‘‘பெண் என்பவள் பெரும் நெருப்பை விட மேலான சக்தி ஆவாள்’’ என்பதை மெய்ப்பித்தவள் ராமனின் சீதை. இல்லறம் என்ற நல்லறத்தை மேன்மையுறச் செய்து கணவனின் மாண்பைக்காத்து நின்றவள். ராமபிரானின் சொல்லறத்தையும், வில்லறத்தையும், இல்லறத்தையும் காத்தவள். காலம் தோறும் இல்லறப் பெண்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவள் சீதா. கடவுளான சீதை மனிதப்பிறவியாக அவதரித்து இயல்பாக பெண்களுக்கு உள்ள இயல்புகளை வெளிப்படுத்தி மேன்மை மிக்க இல்லறப் பெண்ணாகத் திகழ்ந்தவள்.
ராமாயணத்தில் பல்வேறு அறங்கள் சொல்லப்பட்டிருப்பினும் இல்லாளுக்குரிய அறத்தினை மிகச் சரியாக பின்பற்றிய சீதையைக் கம்பன் காட்டுகிறார். அயோத்தியில் இருந்து காடு நோக்கிச் சென்ற ராமனோடு தானும் வருவேன் என்று கூறி, கணவனோடு செல்வதே மனைவிக்கு மேன்மை தரும் என்பதை உணர்ந்து ராமனோடு புறப்படுகிறாள். மனைவி என்பவள் கணவனின் இன்பத்தில் மட்டுமல்லாது அவன் துன்பத்திலும் பங்கு கொள்வதே சாலச் சிறந்தது என்பதை உணர்த்தியவள். ‘‘நான் செல்வது கல்லும் முள்ளும் நிறைந்த, கரடு முரடான காட்டுப்பகுதி, ஆதலால் நீ வர இயலாது’’ என்று கூறிய இராமனிடம்,
‘பரிவு இகந்த மனத்தொடு
பற்று இலாது
ஒருவுகின்றனை;
ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது?
ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’
என்றாள்.
(கம்பராமாயணம்- நகர் நீங்கு படலம் பாடல்- 234)
என்றாள் அப்பத்தினிப் பெண்.
உன் பிரிவை விட காடு எனக்கு துன்பம் தராது என்று கூறிய சீதை கணவனோடு புறப்பட்டாள்.கணவன் செல்லும் இடம் மிகப் பெரிய துன்பத்தைத் தரும் என்றாலும், கணவன் அருகில் இருக்கும் பொழுது அத்துன்பங்கள் யாவும் துன்பத்தைத் தராது இன்பத்தையே தரும் என்பது சீதையின் உள் எண்ணம். நாடு கடந்து காட்டிற்குள் வந்த சீதையை ராவணன் கடத்திச் செல்கிறான். சிறைப் படுத்தப்பட்ட சீதை திடமான மனதோடு தீர்க்கமான எண்ணத்தோடு ராமன் வரவேண்டும் ராவணனை அழித்துத் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்று இறுமாப்புடன் இருக்கிறாள். இங்கு அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வெல்ல வேண்டும் என்பது சீதையின் போராட்டமாகும். அனுமன் வந்து கணையாழி காட்டி அழைத்த பொழுதும் அவள் வர மறுக்கிறாள். அதற்குச் சீதை சொல்லும் காரணம்.
‘‘அல்லல் மக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்”. (கம்பராமாயணம்-சூடாமணிப் படலம்)என்கிறாள்.
தொடர்ந்து நெருப்பு என்னும் சக்தி சீதையோடு வந்து கொண்டே இருக்கிறது பாருங்கள். அனுமனிடம், சீதை, இவ்வுலகங்களை எல்லாம் என் சொல்லைக் கொண்டு வெல்ல முடியும். எனவே, ராவணனை வெற்றி பெறுவது எனக்கு கடினமில்லை. அவனை நானே வெற்றி கொண்டு ராமனோடு போய்ச் சேர முடியும்.ஆனால், அதை நான் செய்ய மாட்டேன் அவ்வாறு நான் செய்தால் வில்லாற்றல் உடைய எனது ராமனின் வில்லாற்றலுக்கும், மரியாதைக்கும், புகழுக்கும் இழுக்கைத் தரும்.
தூயவனான என் ராமன் வந்து ராவணனை வெற்றி கொண்டு என்னை அழைத்துச் செல்வதே எனக்கும் பெருமை, இராமனுக்கும் பெருமை என்று உரைக்கிறாள். மிகுந்த வேதனையோடும், துன்பத்தோடும், போராட்டங்களோடும் இலங்கையின் அசோக வனத்தில் சிறையிருந்த சீதை, மனம் தளராமல் மனஉறுதியைஒரு பொழுதும் விடாமல், கணவனால் மட்டுமே தான் மீட்கப்பட வேண்டும் என்று கூறி கணவனுடைய மாண்பை உயர்த்துகிறாள். பூமியில் ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் அன்பு கொண்டு வாழும்போது ஒருவர் மீது ஒருவர் அன்பு மட்டும் வைக்காமல் மரியாதையையும், மதிப்பையும், புகழையும் தேடித்தரக்கூடிய செயல்களையும் செய்வதே சாலச் சிறந்தது என்பதை சீதை இங்கு மெய்ப்பித்தாள்.
நெருப்பை வென்றவள்
நெருப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.. போர் முடிந்து, ராவணனை போரில் வீழ்த்தி ராமன் வெற்றி கொண்டு சீதையை மீட்கிறான். அசோகவனத்தில் சிறையிருந்த சீதையை வீடணன் அழைத்து வருவதற்காகச் செல்கிறான்.
‘‘சென்று தா நம் தேவியை சீரோடும்…’’
என ராமன் ஆணையிட, ‘சீரோடும்’ என்ற சொல்லை சற்று மாற்றிப் பொருள் புரிந்து கொண்ட வீடணன் சீதையிடம், தாயே தங்களை அலங்காரத்தோடு ராமபிரான் அழைத்து வரச் சொன்னார் என்றதும் அலங்காரம் செய்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டாள். சீதையைத் தேவ மகளிர் அலங்கரித்து இராமன் முன்பு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
சீதையை நேருக்கு நேராகப் பார்த்த ராமன் அவள் அலங்காரத்தில் இருப்பது கண்டு கோபம் கொள்கிறான். பாம்பின் விஷம் போன்ற சொற்களைக் கூறுகிறான்.10013.
‘ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம்
பாழ்பட,
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன்
மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம்
தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ‘எனை விரும்பும்’’
என்பதோ? (கம்பராமாயணம் பாடல் 10013)
- என்று சொல்லால் சுட்டான் ராமன்.
இவ்வேளையில் நல்ல இல்லறப் பெண்ணான சீதை, தன் கணவனுக்கு பதில் சொல்பவளாக அமைகிறாள். தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து இயம்புகிறாள். மேலும்,
மாருதி வந்து, எனைக் கண்டு, ‘‘வள்ளல் நீ
சாருதி ஈண்டு’’ எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது
இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும்
அல்லனோ? (கம்பராமாயணம்- யுத்த காண்டம் திருவடி தொழுத படலம்; பாடல்- 60)
- என்று கூறிவிட்டுத் தனது கற்பின் தூய்மையைத் தன் கணவனுக்குக் காட்டித் தனது மாண்பையும், தன் கணவனின் மாண்பையும் இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக சீதை என்னும் நெருப்பு தீயில் இறங்கித் தன்னை தூய்மையானவள் என்று நிரூபிக்க ஆயத்தமானாள். இலக்குவனை அழைத்து தீ மூட்டச் சொல்கிறாள். இலக்குவன் ஒரு கணம் தன் அண்ணனை நோக்கினான். அண்ணன் ராமன் அப்பொழுதும் மனம் இரங்கவில்லை. நெருப்பு அங்கு மூட்டப்படுகிறது. கற்பின் வடிவமான கனலின் உருவமான சீதை, நெருப்பில் இறங்குகிறாள். சீதை நெருப்புக்குள் இறங்கிய அதே நேரத்தில் அக்னி தேவன் வெப்பம் தாங்காமல் சீதையை விட்டு வெளியே ஓடுகிறான்.
அக்னி தேவன் ராமனிடம் சென்று சீதை மிகத் தூய்மையானவள் அவளை என்னால் விழுங்க முடியாது. சீதையின் கற்பு என்னும் நெருப்பு என்னைச் சுடுகிறது,அந்த வெப்பத்தை என்னால் தாங்க இயலவில்லை என்று துடிக்கிறான். ராமன் அப்பொழுதும் சீதைக்கு ஏற்ப பேசுகிறாயே என்று அக்னி தேவனையே திட்டுகிறான். பின்பு சிவபெருமான், பிரம்மன் என்று யார் சொல்லியும் மனம் இரங்காத ராமன், இறந்து போன தன் தந்தையான தசரதன் வந்து சீதை ஒரு சுடப்பட்ட தங்கம் என சாட்சி சொன்ன பின்பு சீதையை ராமன் ஏற்றுக்கொள்கிறான்.
அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி இருவரும் மனதால் ஒன்றுபட்டு, திருமணம் முடிந்து பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் கூட, சீதை என்னும் கற்பினாள் தன் கணவனுக்கு பின் சென்று கணவன் சொல்லுக்கு மறு சொல் சொல்லாமல், அதே நேரத்தில் தான்யார் என்பதையும், தன்னுடைய சக்தி எது என்பதையும் இந்த உலகிற்கு காட்டியவள். இறுதியில் நெருப்பே சீதையின் கற்புப் புனிதம் வாய்ந்தது என்று சாட்சி சொன்னது அங்கு சீதை நெருப்பையே வென்று நின்றாள்.
ராமாயணத்தில் கம்பர் இல்லற அறத்தை சீதையின் மூலம் உலகுக்கு காட்டியுள்ளார். குடும்பம் என்ற நிறுவனத்தில் சீதை என்ற ஆணிவேர் ராமன் என்ற ஆலமரத்தை எந்நிலையிலும் கைவிடாமல் உயர்த்திப் பிடித்ததால்தான் இன்றைக்கும் பூமிக்குள் மறைந்திருக்கும் ஆணிவேரைப்போல் சீதை தன் கணவனுக்கு முன்னே வெளிப்படாமல் வெளிப்பட்டு சீதாராமனாகவும் ஜானகி ராமனாகவும் இன்றைய காலகட்டத்திலும் கணவனுக்கு முன்பு இருப்பவளாக எல்லோருடைய உள்ளங்களிலும் நின்று வாழ்கிறாள்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் கணவனை தாங்கி பிடிப்பவளாக வாழ்கிறாள் சீதை. மேலும் ராமனை கண்டது முதல் இறுதி வரை மனதில் சோர்வில்லாமல் கணவனின் மாண்பை கட்டிக் காக்கும் அறத்தைச் செய்து தளர்ச்சியில்லாத பெண்ணாக நின்று இல்லறத்தில் தம் கணவன் ராமனின் மாண்பை பெரிதும் கட்டிக் காத்தவளாக சீதாதேவி அமைந்தாள். ராமாயணம் நம் வாழ்விற்குப் பல படிப்பினைகளைத் தருகிறது.
சீதைக்கு அக்னிப் பிரவேசம் என்பதை தாண்டி இன்றைக்கும் சீதை போன்று உலகில் வாழும் பல பெண்கள் அக்னிப்பிரவேசம் தான் செய்கிறார்கள். தம் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு இன்னல்களைப் பல்வேறு துன்பங்களை, துயரங்களைத் தாங்கி தினம் தினம் நெருப்பில் நின்று தன்னையும் காத்துத் தற்கொண்டானாகிய கணவனையும் பேணி, தன் வீட்டினையும் உயர்த்தி சோர்வில்லாமல் மன தைரியத்துடன் குடும்பத்தைக் காத்து நிற்கும் சீதைகள் நிறைந்த பூமி நம் பூமி என்பது திண்ணமே. கம்பரின் சீதை உலகிற்குப் பாடம்.
முனைவர் இரா. கீதா