Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

?மனிதர்கள் சாபம் பலிக்குமா?

- வண்ணை கணேசன், சென்னை.

மாத்ரு சாபம், பித்ருசாபம், குரு

சாபம், மித்ரசாபம் ஆகியவை நிச்சயம் பலிக்கும். பெற்ற தாய் மனம் நொந்து விடுக்கும் சாபம், தந்தையாரின் மனம் கோணும்படியாக நடந்து அவர் தரும் சாபம், பாடம் கற்றுத் தரும் குருவை நிந்திப்பதன் மூலம் கிடைக்கும் சாபம், உயிர்த்தோழனுக்கு துரோகம் செய்வதன் மூலம் வந்து சேரும் சாபம் ஆகியவை நிச்சயம் பலித்துவிடும். மேலும், தர்மவழி பிறழாமல் நீதி, நேர்மை, நாணயத்தை பின்பற்றி நடப்பவர்களுக்கு இறைவனின் துணை இருப்பதால், அவருக்கு எவர் சாபமும் பலிக்காது.

?கடவுள் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

- த.நேரு, வெண்கரும்பூர்.

கடமையைச் செய்ய வேண்டும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது பகவத்கீதை. கடமையைச் சரிவர செய்பவனிடம் இறையருள் நிறைந்திருக்கும் என்பதை எல்லா மதங்களின் மறைகளும் வலியுறுத்துகின்றன. வயதான பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமை. பெற்ற பிள்ளைகளுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் நிறைவேற்றி வைக்க வேண்டியது, பெற்றவர்களின் கடமை. பணத்தை பிரதானமாக எண்ணாமல் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. குருவினை மதித்து நடக்க வேண்டியது சீடனின் கடமை. கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்களை வாடிக்கையாளருக்குத் தர வேண்டியது கடைக்காரரின் கடமை. கிருஷ்ண பரமாத்மா தனது நித்திய பூஜையில் தினசரி ஆறு பேரை நமஸ்கரிக்கிறான் என்கிறது ஸ்மிருதி வாக்கியம். நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவர செய்து வருகின்ற வேத பிராமணர், கணவனின் குறிப்பறிந்து நடக்கும் பதிவிரதை, பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பிள்ளை, தன் வாழ்நாளில் தான் பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்து 80வது வயதில் சதாபிஷேகம் செய்துகொண்டவன், பசுக்களை காப்பவன், ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில் நித்தியம் அன்னதானம் செய்பவன் என தத்தம் கடமையைச் செய்பவனை கடவுளே வணங்குகிறான் எனும்போது, கடமையைச் செய்வதால் மட்டுமே கடவுளின் அருளைப் பெறமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

?நல்ல வீடு அமைய உதவி புரிவது கிரஹங்களின் அமைப்பா அல்லது வாஸ்து சாஸ்திரமா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

நிச்சயமாக ஜனன ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் அமைப்புதான் நல்ல வீடு அமைவதற்கு துணை புரியும். ஜாதகத்தில் நான்காம் பாவகம் நல்ல படியாக இருந்து, லக்ன பாவகமும் வலுப்பெறும் பட்சத்தில் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருக்கும் நல்ல வீடு என்பதை சொந்தமாக்கிக் கொள்ள இயலும்.

?ஆமை வீட்டிற்குள் வந்தால் ஆகாது என்கிறார்களே உண்மையா?

- என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ஆமை மட்டுமல்ல, பசுவினைத் தவிர எந்த ஒரு மிருகமும் வீட்டிற்குள் வரக் கூடாது. அந்த பசுமாடுகூட கிருஹபிரவேசம் செய்யும்போதும் ஒரு சில சாந்தி பரிகாரங்களில் கோபூஜை செய்யப்படும்போதும் உள்ளே வரலாம். மற்ற நேரத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள கொட்டகையில்தான் கட்டி வைக்க வேண்டும். நாய், பூனை முதலான செல்லப் பிராணிகள் உள்பட எந்த ஒரு மிருகமுமே வீட்டிற்குள் வரக் கூடாது என்பதையே நம்முடைய தர்மசாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது.

?பிரதோஷ நாட்களில் நந்திக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பிரதோஷத்திற்கும்

நந்திக்கும் என்ன சம்பந்தம்?

- கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவ காட்சி தென்படுவதாக ஐதீகம். பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதன் மூலம் சாக்ஷாத் பரமேஸ்வரனின் ஆனந்த நடனக் காட்சியை தரிசிப்பதன் பலனை அடைகிறோம் என்பதாலேயே அந்த நேரத்தில் நந்தியம்பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

?மறந்தும் பிறன்கேடு சூழற்க என்பதன் பொருள் என்ன?

- அன்பழகன், சேலம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

என்பது தீவினையச்சம் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் திருக்குறள் ஆகும். மறந்தும்கூட அதாவது தன்நிலையில் இல்லாத நிலையில்கூட மற்றவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால், நினைத்தவனுக்கே அந்தத் தீங்கினை அறம் என்பது உண்டாக்கிவிடும் என்பதே அதன் பொருள். ஆக எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதே இந்தக்குறள் சொல்லும் கருத்து.

?சாமியார்கள் நீண்ட சிகையுடனும் தாடியுடனும் வளர்க்கிறார்களே, நீண்ட சிகைக்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு உண்டா?

- சங்கீதா, சென்னை.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

என்று வள்ளுவப் பெருந்தகை தெளிவாகக் கூறியிருக்கிறாரே. இந்தக் குறளின் மூலமாக குறள் கூறும் கருத்து இதுதான். உலகத்தாரால் பழியான காரியங்கள், அதாவது தவறான காரியங்கள் என்று விலக்கப்பட்ட குற்றங்களைச் செய்யாதிருந்தாலே போதும். அதனை விடுத்து தலையை மொட்டை அடித்துக் கொள்வது அல்லது தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளரவிடுவது முதலான சின்னங்கள் உண்மையான துறவிக்கு அவசியமில்லை. தனது நன்னடத்தையின் மூலமாக மட்டுமே தன் நிலையை உலகத்தாருக்கு உணர்த்த வேண்டுமே தவிர, வெறும் வெளிவேடத்தினால் அல்ல. பொய், புரட்டு, கபடு, சூது, வஞ்சனை, மது, மாது என உலகம் பழிக்கும் தீய பழக்கங்களை ஒழித்துவிட்டாலே போதும். தலையை மொட்டையாக மழித்தலும் தேவையில்லை, தாடியை நீட்டலும் தேவையில்லை. உண்மையான ஆன்மிகவாதிக்கு வெளிவேடம்

அவசியமில்லை.

திருக்கோவிலூர்  K.B.ஹரிபிரசாத் சர்மா