Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்?

?குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்?

- பரமகுமார், திருநெல்வேலி.

பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பேர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும். இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர், குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஒரு தனியனை எழுதுகின்றார். அழகான தமிழ்.

ஒரு கிளியைப் பார்த்து, ‘‘இங்கே வா, கிளியே, உனக்கு இன்னமுதம் நான் தருவேன். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? திருவரங்கம் பாடவந்த சீர்பெருமாள் குலசேகர ஆழ்வாரை நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் உனக்கு நான் இனிய அமுதத்தைத் தருவேன்.’’

``இன்னமுதம் ஊட்டு கேன்

இங்கேவா பைங்கிளியே

தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமான் - பொன்னஞ்

சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்

குலசே கரனென்றே கூறு’’

திருவரங்க நாதனை பெருமாள் என்று இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் திருவரங்கநாதனைப் பாடிய குலசேகர ஆழ்வாரை, சீர் பெருமாள் என்று குறிப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.

?இசைக்கும் இன்னிசைக்கும் என்ன வித்தியாசம்?

- மகேஷ், சிவகங்கை.

இதுதான் வித்தியாசம். மனிதர்கள் பாடுகின்றார்கள் மனிதர்கள் தலையசைக்கின்றார்கள். அனுபவிக்கிறார்கள். அது இசை. அந்த இசையே தெய்வத்திற்கு சமர்ப்பணம் ஆகிறபோது இன்னிசை ஆகிறது. இன்னும் ஒரு படி மேலே போய்ப் பார்ப்போம். கண்ணன் குழல் ஊதினான். அது இசையா? இன்னிசையா? இசைதான். காரணம் அவன் ஊதிய குழல் இசையில் உயிர்கள் மயங்குகின்றன. ஆடு, மாடு, பறவைகூட அனுபவிக்கின்றன.

``சிறு விரல்கள் தடவிப் பரிமாற

செங்கண் கோட செய்ய வாய் கொப்பளிப்பு

குருவெயர் புருவும் கூடலிளிப்ப

கோவிந்தன் குழல் கொடு ஊதினபோது

பறவையின் கணங்கள் கூடு துறந்து

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப

கறவையின் கணங்கள் கால்

பரப்பிட்டு

செவியாட்டக் கில்லாவே’’

ஆண்டாள் பாடிய பொழுது அந்த கண்ணன் மயங்குகின்றான். எல்லோரையும் மயக்கியவன் யாரோ அவனை மயக்கிய இசை என்பதால் ஆண்டாள் பாடியது இன்னிசை. அதனால் திருப்பாவை முழுவதும் பாடி பாடி பாடி என்று பாடுவதையே பிரதானமாகச் சொல்கிறாள். சிந்திப்பதுகூட அப்புறம்தான். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று சிந்தனையைப் பின்னாடி வைத்துவிட்டாள். கண்ணனை மயக்கிய இசை என்பதால் ஆண்டாள் பாடிய இசை இன்னிசை. அதனால்தான் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்.

?மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் நாம் எப்போது உணர முடியும்?

- லட்சுமி, திருச்சி.

நடைபெறும் விஷயங்களைப் புரிந்து கொண்டு நடப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும்தான் இருப்பார்கள். எந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் கட்டுப் பாட்டில் உள்ளன? எந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதன என்பதைப் பற்றி தெளிவாக இருந்துவிட்டால், நாம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கலாம். நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட, நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் குறித்து நாம் மிக அதிகமாக கவலைப்படுவதன் மூலம், நம்முடைய மகிழ்ச்சியை இழக்கிறோம்.

?ஆராதனம் செய்யும் சாளக்கிராமம் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

- விஜயலட்சுமி, திருத்தணி.

சாளக்கிராமமூர்த்தி இரண்டாக உடைந்து இருந்தால், அந்த இரண்டையும் ஒன்றுசேர்த்து வெள்ளி அல்லது தங்கக் கம்பி அல்லது தாமரைக் கம்பியால் கட்டி பூஜை செய்யலாம். அதை பால், மற்றும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து ஆராதிக்கலாம். ஒன்று சேர்க்க முடியாமல் துண்டு துண்டாகப் போய்விட்ட சாளக்கிராம மூர்த்திகளை ஆறு, குளம், ஏரி, அருவி, சமுத்திரம் இவைகளில் சேர்க்கலாம். புதிய சாளக்கிராமம் வாங்கி பூஜை செய்யலாம். தண்ணீரில் சேர்க்கும் நாளில் உபவாசம் இருப்பது நல்லது.

?ஏகாதசி கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?

- சங்கர், திருச்சி.

விரதம் என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப் போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு. ராமன், அடைக்கலமானவர்களை காப்பாற்றுவதை தன்னுடைய விரதம் என்று குறிப்பிடுகின்றார். (ததாதி ஏ தத் விரதம் மம) எனவே பகவானை நினைப்பது, அடைய முயற்சிப்பது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி வழிபடுகின்ற முறைதான் விரதம். கடவுளைப் பற்றி நினைக்கின்ற பொழுது நமக்கு உணவு பற்றிய சிந்தனை வராது என்பதற்காக எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்கின்ற முறையை வைத்தார்கள். அதில் ஆரோக்கியத்தையும் இணைத்தார்கள். அதனால் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று உள்ளம் பலப்பட்டது. இரண்டு உணவு உண்ணாமல் ஒரு நாள் உபவாசம் இருந்ததால் உடலும் பலப்பட்டது. இதைவிட வேறு என்ன பயன் வேண்டும்?

?தாராளமாக இருப்பது நல்லதா? சிக்கனமாக இருப்பது நல்லதா?

- செல்வம், சென்னை.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, சிக்கனமாகவும் இருக்க வேண்டும் தாராளமாகவும் இருக்க வேண்டும். எதில் தாராளம், எதில் சிக்கனம் என்பது முக்கியம். சிக்கனம் என்பது தேவையில்லாத செலவுகளை செய்யாமல் இருப்பது. தாராளம் என்பது அப்படி மிச்சப்படுகின்ற பணத்தை, தேவை உள்ளவர்களுக்குக் கொடுப்பது. தாராளம் இல்லாத சிக்கனம் பிறர் பொருளின் மீது ஆசையை உண்டாக்கும். சிக்கனம் இல்லாத தாராளம் வீண்பொருள் விரயத்தை ஏற்படுத்தும். எனவே சிக்கனமும் தாராளமும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

?ருத்ராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு?

- சங்கர், சுவாமிமலை.

ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு. 14 முகமுடைய ருத்ராட்சத்தை நீலகண்ட சிவன் என்கிறார்கள். ஒரு முகம் சிவபெருமானையும், இரண்டு முகம் சிவன் பார்வதியையும், மூன்று முகம் அக்னி பகவானையும், நான்கு முகம் பிரம்மாவையும், ஐந்து முகம் காலனை அழித்த சிவனையும் ஆறுமுகம் சுப்பிரமணியரையும் குறிக்கும். பெரும்பாலும் ஒரு முக ருத்ராட்சத்தை சிவனடியார்களும், அறுமுக ருத்ராட்சத்தை முருக பக்தர்களும் அணிந்து கொள்கின்றனர்.