள் ஒரு பாவகத்திற்கு முன்னும் பின்னும் அமையப்பெற்று, நடுவில் பாவகம் இயக்கப்படுமானால் அது சுப-கர்த்தாரி யோகம் என்று பொருள்படுகிறது.பாப-கர்த்தாரி யோகம் என்பது அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, சந்திரன் (தேய்பிறை) ஆகிய கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட பாவகத்திற்கு முன்னும் பின்னும் அமையப்பெற்று, நடுவில் உள்ள பாவகம் இயக்கப்படுமானால், அது பாப-கர்த்தாரி யோகம் என்று பொருள்படுகிறது. கலப்பு - கர்த்தாரி யோகம் என்பது ஒருபுறம் சுபகிரகங்கள் அமையப்பெற்றும் மறுபுறம் அசுப கிரகங்கள் அமையப்பெற்று, நடுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாவகம் இயங்குமானால் அது கலப்பு - கர்த்தாரி யோகம் என்று பொருள்படுகிறது.

சுப - கர்த்தாரி யோகமானது சுபகிரகங்களால் ஒரு யோகத்தை மிகுந்த வலிமையுள்ளதாகவும் அதனை வளர்ச்சி அடையச் செய்வதாகவும் உள்ளது. சுபகிரகங்கள் வலுப் பெறுமாயின் அங்கு பலன்கள் யாவும் சுபத்தன்மையுடன் அமைவதாக உள்ளது. அதாவது, ஒரு யோகத்தை 100 சதவீதம் வலிமைமிக்கதாக உள்ளது.பாப-கர்த்தாரி யோகம் என்பது சில தன்மைகளில் ஒரு யோகத்தை தடுக்கும் தன்மையுடனும் சில தருணங்களில் மிகவும் வலிமையாக மஹா பாப-கர்த்தாரி யோகம் உள்ளது.

லக்னங்கள் அடிப்படையில் கர்த்தாரி யோகம்

மேஷத்திற்கு 12ஆம் பாவகத்தில் வியாழனும், 2ஆம் பாவகத்தில் சுக்கிரனும் அமைந்தால், சுப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

ரிஷபத்திற்கு 12ஆம் பாவகத்தில் செவ்வாயும், 2ஆம் பாவகத்தில் புதனும் அமைந்தால், கலப்புக் கர்த்தாரி யோகம் அமைகிறது.

மிதுனத்திற்கு 12ஆம் பாவகத்தில் சுக்கிரனும், 2ஆம் பாவகத்தில் சந்திரனும் அமைந்தால், சுப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

கடகத்திற்கு 12ஆம் பாவகத்தில் புதனும், 2ஆம் பாவகத்தில் சூரியனும் அமைந்தால், பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

சிம்மத்திற்கு 12ம் பாவகத்தில் சந்திரனும், 2ஆம் பாவகத்தில் புதனும் அமைந்தால், சுபகர்த்தாரி யோகம் அமைகிறது.

கன்னிக்கு 12ம் பாவகத்தில் சூரியனும், 2ஆம் பாவகத்தில் சுக்கிரனும் அமைந்தால், பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

துலாத்திற்கு 12ம் பாவகத்தில் புதனும், 2ஆம் பாவகத்தில் செவ்வாயும் அமைந்தால், பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

தனுசிற்கு 12ம் பாவகத்தில் செவ்வாயும், 2ம் பாவகத்தில் சனியும் அமைந்தால், மஹா பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

மகரத்திற்கு 12ம் பாவகத்தில் வியாழனும், 2ம் பாவகத்தில் சனியும் அமைந்தால், பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

கும்பத்திற்கு 12ம் பாவகத்தில் சனியும், 2ம் பாவகத்தில் வியாழனும் அமைந்தால், பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

மீனத்திற்கு 12ம் பாவகத்தில் சனியும், 2ம் பாவகத்தில் செவ்வாயும், அமைந்தால் பாப-கர்த்தாரி யோகம் அமைகிறது.

கர்த்தாரி யோகத்திற்கு பரிகாரம் உண்டா?

பாப - கர்த்தாரியாக செயல்படும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் செயல்படும் அமைப்புடன் இருந்தால், அதற்குண்டான கோயில்களுக்கு சென்று வருதல் சிறப்பு தரும். பாப-கர்த்தாரி கிரகங்களால் தடைப்பட்ட கிரகங்களினால் ஏற்படும் யோகங்கள் செயல்பட வாய்ப்புண்டு.