Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏன்?எதற்கு ?எப்படி ?

?இறந்தவர்களின் ஆன்மா அவர் களது வீட்டைச் சுற்றிவரும் என்பது உண்மையா?

- சு.ஆறுமுகம், கழுகுமலை.

கருமகாரியம் என்பது நடைபெறும் வரை அவ்வாறு சுற்றிவரும். ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை எரித்துவிடுகிறோம் அல்லது புதைத்துவிடுகிறோம். உடலில் இருந்து பிரிந்த ஆவியானது எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும். அந்த ஆன்மாவிற்கு தனது வீடு, குடும்பம், பிள்ளைகளை மட்டுமே தெரிந்திருக்கும். அந்த ஆன்மாவிற்கு உரிய வழிகாட்ட வேண்டியது பிள்ளைகள் அல்லது வாரிசுகளின் கடமையாகிறது. இறந்துபோன தன் தந்தை தன்னை பெயரிட்டு அழைப்பது போல் அவரது வாரிசுகளே அனுபவித்து உணர்ந்திருப்பார்கள். அலைந்து கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு சூட்சும ரூபமாக ஒரு உருவத்தினை அளித்து நீ நல்லபடியாக பித்ருலோகத்திற்குச் செல்வாயாக என்று வழியனுப்பி வைக்கும் சடங்குதான் கருமகாரியம் என்பது. அவரவர் சம்பிரதாயப்படி 10வது நாள், 12வது நாள், 16வது நாள் என்று இந்த கருமகாரியத்தினை நடத்துவார்கள். ஒருவர் இறந்த நாள் முதல் குறைந்த பட்சமாக 10 நாட்களில் இருந்து அதிகபட்சமாக 16வது நாள் என்பதற்குள்ளாக இந்த சடங்கினைச் செய்வார்கள். இப்படி கருமகாரியம் என்கின்ற சடங்கு ஆனது நடத்தப்படும் வரை அந்த ஆன்மாவானது தனது வீட்டினைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் என்ற கருத்தினை மறுப்பதற்கில்லை. முறையாக கருமகாரியம் நடத்தப்பட்டுவிட்டால் நிச்சயமாக அந்த ஆன்மா பித்ருலோகத்தை நோக்கி தன்னுடைய பயணத்தை துவக்கிவிடும். அதன்பின் வாரிசுகள் தந்தை தன்னை அழைப்பது போன்ற உணர்வினைக் காண்பதில்லை.

?கோயிலுக்கு தனியாகச் சென்று வழிபடுவது, குடும்பத்தோடு சென்று வழிபடுவது எது சிறந்தது?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

குடும்பத்தோடு சென்று வழிபடுவதே சாலச் சிறந்தது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்தான் நமது தர்மத்தில் சிவன் என்றால் தந்தை, அன்னை பார்வதி, பிள்ளைகள் பிள்ளையார் மற்றும் முருகன், இவர்களின் மாமன் மந் நாராயணன் என்றெல்லாம் உறவுமுறைகளைச் சொல்லி வழிபட வைத்தார்கள். தெய்வ சக்தி என்பது ஒன்றுதான் என்றாலும் இதன் மூலம் உறவுகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தினார்கள். ஆக குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களோடு இணைந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவது என்பதே சிறந்தது.

?திருமணம், காதணிவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே, ஏன்?

- என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ஒரு குழந்தைக்கு காதணி விழா செய்வதற்கு முன்னதாக குலதெய்வத்தின் ஆலயத்தில் வைத்து மொட்டை அடிப்பார்கள். அதுவரை தெய்வத்தின் குழந்தையாக நம்மிடம் வளர்ந்த பிள்ளையை அந்த நாள் முதல் குலதெய்வத்தின் ஆசியுடனும் அனுமதியுடனும் நம்முடைய குழந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். குலதெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த தெய்வத்தின் அருளால் இந்தக் குழந்தையானது வாழ்வினில் எந்தவிதமான குறையும் இன்றி ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என்பதற்காகவும் சிகையை நீக்கி காதணிவிழாவினைச் செய்கிறோம். அதேபோல திருமணத்திற்கு முன்னதாக இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும், அதன்மூலமாக இந்தக் குலமானது சீரும் சிறப்புமாக வளரவேண்டும் என்பதற்காக குலதெய்வத்திடம் சென்று பிரார்த்தனை செய்கிறோம். வம்சம் நல்லபடியாக தழைக்க வேண்டும் என்பதே இதுபோன்ற விசேஷங்களுக்கு முன்னதாக குலதெய்வ வழிபாடு செய்வதன் நோக்கம் ஆகும்.

?சிம்மராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

- பொன்விழி, அன்னூர்.

வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் நரசிம்மரையும், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சரபேஸ்வரரையும் வணங்கலாம். இருதரப்பினரும் தங்களுடைய ராசியான சிம்மத்திற்கு அதிபதி ஆகிய சூரியனைக் கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருவது மிகவும் நல்லது. ஆன்ம பலம் அதிகரிக்கக்

காண்பார்கள்.

?ஆன்மிகத்தை எப்படி நாம் வழிநடத்திச் சென்றால் மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும்?

- கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.

உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் அந்த அன்புதான் கடவுள் என்பதை உணர்ந்தாலே போதும். அன்பே சிவம் என்பதுதான் உண்மையான ஆன்மிகம். இதனை முழுமையாக உணர்ந்து அதன்படி நடந்துகொண்டாலே மனதிற்கு முழுமையான சந்தோஷம் என்பது கிடைக்கும்.

?ஒரே ராசி, ஒரே லக்னம் உள்ள ஜாதகம் பொருந்தாதா? ஏன்?

- த.நேரு, வெண்கரும்பூர்.

இது தவறான கருத்து. ஒரே ராசி, ஒரே லக்னம் உள்ள ஜாதகம் நன்றாகப் பொருந்தும். ராசி என்பது உடலையும் லக்னம் என்பது உயிரையும் குறிக்கும். ஒருவருடைய ராசி என்பது மற்றவருக்கு லக்னமாக இருந்தால் தம்பதியர் உயிரும் உடலுமாக ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பதே நிஜம். இதுபோன்ற அமைப்பு இருந்தால் தாராளமாக திருமணத்தை நடத்தலாம்.

?சந்திராஷ்டம தினத்தன்று கைபேசி யில் செல்ஃபி எடுத்துக் கொண்டால் பரிகாரம் என்று கூறுகிறார்கள். முன்பெல்லாம் கைபேசி கிடையாதே? மேலும் இன்று பரிகாரமும் ஹைடெக் ஆகிவிட்டதே, உங்களின் கருத்து..?

- கோ.பிரேம், திருச்சி.

இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய சாஸ்திரம் வலியுறுத்தும் விஷயங்களைப் பின்பற்றினாலே போதுமானது. சந்திராஷ்டம நாள்தான் என்றில்லை, தினமும் காலையில் எழும்போதே தன்னுடைய முகத்தை தானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளலாம் அல்லது தனது உள்ளங்கைகளை பார்த்துக் கொண்டாலே போதுமானது. அன்றைய பொழுதானது நல்லபடியாகவே செல்லும். தூங்கி எழுந்தவுடன் காணத் தக்கவை என்று ஒரு சில விஷயங்களை நம்முடைய சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதைப் பின்பற்றி வந்தாலே போதுமானது. சந்திராஷ்டம நாளும் நமக்கு வெற்றியைத் தருவதாகவே அமையும்.