Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமணத்திற்கு முன் முகூர்த்தக்கால் நடுவது ஏன்?

?இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நீத்தார் கடன் என்ற சடங்கினை சிலர் 3 நாட்களிலும், சிலர் 10 நாட்களிலும், சிலர் 15 நாட்களிலும் செய்கிறார்கள், இதில் எது சரி?

- மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.

குறைந்த பட்சமாக 10 ராத்திரிகள் என்பது கடந்திருக்க வேண்டும். அதற்கு முன்னால் செய்வதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. தற்காலத்தில் மூன்றாம் நாளே செய்வது என்பது பெருகி வருகிறது. இது முற்றிலும் பாவச் செயலே ஆகும். இவ்வாறு 10 நாட்களுக்குள் கரும காரியத்தைச் செய்வதால் எந்த விதமான பலனும் இல்லை. அந்த ஆத்மா இங்கேயேதான் அலைந்து கொண்டிருக்கும். 10வது நாளில் இருந்து 16வது நாளுக்குள்ளாக செய்வது என்பதே சரியானது ஆகும். 12, 13, 14, 15 மற்றும் 16வது நாட்களில் செய்வது என்பது அவரவர் சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டது.

?உயிர் எனும் மூச்சுக்காற்று ஆத்மா என்ற பெயரில் அழிவற்று இருப்பது நிஜம் என்றால் முன்னோர்களின் தர்ப்பண கிரியைகளில் காற்றின் துணைதான் முக்கியமா?

- ஆர்.விநாயகராமன், நெல்லை.

இல்லை. மூச்சுக்காற்று என்பது நின்று விட்டால் உயிர் என்பது இயங்காது, உயிர் பிரிந்துபோய் விடும் என்பதுதான் உண்மை. ஆனால், ஆத்மாவிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. மூச்சுக்காற்று நின்றவுடன் உயிர் போய்விடுகிறது. உயிர் பிரிந்தவுடன் உடல்தான் அழியுமே தவிர, ஆன்மா அழிவதில்லை. அந்த ஆன்மா ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என்று மூன்றாக பிரிகிறது. இந்த அந்தராத்மாவிற்குத்தான் நாம், முன்னோர்களின் ஆன்மா என்ற பெயரில் வழிபாடு செய்து வருகிறோம். இந்த முன்னோர் வழிபாட்டிற்கு எள்ளும் தண்ணீரும்தான் முக்கியம். காற்றின் துணையைவிட இந்த எள்ளுடன் கலந்த நீரைக் கொண்டுதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆக, பஞ்சபூதங்களில் முன்னோர் வழிபாட்டிற்கு நீர் முக்கியம் என்பதால்தான் நீர் நிலைகளில் அதாவது புண்ணிய தீர்த்தங்களில் முன்னோர் வழிபாடு என்பது சிறப்பு பெறுகிறது. காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் என முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் தலங்கள் எல்லாமே நீர்நிலைகள்தான். ஆக, நீரின்றி முன்னோர் வழிபாடு இல்லை என்பதே நிஜம்.

?கல்கி அவதாரம் என்றால் என்ன?

- சு. பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

ஸ்ரீமந் நாராயணனின் பத்தாவது அவதாரமே கல்கி அவதாரம். கல்கி என்றால் முடிவில்லாதவர் என்று பொருள். விஷ்ணுவின் கடைசி அவதாரம் என்பதால் இதனை மஹா அவதாரம் என்றும் சொல்வார்கள். எப்பொழுதெல்லாம் இந்த பூமியில் தர்மம் அழிந்து அதர்மம் என்பது தலையெடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த பூமியைக் காக்க நான் அவதாரம் எடுப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறி இருக்கிறார். சுருங்கச் சொன்னால் கல்கி அவதாரம் என்பது கலியுகத்தின் முடிவில் தோன்றி தீயவர்களையும் அதர்மத்தையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டும் பகவான் நாராயணனின் பத்தாவது அவதாரம் ஆகும்.

?காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது ஓம் நமோ நாராயணா என்றும், மாலையில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது ஓம் நமசிவாய என்றும் கூறச் சொல்வது ஏன்?

- ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

அப்படியெல்லாம் வேறுபாடு என்பது எங்கும் சொல்லப்படவில்லை. ``சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே’’ என்றுதான் ஸ்ம்ருதி சொல்கிறது. ஆக, காலை மாலை இருவேளையிலும் சூரிய நமஸ்காரம் செய்யும்போது சிவ நாமத்தையும், விஷ்ணுவின் நாமத்தையும் சேர்த்தே சொல்லி வழிபடலாம். இதில் எந்தவிதமான வேறுபாடும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

?ஞாபகமறதி விலக யாரை வழிபடலாம்?

- ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அதிலும் ``பிரக்ஞா தட்சிணாமூர்த்தி’’ என்கிற வடிவமே ஞாபக மறதியைப் போக்கும். ``ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரசயச்ச ஸ்வாஹா’’ என்கிற மந்திரத்தை தினமும் 16 முறை உச்சரித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வர ஞாபகமறதித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

?திருமணத்திற்கு முன் முகூர்த்தக்கால் நடுவது ஏன்?

- பி.கனகராஜ், மதுரை.

திருமணம்தான் என்றில்லை. ஆலயத்தில் திருவிழா வருகிறது என்றாலும்கூட விழாவைத் தொடங்குவதற்கு முன்னதாக பந்தக்கால் முகூர்த்தம் என்ற பெயரில் முகூர்த்தக்காலை நட்டுத்தான் விழாவினைத் தொடங்குவார்கள். இது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்முர்த்திகளையும் வழிபட்டு தொடங்குவதாக தாத்பர்யம். மூலதோ பிரஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவ ரூபாய என்று முகூர்த்தக் காலின் அடிப்பாகத்தில் பிரம்மாவையும், நடு பாகத்தில் விஷ்ணுவையும், உச்சியில் பரமேஸ்வரனையும் தியானித்து அவர்களை ஆவாஹணம் செய்து அந்த விழா நடந்தேறும் வரை இவர்கள்தான் பக்கபலமாக துணையிருந்து காத்தருள வேண்டும். அதுவரை எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்துத்தான் முகூர்த்தக்கால் என்பது நடப்படுகிறது.

?எந்த தெய்வத்தை வணங்கினால் முக்தி கிடைக்கும்?

- என்.வி.கோதண்டபாணி குருசாமி, உளுந்தூர்பேட்டை.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தில் நடராஜரை தரிசித்தால் முக்தி, அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். ஆக, இந்த தலங்களின் நாயகன் ஆன பரமேஸ்வரனை வணங்கினால் முக்தி நிச்சயமாகக் கிடைக்கும். இதுபோக ``அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா புரி த்வாரவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயாக’’ என்று ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது அயோத்தி, மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா என்று அழைக்கப்படும் உஜ்ஜைனி மற்றும் துவாரகை ஆகிய ஏழு தலங்களும் மோட்சம் தரவல்லவை என்பது இந்த ஸ்லோகத்திற்கான பொருள். ஆக, வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த தலங்களுக்குச் சென்று நீராடி அங்கிருக்கும் இறை மூர்த்தங்களை வழிபட்டு வந்தாலே மோட்சப்ராப்தி என்பது கிட்டும்.