Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பக்தனின் தவத்திற்கு இக்காலத்தில் இறைவன் ஏன் வரம் தருவது கிடையாது?

?மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?

- ரெங்கப்ரசாத், மடிப்பாக்கம்.

மனைவியின் கர்ப்பம் நிலைப்பட்ட நாளில் இருந்து பிரசவம் ஆகும் வரை கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு ``கர்ப்ப தீக்ஷை’’ என்று பெயர். தீக்ஷை என்றால் விரதம் அல்லது கட்டுப்பாடு என்று பொருள். குழந்தை நல்லபடியாக பிரசவிக்க வேண்டியும், குழந்தையின் நலன் கருதியும் அந்த விரதத்தை குழந்தையின் தகப்பன் மேற்கொள்கிறான். குழந்தை பிறந்த 10வது நாளில்தான் சவரம் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிரதிபலனாகத்தான் மகன் ஆனவன் தன் தந்தை இறந்த பின், தலைதிவசம் ஆகும் வரை அதாவது, தன் தந்தை நல்லபடியாக பித்ருலோகத்திற்கு சென்று சேரும் வரை சவரம் செய்து கொள்ளாமல் தீக்ஷையை மேற்கொள்கிறான். இதற்கு ``பித்ரு தீக்ஷை’’ என்று பெயர்.

?பக்தனின் தவத்திற்கு இக்காலத்தில் இறைவன் ஏன் வரம் தருவது கிடையாது?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

உண்மையான தவத்திற்கு எக்காலத்திலும் இறைவன் வரங்களைத் தந்து கொண்டுதான் இருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தால் மட்டும் அதற்குப் பெயர் தவம் அல்ல. ஊன் மறந்து, உறக்கம் மறந்து, சதா சர்வ காலமும் இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக் கொண்டு உடம்பைச் சுற்றி கரையான் புற்று கட்டுவதைக் கூட உணராமல் தவம் செய்பவர்கள் யாரும் இக்காலத்தில் இல்லையே. இதுபோன்று தவம் செய்ய வேண்டிய அவசியமும் கலியுகத்தில் இல்லை. உண்மையான அன்புடன் தன்னலம் கருதாது மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு, இறைவன் என்றென்றும் வரங்களை அள்ளித் தந்துகொண்டு தான் இருக்கிறார் என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

?ஜென்மங்கள், உருவ ஒற்றுமை, வானவில் இப்படி எல்லாமே ஏழு என்கிற எண்ணிக்கையில் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

- வண்ணை கணேசன், சென்னை.

இந்த கேள்விக்கான பதிலை ஒரே வரியில் விளக்கிவிட இயலாது. மிகவும் சூட்சுமமான விஷயம். சாமானியர்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள இயலாது. இதனை விளக்குகின்ற விதமாகத்தான் நம்முடைய முன்னோர்கள் சூரியனுக்கு ஏழு குதிரைகள் என்று சொல்லி வைத்தார்கள். இந்த ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில்தான் சூரியன் பயணிக்கிறார் என்றும், அந்த சூரியனே நமது ஆன்மாவை ஆளுகின்ற ஆன்ம காரகன் என்றும் விளக்கினார்கள். வானவில்லில் தோன்றுகின்ற ஏழு நிறங்களும் சரி, நீங்கள் குறிப்பிடும் ஏழு ஜென்மங்களும் சரி, ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. ஏழு ஜென்மங்கள் உண்டு என்பதை வள்ளுவரும் எழுமையும் ஏமாப்புடைத்து என்று விளக்கியிருப்பார். ஈரேழு பதினான்கு லோகங்களும் இந்த சூட்சுமத்தோடு தொடர்பு உடையதுதான். நாம் வாழுகின்ற இந்த பூமியையும் சேர்த்து நமக்கு மேலாக ஏழு லோகங்கள், நமக்கு கீழாக ஏழு லோகங்கள் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட, ஏழு விதமான குணங்கள் என்பது மனிதனுக்கு அவசியம் தேவை என்கிறார்கள் தத்துவ ஞானிகள். உண்மை, தூய்மை, பணிவு, நம்பிக்கை, சேவை, அன்பு, ஞானம் ஆகியவை எவர் ஒருவரிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் ஆன்ம பலம் பெற்று சூரியனைப் போன்று ஒளி வீசி இந்த உலகத்தைக் காப்பார்கள் என்பதை விளக்குவதுதான் இந்த ஏழு என்ற எண்ணின் அடிப்படை தத்துவம்.

?நரி முகத்தில் விழித்தால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே அப்படியானால் நரிப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து அதன் முகத்தில் விழிக்கலாமா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

இந்த கருத்திற்கு நம்முடைய சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. நாரி என்பது மருவி நரி என்று ஆகிவிட்டது என்றே கருதுகிறேன். நாரி என்றால் பெண். அர்த்தநாரி என்று பெண்ணிற்கு தன்னுடம்பில் சரிபாதி இடம் அளித்த பரமேஸ்வரனுக்கு பெயர் உண்டு. அந்த நாரியின் முகத்தில் அதாவது தனது மனைவியின் முகத்தில் விழிப்பதால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். நரியின் படம் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் உங்கள் மனைவியின் முகத்தில் விழியுங்கள். திருமணம் ஆகாதவர் என்றால் காலையில் எழுந்ததும், உங்கள் தாயாரின் முகத்தைக் காணுங்கள். இதுபோல் நம் நலனை விரும்பும் பெண் ஆகிய நாரியின் முகத்தில் விழித்தால், அந்தநாள் வெற்றியைத் தருகின்ற சிறப்பான நாளாகவே அமையும்.

?நேரம் காலம் பார்த்து பிரசவம் நடைபெறச் செய்வது சரியானதா?

- சுபா, ராமேஸ்வரம்.

இல்லை. பிறப்பையும், இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. ஜனனமும், மரணமும் இறைவனின் செயல். அதனை சரியாக கணிக்க எவராலும் இயலாது. “ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல ஸம்பதாம், பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா” என்ற வாசகத்தினை ஜாதகம் எழுதத் துவங்குவதற்கு முன்பு ஜோதிடர்கள் எழுதியிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அவரவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படியே இந்த ஜென்மத்தில் பிறப்பானது அமைகிறது என்பது நமது இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை. ஒவ்வொரு ஜீவனும் எந்த நேரத்தில் இந்த பூமியில் பிறப்பெடுக்க வேண்டும் என்பதை இறைவனால்தான் நிர்ணயம் செய்ய முடியும்.

?சாதுர்மாதம் என்றால் என்ன? ஏன் அன்று முதல் நான்கு மாத காலம் வரை விரதம் இருக்க வேண்டும்? யார் யாரெல்லாம் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

- அட்சயா, கோவை.

சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு வரும் சாந்த்ரமான மாதங்களில் ஆஷாட மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் துவங்கி ச்ராவண, பாத்ரபத, ஆஸ்வீஜ மாதங்களைத் தொடர்ந்து வரும் கார்த்தீக மாதத்தின் வளர்பிறை ஏகாதசி வரை உள்ள நான்கு மாத காலத்திற்கு ``சாதுர்மாஸ்யம்’’ என்று பெயர். பெரும்பாலான இந்து பண்டிகைகள் இந்த நான்கு மாத காலத்தில்தான் வரும். இந்த காலத்தில் உணவு கட்டுப்பாடு என்பது தேவை என்று வகுத்து வைத்திருக்கிறார்கள். சந்யாசிகள் மட்டும் கடைபிடிக்கும் விரதமாக இதனைப் பார்க்கிறார்கள். உண்மையில் எல்லோருமே இந்த விரதத்தினை மேற்கொள்ள வேண்டும். தற்காலத்தில், மத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பெரும்பாலும் இது குறித்த புரிதல் இல்லை. முதல்மாதத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களையும், இரண்டாவது மாதத்தில் தயிரும் மோரும், மூன்றாவது மாதத்தில் பாலும், நான்காவது மாதத்தில் நெய் மற்றும் பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இது அந்தந்த காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையையும் விளைகின்ற பொருட்களின் தன்மையையும் கொண்டு சொல்லபட்ட விஷயம் ஆகும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.