Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

எனக்கு சொர்க்கம் வேண்டாம் என்று ஏன் தருமர் சொன்னார்?

ஆன்மிகத்தில் நாய் என்ற விலங்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கிறது. சிவபெருமான் நாய்களைப் பிடித்து வருகின்ற பொழுது அது வேதத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகிறது. அதே நாயைக் காப்பதற்காக ஒருவன் தன் உயிரையும் தருவதற்குத் தயாராகின்றபோது, அது ஒரு ஜீவாத்மாவின் நிலையில் வைத்துக் கருதப்படுகிறது.

நாயோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் நமது சமய இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது மகாபாரதத்தில் நாயோடு தொடர்புடைய ஒரு காட்சியைக் காண்போம். போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் வெகுகாலம் ஆட்சி செய்கிறார்கள். அப்பொழுது அவர்கள் பகவான் கண்ணன் தன்னுடைய அவதார வைபவத்தை முடித்துக்கொண்டு வைகுண்டத்துக்கு திரும்பி விட்டார் என்பதை கேள்விப்படுகின்றனர்.

தங்களுக்கு வழிகாட்டியும் நண்பனுமாக, தங்கள் இன்ப துன்பங்களில் பங்கெடுத்த கண்ணனைப் பிரிந்த பிறகு, இந்த உலகத்தில் வாழ்வதற்கு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆட்சியை அபிமன்யுவின் குமாரனான பரிஷித்துவிடம் ஒப்படைத்துவிட்டு, வடக்கே புறப்படுகின்றனர். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்து வந்த நாயும் உடன் சென்றது.

தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது. இமயமலையை அடைந்து, மேரு மலையைத் தரிசித்தனர். அப்போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்து விட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான்.

தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.”

சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்.

“சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன்.

“தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் போய்க் கொண்டிருந்தான்.

அடுத்து நகுலன் வீழ்ந்தான்.

பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன்.

அடுத்து அர்ச்சுனன் விழுந்தான்.

“தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க் கொண்டிருந்தான்.

தனக்கும் முடிவு வந்ததை பீமன் உணர்ந்தான்.

“என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான்.

“உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.

இத்தனைக்குப் பிறகும் தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது. மலையின் உச்சியை அடைந்தான். அங்கே ஒளி வீசும் விமானம் ஒன்று வந்து நின்றது. தேவேந்திரன் இறங்கி வந்தான். ‘‘தருமா...! உன்னை அழைத்துச் செல்லவே நான் வந்தேன். விமானத்தில் ஏறு. சொர்க்கம் போகலாம்.’’

தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது.

“நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

தருமன் திகைத்தான். நொடியும் தாமதிக்காது சொன்னான். ‘‘அப்படியானால் உன்னோடு நானும் வரவில்லை.

‘‘நீ வருவதற்கு தடையில்லை. ஏன் மறுக்கிறாய்?’’

தருமன் சொன்னான்.

“என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்?” என்றான்.

அப்போது நாய் மறைந்தது. அங்கே தருமதேவன் நின்றான். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறி விட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தருமதேவன் மறைந்தார்.

இங்கே நாய் உருவில் தருமமே காட்டப்படுகிறது.

இன்னொரு கதை. தாமிரபரணிக் கரையில் நடைபெற்றது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரி. அந்த ஊருக்கு இன்னொரு பெயர் திருக்குருகூர். அதன் இன்னொரு கரையில் காந்தீசுவரம் என்ற சிவத்தலம் உள்ளது. காந்தீசுவரத்தில் கரூர் சித்தர் வாழ்ந்திருக்கிறார் அவரிடம் ஒரு நாய் இருந்தது.

நாள்தோறும் அந்த நாய் வைணவப் பெரியவர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு திரும்பி வரும். இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் வெகு நேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் மனம் வருந்தினார், யோகி. நாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தூரத்தில் நாய் வருவது தெரிந்தது. அதேநேரம் வெள்ளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே... எப்படி நீந்தி வரும் என்று கவலைப்பட்டார்.

அந்த நாய் நட்டாற்றில் வந்து கொண்டிருந்தபோது, சுழலில் மாட்டிக் கொண்டது. வெள்ளத்தை எதிர்த்து நாய் ஆனமட்டும் நீந்திக் கரையைக் கடக்க முயன்றது. ஆனால், வெள்ளத்தை அதனால் கடக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அதன் கால்களும் ஓய்ந்து விட்டன. அது நீரில் மூழ்கி மேலே வந்தது. வயிறு நிறைய ஆற்று நீரையும் குடித்து விட்டது. அதனால் நாயின் மண்டை வெடித்தது. அந்த மண்டையின் வழியே நாயின் ஆத்மா பேரோளியுடன் எழுந்து விண்வெளி நோக்கிச் சென்றது. அதைக் கண்ட யோகி பெரும் வியப்படைந்தார்.

நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ‘எதனால் அதற்கு வீடுபேறு கிடைத்தது?’ என்று சிந்தித்தார்.

ஆழ்வார் திருநகரியில் தினமும் ஆழ்வாரின் திருவாய்மொழி ஓதும் அடியார்களின் பிரசாதத்தை (பாகவத சேஷம்) உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்தப் பேறு கிடைத்தது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் மனம் உருகி கண்களில் நீர் மல்கியது. அந்த நிகழ்வை ஒரு பாடலாகப் பாடினார்.

வாய்க்கும் குருகைத்

திருவீதி எச்சிலை வாரி உண்ட

நாய்க்கும் பரமபதம் அளித்தாய்

அந்த நாயோடு இந்தப்

பேய்க்கும் பதம் அளித்தால்

பழுதோ? பெருமாள் மகுடம்

சாய்க்கும்படி கவி சொல்லும்

ஞானத் தமிழ்க் கடலே!

இன்னொருசெய்தி. பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் 1876ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் அவதரித்தவர்..

‘‘இறைவன் அளித்த வாழ்வு பிறர்க்குப் பயன்படுவதற்காகவே’’ என்ற குறிக்கோளுடன், பசிப்பிணி போக்குவதற்கும், உடற்பிணி போக்குவதற்கும் தனது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தியவர். ‘‘இறைவனுடைய குடில்’’ என்று சொல்லப்படும் ஆலயங்களையும் சீர்செய்து பக்தி மணம் பரப்பினார்.

அவர் நாய்களின் மீது காட்டிய அன்பும் அபிமானமும் அற்புதமானது. தாம் உணவு உண்ணும் முன்னதாக ஒரு கவளத்தை உருட்டி நாய்க்கு வைத்து அது உண்ட பின்பே தாம் உண்ணும் வழக்கம் அவரிடம் இருந்தது.

வெகு தொலைவில் இருப்பார். இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் வேண்டினால், அடுத்த நொடியில் அதே நாய்களுடன் கண் முன்பு தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு வைத்து, இவர் அழைத்தவுடன் எங்கிருந்தோ பெரும் திரளாக நாய்கள் தோன்றி வந்து உண்டுவிட்டுப் போகும் அதிசயங்களும் நிகழ்ந்தது உண்டு. சுவாமிகள் நாய்களை மனிதர்களாக மட்டுமல்ல மகான்களாகவே நடத்தினார்.