சனி கொடுக்குமா? கெடுக்குமா? - நண்பர் ஒருவர் கேட்டார். நான் சொன்னேன்;
``சனி கொடுக்கும், கெடுக்கும்’’
``என்ன இரண்டாகச் சொல்கிறீர்கள்?’’ நான் அவருக்கு விளக்கமாக சொன்னேன்;
``யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு சனி அள்ளிக் கொடுப்பார். யாரைக் கெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாரோ, அவரை உண்டு இல்லை என்று செய்து விடுவார். இரண்டும் அவருடைய கைங்கரியம்தான். நீங்கள் என்ன வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுபவர் சனி. பொதுவாகவே சனியைப் பற்றிய ஒரு அச்சம். ஏழரை சனி நடக்கிறது, அஷ்டமச் சனி நடக்கிறது என்றெல்லாம் சொல்லிப் புலம்புவார்கள். ஆனால், ஒரு விஷயம். ஏழரைச் சனியும் அஷ்டமச் சனியும் நடக்கின்ற பொழுது எத்தனையோ பேர் நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். மற்ற கிரகங்களைவிட சனிக்கு கூடுதல் சிறப்புண்டு. சனி பகவானுக்கு மட்டும் அடுத்தடுத்த இரண்டு வீடுகளைத் தந்திருக்கிறார்கள்.
ஒன்று பத்தாம் வீடு. கர்ம ஸ்தானம். ஜீவனஸ்தானம். தொழில் ஸ்தானம். இன்னொன்று லாபஸ்தானம். நம்முடைய விருப்பங்கள் மகிழ்ச்சி ஆனந்தம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் இடம். இந்த அமைப்பில்கூட நமக்கு சில உண்மைகள் புரியும். செவ்வாய்க்கு கால புருஷனின் ஒன்றாவது வீட்டையும் எட்டாவது வீட்டையும் தந்திருக்கிறார்கள். ஒன்று சுபவீடு. இன்னொன்று அசுப வீடு. யோசித்துப் பாருங்கள். ஒன்று என்கின்ற லக்னம் அதாவது நாம் சரியாக இயங்கினால் எட்டு என்கிற கஷ்டம் ஏன் வருகிறது? அதைப் போலவே, இரண்டாவது வீட்டையும் ஏழாவது வீட்டையும் சுக்கிரனுக்குத் தந்திருக்கிறார்கள். நம்முடைய பணம், சொல், படிப்பு எல்லாம் சரியாக இருந்தால் நமக்கு சமமாக நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம். நல்ல நண்பர்களைப் பெறலாம். தொழில் கூட்டாளிகளைப் பெறலாம்.
மூன்றும், ஆறும், புதனுக்குத் தந்தார்கள். மூன்று என்பது தகவலுக்கான இடம். ஆறு என்பது பகை. சரியான தகவல் இருந்தால் ஏன் பகை வருகிறது? குருவுக்கு ஒன்பதாவது இடத்தையும் 12-ஆம் இடத்தையும் தந்தார்கள். நமக்கு கிடைத்த பாக்கியங்களை நல்லபடியாக உபயோகித்தால், 12வது இடமாகிய நிம்மதி, தூக்கம் தானே வரும். ஒன்பதாம் இடம் என்பது தர்மஸ்தானம். தர்மத்தை முறைப்படியாக செய்தால், 12வது வீடு (நற்கதி மோட்சம்) தானே கிடைக்கும். தர்மத்தை அறிவதற்கும் மோட்சத்தைப் பெறுவதற்கும் குருவினுடைய அருள் தேவை. அதனால்தான் அந்த இரண்டு வீடுகளையும் குருவுக்குக் கொடுத்தார்கள். ஆனால் சனிக்கு 10 (கர்மம்) 11 (லாபம்) என அடுத்தடுத்து வீடுகளைத் கொடுத்தார்கள்.
தொழில் (10) முறையாகச் செய்தால் லாபம். (11) லாபம் எனும் விளைவு. தானாகவே வரும். கர்மா (10), கர்மாவின் பலன் (11) என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் செயல்களின் பலனை தயவு தாட்சண்யம் இல்லாமல் செய்வார் என்பதால் அவரை துலா ராசியில் உச்சம் அடைய வைத்தார்கள். துலா என்பது தராசு அல்லவா. தராசு போல அவர் பலா பலன்களைக் கொடுப்பார். அதனால்தான் நாம் அவரை நினைத்தால் கலங்குகிறது.
``மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் இல்லை’’ என்று ஒரு பழமொழி உண்டு. நாம் மிகச் சரியாக சரியாக தர்ம நியாயங்களின் படி நடந்து கொண்டால் சனி பகவானைக் குறித்து அச்சப்பட தேவையில்லை.
சனிக்கு சனீச்வரன் என்று ஈஸ்வர பட்டம் இல்லை. அவர் பெயர் சனைச்சரன். மெல்ல நடப்பவர். ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குப் போக இரண்டரை வருடம் எடுத்துக் கொள்பவர். கொடுப்பதற்கு காலதாமம் செய்வர். ஆனால் நிலையான சொத்தைக் கொடுப்பார். சனி திசையில் வாங்கக்கூடிய சொத்து தலைமுறைகளையும் தாண்டி நிற்கும்.
ஜாதகத்தில் சனி அல்லது குரு பலம் பெற்று இருந்தாலும், குருவுக்கும் சனிக்கும் தொடர்பு இருந்தாலும், ஜாதகத்தில் குரு மற்றும் சனி இவர்களின் சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும், 9 ஆம் அதிபதி, 10 ஆம் அதிபதி தொடர்பு இருந்தாலும் - ஜாதகரின் கடைசி கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சனி சுயசாரம் பெறுவது, ஆட்சி, உச்சம், தன்வீட்டை தானே பார்ப்பது போன்ற அமைப்பில் இருந்தால் சனி பலமாக உள்ளார் என எடுத்து கொள்ளலாம். நான்காம் இடத்தில் சனி இருந்தால், வீடு அமைய தாமதமாகும். வீடு கட்டும் பொழுது கட்டி முடிக்க கால தாமதம் ஆகும். ஆனால் கவலை கொள்ள தேவை இல்லை. சனி நான்கில் இருந்தால் காலதாமதமாக வீடு கட்டுவதுதான் நல்லது.
சனியின் காரகங்கள்
சந்தேக குணம், மூத்த சகோதரன் (கால புருஷனுக்கு பதினோராம் அதிபதி என்பதால்), தனிமை, நேர்மை (சனிக்கு குரு (அ) சுக்கிரன் தொடர்பு ஏற்படும் பொழுது, சனி ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவம் சம்பந்தப் படும் போதும், நேர்மையை தருகின்றது) சுய தொழில், தாழ்வு மனப்பான்மை, முதிர்ந்த தோற்றம், நரைமுடி (கேது கருப்பு முடி), இரும்பு / கம்பி, கஞ்சத்தனம், வறுமை, கஷ்டம், மெதுவாகச் செயல்படுதல், ஆயுள், எண்ணெய் வித்துகள், வியாதி - (ஆறாம் பாவம் சம்பந்தப்படும் போது மட்டும், பயந்த மனநிலை) குறையுள்ள ஆபரணங்கள்) சுரங்கம் - எட்டாமிடம் சம்பந்தம் ஏற்படும் பொழுது மட்டும், பழமை, நுங்கு (பனைமரம் நுங்கு) பதநீர், கருப்பட்டி, கருப்பு, மசாஜ், மண் பாண்டங்கள், பாறை (சூரியன், செவ்வாய், ராகு, சனி எல்லாம் பாறையை குறிக்கும்), காலணி (செருப்பு), ஆன்மிகம், சன்யாசம் (சனி - கேது தொடர்பு கொள்ளும் போது) சோம்பல், கசப்பு (பாவற்காய்), புளிப்பு (மாங்காய்) இருட்டு (சனி அமர்ந்த இடத்தில் ஒரு ரகசியம் இருக்கும்), அருவருப்பான இடங்கள் (குப்பை, சாக்கடை, பழைய பொருட்கள்), அழுக்கு, கசடு, குப்பை மேடுகள், படிக்கட்டு, மேற்கு திசை, கடை நிலை போலீஸ், சனீஸ்வரரை குறிக்கும். போலீஸ் அதிகாரிகள் செவ்வாய், வேலையாட்கள், தோல் வியாதி - 8க்கு தொடர்பு கொள்ளும் போது மட்டும், ஒதுக்கி வைத்தல், மரணபயம், பொய்யான குற்றச்சாட்டு (பொய் வழக்கு) (லக்னத்திற்கு சனி தொடர்பு கொண்டால் ஜாதகர் மீது ஒரு வீண்பழி உண்டு.
அழகுபடுத்திக் கொள்ளாமல் இருத்தல், கொடூர விபத்து (கோர விபத்து), ஊனம், மலம், சிறுநீர், பிச்சை மற்றும் பிச்சைக்காரர், பதுக்கி வைத்தல் (புதைத்து வைத்தல்), கலப்படம், நீண்ட கால நோய், இரவு வேலை - லக்ன தொடர்பு இருந்தால் இரவு நேரப் பணி அமையும், திடீர் தாடி வளர்ப்பது, நீல நிறம், சுடுகாடு, கழிவறை நிலக்கரி, குழி (பள்ளம்), முட்டை, எள்ளு, குமட்டல் வாடை - சனி. (சந்திரன் வாந்தி), பட்டினி, வறண்ட பூமி, வறண்ட இடங்கள், கரிசல் பூமி, பாலை வனம், ஈயம், பேரன் / பேத்தி, பேரிச்சம்பழம், வெள்ளாடு, முடி திருத்தும் கடை, கழுதை, கம்மங்கூழ், கேழ்வரகு, கருணைக் கிழங்கு, வேப்ப எண்ணெய், நல்ல எண்ணெய், ஐஸ், உரக்கடை.
இனி ஜாதகங்களில் சனி எப்படி இருந்தால் கொடுப்பார்? எப்படி இருந்தால் கெடுப்பார்? என்பதைப் பார்க்கலாம்.
 
  
  
  
   
