Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏன்? எதற்கு ? எப்படி ?

?ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?

- த.நேரு,வெண்கரும்பூர்.

வெற்றிலைக் கொடியை நாகவல்லி என்று அழைப்பார்கள். வல்லி என்றால் கொடி என்று பொருள். ராம - ராவண யுத்தம் முடிவிற்கு வந்ததும் ராமபிரான் வெற்றி பெற்ற செய்தியை அசோக வனத்தில் இருந்த சீதையிடம் சென்று தெரிவித்தார், ஆஞ்சநேயர். ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற சீதாதேவி, அனுமனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினார். மகாலட்சுமியின் அம்சமாகவே இருந்தாலும், சீதாதேவியிடம் பரிசளிக்க அந்த நேரத்தில் கைகளில் ஒன்றுமில்லை. தனக்கு அருகில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியை அப்படியே பறித்து அனுமனுக்கு மாலையாக அணிவித்தார் சீதா பிராட்டியார். வெற்றிச் செய்தியைச் சொன்ன அனுமனுக்கு அணிவிக்கப்பட்டதால், அந்த இலை அன்று முதல் ``வெற்றி இலை’’ ஆனது. சீதா பிராட்டியாரின் கரங்கள் பட்டதால் அது மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாகவும் ஆனது. அதனால்தான் மங்களகரமான பொருட்களில் வெற்றிலையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அது முதல் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் உண்டானது.

?சில இறை மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்வதில்லையே ஏன்?

- வண்ணை கணேசன், சென்னை.

சிவன் அபிஷேகப்பிரியர், பெருமாள் அலங்காரப்பிரியர் என்று சொல்வார்கள். சிவன் அக்னி ஸ்வரூபம். அவரது உஷ்ணத்தைத் தணிக்கின்ற விதமாக ஆறு கால பூஜைகளிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த அக்னியின் உச்சபட்ச நிலையான சாம்பல் எனும் விபூதி சிவாலயத்தில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. விஷ்ணு, பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவர். அவர் எப்பொழுதும் நீரிலேயே இருப்பதால்தான் பெருமாள் கோயில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த அக்னி எனப்படும் நெருப்பும் வருணன் எனப்படும் நீரும்தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஆதார சக்திகள். இந்த சூட்சுமத்தை உணர்த்தவே எல்லா ஊர்களிலும் சிவாலயம் ஒருபுறமும் பெருமாள் கோயில் மறுபுறமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோக, கற்களினால் ஆன சிலைகளுக்கு தினமும் அபிஷேகம் என்பது நடைபெறும். அபிஷேகம் செய்யப்படாத சுதையால் ஆன சிலைகளுக்கு வருடம் ஒருமுறை ஒரு மாத கால அளவிற்கு தைலக்காப்பு எனப்படும் மூலிகைகளால் ஆன எண்ணெயைத் தடவி வைத்திருப்பார்கள். அந்தந்த ஆலயத்திற்கு உரிய ஆகம விதிப் படிதான் அபிஷேகங்கள், திருமஞ்சனம், தைலக்காப்பு முதலியவை நடைபெற்று வருகின்றன.

?முன்பெல்லாம் சிறு கிராமங்களிலும் அடிக்கடி கருட தரிசனம் கிட்டி காண்போருக்கு நம்பிக்கை ஒளியூட்டுவது உண்டு. இப்போது கருட தரிசனம் என்பது அபூர்வமாகிப் போனதன் காரணம் என்ன?

- ஆர்.உமாகாயத்ரி, நெல்லை.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. இக்கால இளைஞர்களுக்கு கருட தரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதுதான் நிஜம். கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருகிறார் என்பதை மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையான கருடனைத் தரிசிக்க இயலாமல் போனதன் காரணம், மாறிவரும் சமூக பழக்க வழக்கங்களும் சுற்றுப் புறச் சூழலும்தான். சுற்றுப்புறச் சூழலை இயற்கையான முறையில் பராமரிக்கத் தவறி வருகிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

?நவகிரஹங்களைச் சுற்றும்போது எந்தக் கடவுளை நினைத்து சுற்ற வேண்டும்?

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

நவகிரஹங்கள் என்பது இறைவன் இட்ட பணியைச் செய்யும் பணியாட்கள். எந்த ஆலயத்தில் நவகிரஹங்களைச் சுற்றுகிறீர்களோ, அந்த ஆலயத்தின் மூலவரை நினைத்துச் சுற்றினாலே போதுமானது. முழுமையான பலன் என்பது நிச்சயமாக கிடைக்கும்.

?குதிரை லாடத்தை வீட்டின் தலைவாசலில் வைக்கலாமா?

- பொன்விழி, அன்னூர்.

உங்கள் வீட்டில் குதிரை வளர்க்கிறீர்களா என்ன? லாடம் என்பது குதிரையின் கால் குளம்புகளுக்கு பாதுகாப்பு தருவது. அதனை எதற்காக வீட்டின் தலைவாசலில் கொண்டுவந்து வைக்க வேண்டும்? இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நம்முடைய சாஸ்திரத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்பதுதான் உண்மை.

?ஒருவரின் பிறப்பு ஜாதகம் பேசுமா அல்லது கர்மா என்பது பேசுமா?

- ஜி.செல்வமுத்துக்குமார், கடலூர்.

அவரவர் செய்த கர்மவினையின் அடிப்படையில்தான் ஜாதகம் என்பதே அமைகிறது. அதனால்தான் ஜாதகம் எழுதத் துவங்கும்போது ஜோதிடர்கள் முதலில் இந்த வரிகளை எழுதிவிட்டுத்தான் ஜாதகம் கணிக்கத் துவங்குவார்கள். ``ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’’ என்பதே அந்த வரிகள். அவரவர் செய்த பூர்வஜென்ம புண்ணியத்தின் அடிப்படையில் இந்த ஜென்மாவினை அனுபவிக்கிறார்கள் என்பதே அதற்கான பொருள். ஆக கர்மாவின் அடிப்படையில்தான் ஜாதகமே அமைகிறது என்பதால், இரண்டும் ஒன்றுதான். அந்த கர்மாவின் அடிப்படையில் அமைந்த ஜாதகத்தினைக் கொண்டு நாம் பலன்களை அனுபவிக்கிறோம் என்பதுதான் உண்மை.

?திருவண்ணாமலையில் பௌர்ணமி தினங்களில் கிரிவலம் சுற்றினால் மட்டும்தான் பலன் கிடைக்குமா? மற்ற நாட்களில் சுற்றினால் பலன் கிடைக்காதா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

தவறான கருத்து. எந்த நாட்களில் கிரிவலம் வந்தாலும், பலன் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டால் மட்டும்தான் பலன் கிடைக்குமா என்ன? எந்த நாளில் எந்த பொழுதில் வேண்டுமானாலும் விநாயகப் பெருமானை வழிபடலாம் அல்லவா? அதே நேரத்தில், சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகர் வழிபாட்டிற்கு சிறப்பம்சம் பெறுவது போல், பௌர்ணமி நாளில் கிரிவலம் என்பதும் சிறப்பம்சம் பெறுகிறது. மன அமைதியை வேண்டுவோர் எப்பொழுது வேண்டுமானாலும் கிரிவலம் வந்து வணங்கலாம். நிச்சயமாக முழுமையான பலன் என்பது கிடைக்கும்.