எது மரியாதை? எதுவரை மரியாதை
சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் இனித்த பேச்சுக்கள் போகப் போக புலம்பலாய் மாறி, ஒருவர் ரத்தத்தை ஒருவர் உறிஞ்ச நல்ல நினைவுகள் மேல் acid தெளிக்கப்படுகிறது. ஏன்?
இரண்டு நாடுகளுக்கு இடையில் LOC (Line of Control) இருப்பது போல் உறவுகளுக்குள், நண்பர்களுக்குள் Line of Respect ஏன் இருப்பதில்லை? கருவை சுமப்பதுபோல் ஏன் நல்ல நண்பர்களை, உறவுகளை நாம் பாதுகாத்துக் கொள்வதில்லை. அன்பு என்பது மதித்தலில் தொடங்குகிறது.குழந்தை பிறந்து இருக்கிறது. ஆனால், ராணியார் பெரும் துக்கத்தில் இருக்கிறார். குழந்தை மூன்று கண்களுடனும், நான்கு கைகளுடனும் பிறந்து இருக்கிறது.
வைத்தியர்களும், ஜோசியர்களும் அரண்மனையில் கூடினர்.அரசி கவலையுடன் அவர்களை பார்த்தபடி இருந்தார்.‘‘அரசியாரே, கவலைப்பட வேண்டாம். இந்தக் குழந்தை சிசுபாலன் உயர்ந்த ஆத்மா. அவனுக்கு பெரும் பாக்கியம் இருக்கிறது. ஒரு அவதார புருஷன் அவனைத் தொடும்பொழுது அவன் சாதாரண நிலைக்குத் திரும்புவான். ஆனால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது,” என்று சொல்லி அந்த ராஜகுரு நிறுத்தினார்.
‘‘ஏன் தயங்குகிறீர்கள்? அரசியார் கவலையுடன் கேட்டார்.‘‘எந்த அவதார புருஷனால் இந்த குழந்தையுடைய அவலட்சணங்கள் மறையுமோ, அவனாலேயே இவனுக்கு மரணமும் உண்டாகும்.”
சில நாட்களில் கிருஷ்ணன் அரண்மனைக்கு வந்தான். அவனுடைய வருகை எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்தது. அத்தையின் மைந்தனை, சிசுபாலனை ஆசையாய் தூக்கிக் கொண்டான். அந்த க்ஷணமே குழந்தையின் அவலட்சணங்கள் மறைந்து போயின.
‘‘கிருஷ்ணா, என்ன செய்தாய் ?’’ ‘‘அத்தை… நான் ஒன்றும் செய்யவில்லை. குழந்தையை ஆசையாக தூக்கிக் கொண்டேன்.”
‘‘எனக்கு ஒரு சத்தியம் செய்து தருவாயா?’’ சிசுபாலனின் தாய் கிருஷ்ணனை பார்த்துக் கேட்டார்.
‘‘அந்த குழந்தையை தூக்கியது குற்றமா? அதற்கு எதுக்கு சத்தியம்?’’
‘‘இல்லையப்பா… இவனுடைய பிறப்பை கணித்த பெரியவர்கள் அவனின் அவலட்சணங்களை போக்குபவனே… அவனின்
மரணத்திற்கு காரணமாவான் என்று கூறினார்கள்”‘‘அத்தை நான் என்ன செய்ய வேண்டும்?’’‘‘அவன் உன்னுடன் வழக்கு தொடுத்தால், சண்டைக்கு வந்தால் கோபப்படாமல் பொறுத்துக் கொள்ள வேண்டும்.”‘‘என்னால் முடிந்த வரை கோபப்படாமல் இருக்கிறேன். ‘‘கிருஷ்ணர் சமாதானமாகச் சொன்னார்.
‘‘அவன் உன்னிடம் எது பேசினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்”அந்தத் தாயின் தவிப்பை பார்த்து கிருஷ்ணரும் மனம் இரங்கினார்.‘‘அவனுடைய நூறு தவறுகளை பொறுத்து கொள்கிறேன்”வாக்கு கொடுத்தார்.‘‘ஒரு நாளைக்கு நூறு தவறுகள்.'' திரும்பவும் சிசுபாலனின் தாய் கேட்கவும், கிருஷ்ணர் ஒத்துக் கொண்டார். அந்த தாய்க்கு தன் மகன் ஒரு நாளைக்கு நூறு தவறுகளை தாண்ட மட்டான் என்று பெரும் நம்பிக்கை இருந்தது. காலங்கள் ஓடியது.
சிசுபாலனுக்கோ கிருஷ்ணனை பார்க்கும்போதெல்லாம் ஏதோ வெறுப்பு பொங்கிப்… பொங்கி வந்தது. கடுமையான வார்த்தைகளை உதிர்த்தபடி இருந்தான். ஆனாலும், ஒரு நாளில் நூறைத் தாண்டவில்லை.கடுமையான வார்த்தைகள் என்பது ஒரு உறவை தகர்க்கும் அணு குண்டுகள். எந்த இடத்தில் மரியாதை குறைகிறதோ அங்கு அன்பிற்கு இடம் இல்லை . அன்று ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பஞ்ச பாண்டவர்களும், அரசர்களும் கூடி இருந்தனர். கிருஷ்ணன் அங்கு நுழைந்த மாத்திரத்தில், ‘‘ஏ மாடு மேய்ப்பவனே…’’ என்று ஆரம்பித்த சிசுபாலன் ஏசிக் கொண்டே போனான்.
மனம் விகாரமானது. கடும் சொற்கள் பேசப் பேச அது பெரும் சுகத்தைத்தரும் சிரங்கு சொறிவதுபோல் இருக்கும். அதுவும் பல பேர் சூழ்ந்திருக்க அகங்காரம் வார்த்தை வளர்க்கும். எளியவனை, எதிர்க்க முடியாதவனை, அவன் முக்கியமாய் மதிப்பாய் வைத்து இருப்பதை கீழே தள்ளத்துடிக்கும். அத்தனையும் சிசுபாலன் செய்தான். ‘‘வார்த்தைகளை விட்டான். நூறு வார்த்தைகளைத் தாண்டியது., கிருஷ்ணனின் சுதர்ஷன சக்ரம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தது. நூறு தாண்டியவுடன் கிளம்பிற்று. சிசுபாலனை வீழ்த்தியது, அவன் அகங்காரத்தை வேரோடு சாய்த்தது.
சில இடங்களில் அன்பைத் தாண்டி சுயமரியாதை பெரிதாகி விடுகிறது.கைகேயியும் தசரதனும் பெரும் காதலில் திளைத்தார்கள். தசரதனின் நான்கு குழந்தைகளையும் கைகேயி உயிராக நினைத்தாள். அதுவும் ராமனிடம் பெரும் வாஞ்சை இருந்தது. எல்லாம் மந்தரையின் விஷமான வார்த்தைகள். அவளைத் தாக்கும் வரை, மந்தரை பெரும் வித்தைக்காரி.
‘‘ராமருக்கு ராஜ்யமாமே சந்தோஷம். ஆனால், கௌசல்யா ராஜமாதா ஆகிவிடுவாள். அவள் வார்த்தைக்கே மதிப்பு உண்டாகும்.”கைகேயி ஆனந்தப்பட்டாள். ‘‘ஆமாம், அதனால் என்ன ராமனுக்கு என் மேல் அன்பு குறையுமோ. இல்லை… என் கணவரின் காதல்தான் குறையுமோ?’’‘‘அன்பு, காதல் எல்லாம் குறையாது. மதிப்பு குறைந்து போகும். பொருள் இல்லை என்றால் மதிப்பு இல்லை. பதவி இல்லை என்றால் மரியாதை இல்லை. மரியாதை போனால் எல்லாம் போயிற்று. யோசித்துக் கொள்.” மந்தரை வந்த வேலையை முடித்தாள்.
அவள் வார்த்தைகள் கைகேயின் அன்பை அசைத்தது.
‘‘மரியாதை போனால் அன்பு போகும்.” தவித்துப் போனாள். தன்னுடைய மரியாதையை தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்தாள். நெற்றிக் குங்குமத்தை அழித்தாள். ஆபரணங்களை கழற்றி வீசினாள். அலங்கோலமாய் இருந்தாள்.தசரதன் கைகேயியின் கோலத்தை பார்த்து அதிர்ச்சியானான். அவள் கேட்ட வரம் அவன் உயிரைக் குடித்தது.உறவுகளை பலப்படுத்துவது மரியாதை. அன்பு மரியாதையில் இருந்து துளிர்க்கும்.மரியாதையான அன்பே நிலைத்து நிற்கும். காதலாகவும், நட்பாகவும் உருவெடுக்கும்.சில இடங்களில் காவியமாகும்.
தொகுப்பு: ரம்யா வாசுதேவன்