Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏன்? எதற்கு? எப்படி?

?மாளவ்ய யோகம் என்றால் என்ன?

- எம்.முத்துக்குமாரசுவாமி, சென்னை.

ஜாதகத்தில் சுக்கிரனை அடிப்படையாகக்கொண்டு சொல்லப்படுவதே ``மாளவ்ய யோகம்’’ ஆகும். ஜென்ம லக்னத்தில் இருந்து கேந்த்ர ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்ற 1,4,7,10 ஆகிய இடங்களில் சுக்கிரன் என்கிற கிரஹம் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் அமர்ந்தால், இந்த மாளவ்ய யோகம் என்பது உண்டாகும். ``பஞ்சமஹாபுருஷ’’ யோகங்களில், ஒன்றான இந்த மாளவ்ய யோகம், இந்த இகலோக வாழ்க்கைக்குத் தேவையான சுகத்தினை அளிக்கும் பலன்களைத் தரவல்லது. இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் சுக்ர தசையின் காலத்தில் சுகபோகத்துடன் வாழ்வார்கள் என்பது பொதுவான கருத்தாகும்.

?குண்டலியில் உள்ள வீடுகள் என்றால் என்ன?

- ராமாபதி, வயலூர்.

இது ஜோதிடம் சம்பந்தப்பட்ட வார்த்தை. ஜாதகத்தை குண்டலி என்ற பெயரில் அழைப்பார்கள். ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாவகத்தையும் வீடு என்ற சொல்லாலும் குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு லக்ன பாவகத்தை ஒன்றாம் வீடு என்று கணக்கில் கொண்டு வரிசையாக 2ம் வீடு, 3ம்வீடு என்று 12 ராசிகளையும் 12 வீடுகள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு விதமான காரகத்துவம் என்பது உண்டு. உதாரணத்திற்கு 7ம் வீடு என்பது வாழ்க்கைத்துணையைப் பற்றியும், 10ம் வீடு என்பது அந்த ஜாதகரின் உத்யோகத்தைப்பற்றியும் சொல்லும். இதுபோல ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கிரஹங்களைக் கொண்டும், அந்த பாவக அதிபதியின் நிலையைக் கொண்டும்தான் ஜாதகப் பலன்கள் சொல்லப்படுகின்றன. குண்டலியில் உள்ள வீடுகள் என்றால் ஜாதகத்தில் உள்ள கட்டங்களைக் குறிக்கிறது என்று பொருள் காணலாம்.

?வீட்டருகில் பவளமல்லி மரம் இருப்பது நல்லது என்கிறார்களே, ஏன்?

- பி.கனகராஜ், மதுரை.

பவளமல்லி மரத்தின் பூவினை ``பாரிஜாத மலர்’’ என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமானது, இந்த பாரிஜாத மலர். இந்த மலரை சாதாரணமாக பெண்கள் தலையில் சூடிக்கொள்வதில்லை. இது பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய தெய்வீக சக்தி வாய்ந்த மலர் என்பதால், இந்த மரம் வீட்டிற்கு அருகில் இருப்பது நல்லது என்கிறார்கள். மாலை நேரத்தில், இந்த புஷ்பம் மலரும் நேரத்தில் வருகின்ற நறுமணம் அந்தப் பகுதியையே தெய்வீக சாந்நித்யம் நிறைந்ததாக மாற்றும் தன்மை உடையது.

?அசைவம் சாப்பிடும் நாள் அன்று பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா?

- என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

பூஜை அறையில் காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்ற வேண்டும். காலையில் எழுந்து குளித்துவிட்டு வந்ததும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். அந்த நேரத்திற்குள் நிச்சயம் யாரும் அசைவம் சாப்பிடப் போவதில்லை. பகல் நேரத்தில் அசைவம் சாப்பிட்டிருந்தால், மாலைப் பொழுதில் அந்தி சாயும் நேரத்தில் பூஜை அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக குளித்துவிட்டு வந்து அதன் பின் விளக்கேற்ற வேண்டும். மற்ற நாட்களில் சாதாரணமாக மாலைப் பொழுதில் முகம், கை மற்றும் கால்களை நன்கு அலம்பிவிட்டு நெற்றியில் குங்குமப் பொட்டினை வைத்துக்கொண்டு விளக்கேற்றினாலே போதுமானது. எக்காரணம் கொண்டும் விளக்கேற்றாமல் மட்டும்

இருக்கக்கூடாது.

?சூதகம் என்பது என்ன? இதனை யார் யார் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தீட்டு என்பதுதான் சூதகம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு ஆகியவற்றை

சூதகம் என்ற பெயரில் அழைக்கிறார்கள். பிறப்பு மற்றும் இறப்புத் தீட்டு என்பது பங்காளிகளைப் பொறுத்த வரை 10 நாட்களுக்கு உண்டு. பங்காளிகள் கண்டிப்பாக இந்த சூதகத்தினை அனுஷ்டிக்க வேண்டும். உறவுமுறைக்கு ஏற்றாற்போல் சூதகம் அனுஷ்டிக்க வேண்டிய கால அளவு என்பது மாறுபடும்.

?சோகாடியா முஹூர்த் என்றால் என்ன?

- சாய் பிரசன்னா, கரூர்.

இது வட இந்தியர்கள் பயன்படுத்தும் ஒரு கால அட்டவணை ஆகும். நமது கௌரி பஞ்சாங்கம் போல என்று புரிந்து கொள்ளலாம். பகல் பொழுதின் கால அளவினை எட்டுப் பாகங்கள் ஆகவும், இரவுப்பொழுதின் காலஅளவினை எட்டுப் பாகங்கள் ஆகவும் பிரித்து ஒரு நாளைக்கு மொத்தம் 16 சோகாடியா முகூர்த்தங்கள் குறிக்கப்பட்டிருக்கும். முகூர்த்தம் என்பது தோராயமாக ஒன்றரை மணி நேர கால அளவினைக் குறிப்பது ஆகும். புதிதாக ஒரு வேலையைத் துவக்கும்போது இந்த அட்டவணையைப் பார்த்து இதில் நற்பலன்களைத் தரக்கூடிய நேரத்தினைத் தேர்ந்தெடுத்து ஜோதிடர் குறித்துக் கொடுப்பார். இதைத்தான் அவர்கள் சோகாடியா முஹூர்த் என்று அழைக்கிறார்கள்.

?வெளியில் குபேரயந்திரம், குரு யந்திரம், காயத்ரி விசேஷ யந்திரம் போன்ற யந்திரங்கள் கிடைக்கின்றன. இவைகளை வாங்கலாமா? வாங்கினால் ஏதேனும் பூஜைகளை செய்ய வேண்டுமா?

- பத்ரிநாதன், கோவை.

யந்திரம் என்பது தேவதா ப்ரதிஷ்டைக்குப் பயன்படுவது. ஒரு ஆலயத்தின் சந்நதியில் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர், கீழே ஆதார பீடத்தில் யந்திரத்தை வைத்து ஆவாஹணம் செய்வார்கள். இதுபோக எந்த தெய்வத்தை உபாசனை செய்கிறார்களோ, அந்த தெய்வத்திற்கு உரிய யந்திரத்தை வைத்து வீட்டில் பூஜை செய்து வருபவர்களும் உண்டு. இதற்கு தனியாக குரு மூலமாக மந்த்ர உபதேசம் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக, இதுபோன்று வெளியில் விற்கப்படும் யந்திரங்களை வாங்கிவைப்பதால், எந்த பலனும் இல்லை. யந்திரம் வைத்து பூஜை செய்ய நினைப்போர் அதற்குரிய ஆசார அனுஷ்டானங்களை சரிவர பின்பற்றி நடப்பதோடு, எந்த குருவிடம் மந்த்ர உபதேசம் பெற்றார்களோ, அவரிடமிருந்தே யந்திரத்தையும் பெற்று பூஜை செய்வதே நற்பலன்களைத் தரும். மற்றவை எதிர்மறையான பலன்களையே தரும் என்பதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

?தர்மம் செய்தால் கர்மா குறையுமா?

- த.நேரு, வெண்கரும்பூர்.

முதலில் கர்மா என்றால் அது ஏதோ எதிர்மறையான பலனைத் தருவது என்ற எண்ணத்தை கைவிடுங்கள். கர்மா என்றால் செயல் என்று பொருள். அது புண்ணியகர்மா, பாபகர்மா என்று இரண்டு வகையாகப் பார்க்கப்படு

கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது போல, புண்ணியம் தரும் செயலைச் செய்பவனுக்கு அதன் விளைவாக நற்பலன் கிடைக்கிறது. பாவம் தரும் செயலைச் செய்தவன் அதற்கு ஏற்றாற் போல் கெடுபலனை அனுபவிக்கிறான். தர்மம் என்பது புண்ணியம் தரும் செயல் என்பதால், அவன் வாழ்வு செழிக்கிறது. அதே நேரத்தில் ஒரு தீராத பாவத்தினை செய்துவிட்டு, அதற்கு மாற்றாக தர்மம் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. என்னதான் தர்மம் செய்தாலும், செய்த பாவத்திற்கான சம்பளத்தைப் பெற்றே ஆக வேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.