ஸ்ரீ வாஞ்சியத்தில் தீர்த்த வாரியாக ஸ்ரீ வாஞ்சிநாதர் கலந்து கொள்வதற்காக, எம வாகனம் உள்ளது. பார்ப்பதற்கே கம்பீர மீசையுடன் பயமுறுத்துகிற கோலத்தில் எம வாகனம் இருக்கிறது. தீர்த்த வாரிக்காக இதில்தான் ஸ்ரீ வாஞ்சிநாதர் பயணிக்கிறார்.
வித்தியாசமான நவக்கிரகம்
மெரும்புலியூர் தலத்தில் நவகிரக சந்நதியில் நடுவில் உள்ள சூரியனையே எல்லா கிரக உருவங்களும் நோக்கியவாறு காட்சியளிக்கின்றன.
அசையா தீபம்
நாமக்கல் அருகே அமைந்துள்ள மோகனூர் தலத்தின் கருவறையில் உள்ள தீபம் காற்றடித்தாலும் அசையாமலும் அணையாமலும் இருக்கும். இறைவனின் பெயர் அசலதீபேஸ்வரர்.
தவிடு அபிஷேகம்
கேரளத்தில் கொடுங்கனூர் பகவதி கோயிலுள்ள சண்டிகேஸ்வரிக்குத் தவிடு அபிஷேகம் செய்கிறார்கள். காசநோய் உள்ளவர்கள் வேண்டிக் கொண்டு நோய் நீங்கியதும், இவ்விடம் வந்து அபிஷேகம் செய்கிறார்கள்.
செல்வம் அருளும் அட்சயபுரீஸ்வரர்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள விளங்குளம் கிராமத்தில் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. விநாயகர், வள்ளிதேவசேனா சுப்பிர மணியர், ஆனந்த நடராஜர் ஆகிய பரிகார தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில், அட்சய திருதிைய நாளில் சனீஸ்வரன் இங்கு வந்து சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். அபிஷேகம் செய்து வில்வம் சாத்தி வழிபடும் பக்தர்களுக்கு, நிறைந்த செல்வம் கொடுத்து வாழ்வில் வறுமை என்பதே வராமல் காத்து அருள்கிறார், அட்சயபுரீஸ்வரர்.
சீதை எந்தப் பக்கம்?
தனிப்பட்ட ராமர் கோயில்களிலும் சரி, வைணவத் தலங்களில் உள்ள ராமர் சந்நதியிலும் சரி, தனக்கு வலப்புறத்தில் சீதையையும், இடப்புறத்தில் லட்சுமணனையும் கொண்டுதான் ராமர் காட்சியளிப்பார். ஆனால் திருச்சேறை திவ்யதேசத்தில் ராமருக்கு இடப்பக்கத்தில் சீதை இடம் பெற்றிருக்கிறாள்.
பஞ்ச மகா சேத்திரம்
‘பஞ்ச மகா க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற திருத்தலம், ஆழ்வார்திருநகரி. இது ஆதியில் தோன்றிய தலமானதால் ‘ஆதிக்ஷேத்திரம்’ என்றும், மகாவிஷ்ணு வராக ரூபத்தைக் காட்டியதால் ‘வராக க்ஷேத்திரம்’ என்றும், ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் அவதரித்ததால் ‘சேக்ஷ க்ஷேத்திரம்’ எனவும், தாமிரபரணியால் வளமான ஊராதலால், ‘தீர்த்த க்ஷேத்திரம்’ என்றும், நம்மாழ்வார் இங்கே அவதரித்ததன் மகிமையால் ‘பஞ்ச மகா க்ஷேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளே பிரம்மனுக்கு குருவாக வந்து உபதேசித்ததால் ‘திருமுருகூர்’ என்றும் பெயர் பெற்றது.
ஆஞ்சநேயர் கோயிலில் அரசமரம்
ஈரோடு நகரில் அமைந்துள்ள வ.உ.சி. பூங்காவின் பிரதான நுழைவாயிலினுள். வலதுபுறம் மகாவீர ஆஞ்சநேயர், கோயில் கொண்டிருக்கிறார். இரண்டு அடுக்கு கோயில் இது. முதல் தளத்தில் கோயிலும், அலுவலகமும் அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தில் வடக்கு நோக்கி மகாவீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இவர், சுயம்பு மூர்த்தியாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அருள்பாலிக்கிறார். கருவறை மீது இரண்டு நிலை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி நவகிரக விநாயகர் எழுந்தருளியுள்ளார். பூமி மடத்தில், அரச மரத்தடியிலிருந்த விநாயகரை, முதல் தளத்தில் அரசமரத்தண்டு அருகே எழுந்தருளச் செய்துள்ளார்கள். இதற்காக கான்கிரீட் தளத்தில் அரச மரம் மேல் நோக்கி வளர்வதற்காக பெரிய இடைவெளியை அமைத்துள்ளார்கள். கட்டிடத்தின் நடுவே அரசமரம் ஓங்கி வளர்ந்திருப்பது இக்கோயிலின் சிறப்பு. வாழ்வில் அடுக்கடுக்கான துன்பங்களை நீக்கி படிப்
படியான வளர்ச்சியை வழங்குகிறார் இந்த ஆஞ்சநேயர்.


