வைணவத்தில், பராசரபட்டர் ஒரு பேரறிஞராகத் திகழ்ந்தார். எதையும் வாழ்வியலோடு இணைத்து நுட்பமாகச் சொல்வதில் வல்லவர். அவருடைய இளமையில் ஒரு சம்பவம்...
பல்வேறு விருதுகளை வாங்கி, அந்த புத்தக அறிவையே தன்னுடைய உண்மையான அறிவாகக் கருதிக்கொண்ட ஒருவர், பல்லக்கில் தனக்குரிய பல்வேறு பட்டங்களை ஓதிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். மகாபண்டிதர் என்று அவரை எல்லோரும் அழைத்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பராசரபட்டர்;
‘‘மகாபண்டிதர் என்று சொல்லுகின்றார்களே, நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்வீர்களா?’’ என்று கேட்டவுடன், இந்தச் சின்னப் பிள்ளை நம்மிடம் கேள்வி கேட்பதா? என்ன பெரிதாகக் கேட்டுவிடப் போகிறது? கேள் என்று சொன்னவுடன், சட்டென்று குனிந்து தம்முடைய கையில் மண்ணை எடுத்து;
‘‘எத்தனை மண் வைத்திருக்கிறேன் சொல்லுங்கள்’’ என்று சொன்னவுடன் மகாபண்டிதர் குழம்பிப்போனார். மண்ணை எண்ணி யார் கணக்குச் சொல்வது என்பதால் திகைத்துப்போனார்.
‘‘இதெல்லாம் கேள்வியா? இப்படி அசட்டுத்தனமாக யாரிடமும் கேள்வி கேட்காதே.’’ பட்டர் சொன்னார்,
‘‘உமக்குப் பதில் தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டுப் போக வேண்டும். அதை விடுத்து கேள்வி சரியில்லை என்று எப்படிச் சொல்லலாம்’’ என்றார். உடனே மகாபண்டிதர்;
‘‘சரி இத்தனைப் பேசுகிறாயே, உனக்குப் பதில் தெரியுமா?’’ என்று கேட்ட வுடன், பட்டர் தெரியும் என்றார்.
‘‘எங்கே சொல்?’’ உடன் சற்றும் தயங்காமல்
‘‘கைப்பிடி மண் வைத்திருக்கிறேன்’’ என்றார். ஒவ்வொரு மண்ணாக எண்ணிச் சொல்வது மட்டும் அளவை அல்ல. ஒரு பிடி, இரண்டு பிடி மண் கொண்டுவா என்று சொல்வதில்லையா? நான் வைத்திருப்பது ஒரு பிடி மண்.
‘‘மகாபண்டிதர், தான் பல்லக்கில் இருந்து கீழே இறங்கி பராசரபட்டரை பல்லக்கில் வைத்து இந்த விருதுகளுக்கு எல்லாம் தகுதியானவன் நீதான்’’ என்றார். அப்படிப்பட்ட பராசரபட்டரிடம் ஒருமுறை ஒருவர் கேள்வி கேட்டார், சாதாரண பாகவதர்கள் ``தாங்கள் இந்த பிறவிக்குப் பின்னால் வைகுந்தம் செல்வோம் என்கிறார்களே, வைகுந்தப் பதவி என்பது பிரம்மாதி தேவர்களுக்கும் கிடைக்காத பதவி அல்லவா? வெகு காலம் தவம் செய்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களாலேயே வைகுந்தம் செல்ல முடியாத பொழுது, இந்த எளிய பாகவதர்கள் நாலு பாசுரங்களைத் தெரிந்துகொண்டு தங்களுக்கு வைகுந்தம் கிடைக்கும் என்று எப்படி நம்புகிறார்கள்? அதுவும் இந்த பிறவியிலேயே வைகுந்தம் கிடைக்கும் என்பது சாத்தியம்தானா?’’ பராசரபட்டர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்;
‘‘நீங்கள் கேட்கின்ற கேள்வி சரிதான். ஆனால் இந்த எளிய பாகவதருக்குத்தான் வைகுந்தம் கிடைக்கும். இந்திராதி தேவர்களுக்குக் கிடைப்பது துர்லபம். அப்படிக் கிடைத்தாலும் அவர்கள் இந்திரலோகத்தில் இருந்தோ, சந்திரலோகத்திலிருந்தோ வைகுந்தம் போகமுடியாது. அவர்கள் மனிதராகப் பிறந்து, இங்கேயே வாழ்வாங்கு வாழ்ந்து, இறைவனை வணங்கி வழிபட்டு, சரணாகதி அடைந்து, தன்னையே அவனிடத்தில் ஒப்படைத்தால், அதன் பிறகுதான் வைகுந்தம் செல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். அதனால்தான் நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’’ என்று சொல்லிவைத்தார். விண்ணவர் விதியே என்று சொல்லவில்லை. உடனே கேள்வி கேட்டவர்,
‘‘இதை இன்னும் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. அது எப்படி தவம் செய்து உயர்ந்த பதவியை அடைந்த இந்திரன், பிரம்மன் போன்ற தேவர்களுக்கு வைகுந்தம் கிடைக்காமல் போய்விடும். மனிதர்களைவிட அவர்கள் உயர்ந்த படி நிலையில் உள்ளவர்கள் தானே. அவர்கள்தானே விலங்கு, மனிதர், தேவர் என்ற வரிசையில் முன்னால் நிற்கிறார்கள். அப்படி இருக்கும் போது மனிதர்களுக்கு உயர்ந்த நிலை எப்படி கிடைக்கும்?’’ என்று கேட்டார்கள். இங்கேதான் வாழ்வியலின் நுட்பமான சூத்திரம் அமைந்திருக்கிறது. பராசர பட்டர் விளக்கினார்.
“அவர்கள் முயன்றார்கள். தவம் செய்தார்கள். இந்திரன் போன்ற உயர்ந்த பதவிகளை அடைந்தார்கள். (இந்திரன் பிரம்மன் எல்லாம் பதவிகள். கலெக்டர், அமைச்சர் போல)
ஒருவன் பெரிய அளவிலே அதிகாரத்திலும் வசதிகளிலும் உயருகின்ற பொழுது, அவர் அடைந்த உயர்வுக்கு ஏற்ற அகங்காரமும் சேர்ந்து வந்துவிடும். பணமோ, பட்டமோ, பதவியோ சேருகின்ற பொழுது, இதுதான் நிச்சயம் நிரந்தரம் என்று ஒரு முடிவுக்கு வந்து, தங்களை, அந்த பணம் பதவிகளில் இழந்து விடுகின்றார்கள். அடக்கம் போய்விடுகிறது. அதனால்தான் இந்திரன், மகாலட்சுமியின் மாலையைக் கூட யானையின் மீது தூக்கிப் போட்டு அலட்சியப்படுத்தி தன்னுடைய செல்வங்களை ஒரே நொடியில் இழந்தான்.
வாழ்விலும் நீங்கள் பார்க்கலாம். பணமும் அதிகாரமும் சேரச்சேர அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுய இயல்பிலிருந்து மாறி அகங்காரம் என்கிற நிலைக்குப் போய்விடுவார்கள். அதை அவர்களாலேயே தடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இறைசக்தியிலிருந்து விலகி விடுவார்கள். ஆனால், எளிய பக்தர்களுக்கு இது எதுவுமே இல்லை. பெரும் செல்வமோ அதிகாரமோ இல்லாததால், அவர்கள் அதைக் குறித்து கவலைப் பட்டுக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களுடைய சூழலே அடக்கத்தையும் எளிமையையும் தந்துவிடும். அகங்காரம் அவர்களிடத்தில் சேராது. அகங்காரம் இல்லாவிட்டால் எளிதாக உயர்ந்த நிலையை அடைந்து விடுவார்கள். பகவான் வைகுந்தம் தருவான் என்கின்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு. இந்திராதி தேவர்களுக்கு சொர்க்கலோகமே பெரிய பதவியாகத் தெரிவதால் அவர்கள் வைகுந்தம் தந்தாலும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் இந்திராதி தேவர்களுக்குக் கிடைக்காத பதவி, பாகவதர்களுக்கு மண்ணுலகில் கிடைத்துவிடும்.’’ திருவள்ளுவரும், மிக அழகாக விளக்குகின்றார் ஒரு குறட்பாவில்.
``யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்’’
யான் என்பது அகங்காரம். எனது என்பது மமகாரம்.
இந்த இரண்டையும் சேர்ந்தாரைக் கொல்லி என்பார்கள். இது ஒருவரிடத்தில் சேரச் சேர, அவருடைய இயல்பான குணநலன்கள் குன்றிவிடும். பல நேரங்களில் மிகப்பெரிய செல்வமும் பதவியும் பாவம் செய்யத் தூண்டும். இதை ஆழ்வார்,
``கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும்
இவையென்ன உலகியற்கை?’’
- என்று பாடுகிறார்.
நல்லது செய்தால், அதனுடைய விளைவுகளை நன்மையாக அனுபவிப்பது போல, பாவத்திற்கும் விளைவுகளை அனுபவித்துத் தானே தீரவேண்டும். எனவே தேவர்களுக்கு அவர்கள் பதவியே அகங்கார மாமகரங்களால் (யான் எனது என்னும் செருக்கால்) விரோதமாகி கீழே இறக்கிவிடுகிறது. அவர்கள் உயர்ந்த நிலையான வைகுந்தம் பெறுவது தடைப்பட்டு விடுகிறது.
சமய உலகில் சொர்க்கலோகத்தைவிட சிறந்தது, பரமபதம். அது விண் நாட்டிலும் உயர்வான மேல் நாட்டில் இருக்கிறது (வானோர்க்கும் உயர்ந்த உலகம்). அகங்கார மமகாரங்கள் இல்லாததினால், ஒரு எளிய பக்தன் மிக எளிதாக வைகுந்தமாகிய உயர்ந்த நிலையை, இப்பிறவிக்குப் பின்னால் பெற்றுவிடுவான் என்பதைத்தான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.