Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இறைவனுக்கு எதற்கு இடைத்தரகர்கள்?

அந்த ஞானியைச் சுற்றி ஒரே கூட்டம். அவர் முகத்தைக் காண மக்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள்.பூக்கள், பழங்கள், பணம் என்று ஏராளமான காணிக்கைப் பொருள்கள் மகானின் காலடியில் குவிக்கப்படுகின்றன.அவர் என்ன இறைவனா?

‘இல்லை’ என்று அங்கு குழுமியிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். பிறகு ஏன் அவருடைய தரிசனத்திற்குக் காத்துக் கிடக்கிறார்கள்?ஒரு பக்தரிடம் கேட்டேன். “இவர்தான் உங்கள் இறைவனா?”

“அதெல்லாம் இல்லீங்க.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்திக்க முடியுமா? இவர்களைப் போன்ற மகான்கள் மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும்.”அதாவது, இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் ‘இடைத்தரகர்’ இருந்தால்தான் அவர் மூலம் இறையருளைப் பெற முடியும் என அப்பாவி மக்கள் மட்டுமல்ல, படித்தவர்களும்கூட நம்புகின்றனர்.மக்களின் இந்த நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ‘மதகுருக்கள்’ சிலர் கொள்ளை லாபம் அடைகின்றனர். மகான் அல்லது துறவி என்று சொல்லிக்கொண்டே குறுநில மன்னர்களைப் போல் சொகுசாக வாழ்கின்றார்கள்.

உலகில் ஏராளமான குட்டித் தெய்வங்களும் போலி குருக்களும் தோன்றுவதற்கு மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் காரணம். இந்த மூடநம்பிக்கையின் ஆணிவேரை இரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு சொற்றொடர் மூலம் தகர்த்தெறிந்துவிட்டது திருக்குர்ஆன்.“திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கிறான். (பிரார்த்தனைகளுக்கு) விடை அளிப்பவனாக இருக்கிறான்.” (குர்ஆன் 11:61)‘இறைவன் உங்களைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறான் எனும் உங்களின் கருத்து தவறு; அவனை நீங்கள் நேரடியாக அழைத்து, உங்கள் இறைஞ்சுதல்களுக்குப் பதில் பெற முடியாது எனும் எண்ணம் தவறானது.

‘உங்கள் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இறைவன் இருக்கிறான். நீங்கள் அவனுடன் பேச முடியும். உங்களுடைய பிரார்த்தனைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும். தன் அடியார்களின் இறைஞ்சுதல்களுக்கு இறைவனே பதில் அளிக்கிறான். இந்தப் பேரண்டத்தின் மாபெரும் ஆட்சியாளனான இறைவனின் திருச்சந்நிதி எப்போதும் மனிதர்களுக்குத் திறந்தே இருக்கிறது. ஆகவே அவனை அடைய, அவனுடைய திருவருளைப் பெற இடைத்தரகர்களையும் மதகுருக்களையும் குட்டித் தெய்வங்களையும் தேடித் திரியும் மடமையில் ஏன் உழல்கிறீர்கள்’ என்று இறுதி வேதம் கேட்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று ஆன்மிகம் தொடங்கி அரசியல் வரை எத்தனை எத்தனை தெய்வங்கள்!இந்த ஒரே ஒரு திருவசனத்தை மட்டும் மனிதர்கள் வாய்மையாகப் பின்பற்றினால் உலகிலுள்ள அத்தனை போலித் தெய்வங்களும் காணாமல் போய்விடும்.உண்மையான ஆன்மிக வழியில் மனித வாழ்வு தழைத்தோங்கும்.

இந்த வார சிந்தனை

“அவன் (இறைவன்) மாபெருங்  கருணையாளன். தனிப்பெரும் கிருபையாளன். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 1:2-3)

சிராஜுல் ஹஸன்.