?மூடிய நிலையில் இருக்கும் கோயிலின் வெளியே கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?
- ஜெ.மணிகண்டன், வேலூர்.
சரியே. இன்றளவும் அதிகாலைப் பொழுதிலும் இரவு நேரத்திலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். அதிகாலையில் முதன்முதலாக டிரிப் - ஐத் துவக்கும்பொழுது அந்தப் பேருந்தின் நடத்துனர் பேருந்து செல்லும் வழியில் உள்ள முக்கியமான கோயிலின் வாசலில் இறங்கி ஓடோடிச் சென்று அவசரம் அவசரமாக கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டு வருவார். அதே போல மீண்டும் இரவில் டிரிப்பை முடிக்கின்ற தருணத்திலும் பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் வழியில் வரும் ஆலய வாசலில் மீண்டும் ஒரு முறை கற்பூரத்தை ஏற்றி வணங்குவார். இந்தப் பழக்கத்தினை இன்றளவும் நம்மால் காண இயலும். இந்த இரண்டு நேரங்களிலும் ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்டுதான் இருக்கும். கதவுகள் மூடப்பட்டு இருந்தாலும் அங்கே நிலவுகின்ற இறை சாந்நித்தியத்தின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து இன்றைய தினம் வாகனம் என்பது நல்லபடியாக இயங்க வேண்டும். அதில் பயணிக்கின்ற பயணிகள் எல்லோரும் தங்கள் பயணநோக்கம் நிறைவேறி வெற்றியுடனும் நலமுடனும் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அந்த நடத்துனருடைய பிரார்த்தனையாக இருக்கும். இவ்வாறு ஆலயக் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால், கற்பூரம் ஏற்றுவதற்கு என்று தனியாக ஒரு இடத்தில் சற்று உயரமான மேடை போன்று அமைத்து அதில் ஏற்றி வழிபட்டால் நல்லது. யாருடைய காலும் அதில் பட்டுவிடக்கூடாது என்பதோடு அவ்வாறு வழிபடுவது என்பது மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் இடைஞ்சலை உண்டாக்கி விடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
?வீட்டு வாசலுக்கு வரும் பறவைகளுக்கு தானியம் கொடுப்பதன் பலன் என்ன?
- ஜெ.மணிகண்டன்,பேரணாம்பட்டு.
கூட்டமாக வாழும் பறவைகளுக்கு உணவளிப்பதன் மூலம் நம் குடும்பத்திலும் ஒற்றுமை என்பது பெருகும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி எல்லோரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு உரிய பரிகாரமாகவே இந்த செயலானது ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
?திருமணத்திற்குப் பின்பு பெண்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வழிபடலாமா?
- இளங்கோ, மயிலாடுதுறை.
அவசியம் வழிபட வேண்டும். புகுந்த வீட்டு குலதெய்வத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து வணங்க வேண்டும். அதே போல, பிறந்த வீட்டார் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் நாளில் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து சென்று பெண்கள் தங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் வழிபட வேண்டும். அதற்கு அந்தப் பெண்களுடைய கணவன்மார்களும் புகுந்த வீட்டாரும் பக்கபலமாகத் துணைநிற்க வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?ஒருவர் தினசரி செய்ய வேண்டிய தர்மங்கள் எது?
- மு.கீதா, தஞ்சை.
பஞ்சமஹா யக்ஞத்தினை செய்ய வேண்டும். யக்ஞம் என்றால் யாகமோ அல்லது ஹோமமோ அல்ல. தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம் மற்றும் பூத யக்ஞம் ஆகிய ஐந்துமே ஒரு மனிதன் வாழ்வினில் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து தர்மங்கள் ஆகும். தேவ யக்ஞம் என்பது தினமும் தேவர்களை வணங்குவது. நம் வீட்டுப் பூஜை அறையில் உள்ள தெய்வத்தை வணங்கி வந்தாலே போதுமானது. ரிஷி யக்ஞம் என்பது நாம் பள்ளியில் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பின்பற்றி ஒழுக்கமாக நடந்து கொள்வது. பித்ரு யக்ஞம் என்பது பெற்றோரை வணங்குவது. அவர்கள் அருகில் இல்லை என்றாலும் அல்லது உயிருடன் இல்லை என்றாலும் நமது நினைவலைகளில் அவர்களைக் கொண்டு வந்து மானசீகமாக அவர்களை வணங்குவது. அடுத்தபடியாக நம் அருகில் வசிக்கும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவல் பணியாளர்கள், பேருந்தில் உடன் பயணிப்பவர்கள் என எல்லோருடனும் அன்பு பாராட்டுவது மற்றும் நம்மால் இயன்ற அளவில் அவர்களுக்கு உதவி செய்வது என்பதே மனுஷ்ய யக்ஞம் என்பது ஆகும். இறுதியாக வரும் பூத யக்ஞம் என்பது மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள் மிருகங்கள் ஆகியவற்றையும் பராமரிக்கின்ற விதமாக காக்கைக்கு அன்னமிடுதல், பறவைகளுக்கு தானியம் இறைத்தல், தண்ணீர் வைத்தல், பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித் தருதல், நாய் முதலான மிருகங்களுக்கு உணவளித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலமாக மற்ற உயிரினங்கள் இடத்திலும் அன்பு செலுத்துதல் ஆகும். ஆக இந்த ஐந்துமே ஒரு மனிதன் தினசரி தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் ஆகும்.
?பிறவிக்கடன் என்பது என்ன? அதனை தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்கிறார், திருநாவுக்கரசர். ஆலயத்தில் உழவாரப் பணி செய்தலை அவர் அப்படி குறிப்பிடுகிறார். சாமானிய மனிதர்கள் ஆகிய நாம் நம்மால் இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உடலாலும் உள்ளத்தாலும் பொருளினாலும் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்திடல் வேண்டும். தான், தனது என்று எப்பொழுதும் சுயநலமாக சிந்திக்காமல் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் உட்பட உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்து வருவதன் மூலமாகத்தான் பிறவிக்கடனைத் தீர்க்க இயலும்.
?வழிபடும் முறைகளில் வேறுபாடு உள்ளதே?
- டி.நரசிம்மராஜ், மதுரை.
வழிபாட்டு முறைகளில் மட்டுமல்ல, மனிதர்கள் கடைப்பிடிக்கும் அனைத்துவிதமான பழக்கங்களிலும் மாறுபாடு என்பது உள்ளது. உதாரணத்திற்கு, உணவு என்பதையே எடுத்துக் கொள்வோம். பசித்தால் உணவு சாப்பிட வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்குமான பொதுவான விதி. ஆனால் அந்த உணவினை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக தயாரிக்கிறார்கள். எப்படித் தயாரித்து இருந்தாலும் அந்த உணவின் நோக்கம் என்பது பசியைப் போக்குவதுதான். அதுவும் அந்தப் பணியைச் செவ்வனே செய்து முடித்துவிடுகிறது. அதுபோலத்தான் பக்தி என்பதும். இங்கே இறைவனை வணங்கி அருளைப் பெறவேண்டும் என்பதுதான் நோக்கம். அங்கே வழிபடுகின்ற முறைகள் வெவ்வேறானதாக இருக்கலாம். நோக்கம் என்ன, இறைவனை வணங்க வேண்டும் என்பதுதானே. சிரத்தையுடன் கூடிய பக்தி என்பது இருந்தாலே போதுமானது, முறை எதுவாக இருந்தாலும் நோக்கம் என்பது கண்டிப்பாக நிறைவேறிவிடும். வழிபடும் முறைகளில் இருக்கின்ற வேறுபாடு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
