?கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாதாரண நாட்களில் சென்று வணங்கினால் பலன் கிடைக்குமா?
- வண்ணை கணேசன், சென்னை.
நிச்சயம் பலன் கிடைக்கும். சாதாரணமாக தினந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருபவர்களும் உண்டு. அவ்வாறு தினந்தோறும் கோயிலுக்குச் செல்பவர்கள் விசேஷ நாட்களில் கூட்டத்தினைக் கருத்தில் கொண்டு சந்நதிக்குச் செல்லாமல் வெளிப் பிராகாரத்தை மட்டும் சுற்றி வந்து வணங்கிவிட்டு திரும்புவார்கள். மற்ற நாட்களில் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் விசேஷ நாட்களில் மட்டுமாவது ஆலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டு வரலாமே என்ற எண்ணத்தில் கூட்டமாக ஆலயத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். விசேஷ நாட்களில் மட்டும் ஆலயத்திற்கு வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓய்வாக இருப்பவர்கள் சாதாரண நாட்களில் சென்று வழி
படுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. நிச்சயமாக முழுமையான பலன் என்பது கிடைக்கும்.
?பாவை நோன்பை யார் யார் செய்யலாம்?
- கே.முருகன், பழனி.
பெயரிலேயே விடையும் உள்ளதே. பாவைநோன்பு என்பது மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். கன்னிப் பெண்கள் விடியற்காலையில் நீராடி ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடல்களையும் மாணிக்கவாசகர் பெருமான் இயற்றிய திருவெம்பாவைப் பாடல்களையும் பாடி இறைவனை வழிபட்டு இந்த நோன்பினை மேற்கொள்வார்கள். இந்த நோன்பின் மூலம் பெண்கள் நல்ல குணவான் ஆன கணவனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பாவை நோன்பு என்பது மிகவும் தொன்மையானது என்றும் இது தை நீராடல் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் காணப்படுவதாகவும் வரலாற்றுக் குறிப்பும் உண்டு.
?பலவகை ராசிக்கற்கள் பதித்த மோதிரங்கள் அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்கிறது?
- என். இளங்கோவன், மயிலாடுதுறை.
ஜோதிடர்கள் நவகிரகங்களின் தாக்கம் பெற்ற ஒரு சில கற்களை வகைப்படுத்துகிறார்கள். சூரியனுக்கு மாணிக்கம், சந்திரனுக்கு முத்து, செவ்வாய்க்கு பவழம், புதனுக்கு மரகதம், குருவிற்கு கனகபுஷ்பராகம், சுக்ரனுக்கு வைரம், சனிக்கு நீலம், ராகுவிற்கு கோமேதகம், கேதுவிற்கு வைடூரியம் என்று அந்தந்த கற்கள் அந்தந்த கிரஹங்களின் தாக்கம் பெற்றவை என்று சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் பலம் தேவையோ அந்த கிரகத்திற்குரிய கற்களை மோதிரமாக அணிந்துகொண்டால் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் வலிமை கிடைப்பதாகவும் அதன் மூலம் அந்த கிரகத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் முழுமையாக வந்து சேர்வதாகவும் அதனை ஈர்த்துக் கொடுக்கும் பணியை இந்த கற்கள் செய்வதாகவும் நம்பப்படுகிறது.
?சண்டிகேஸ்வரர் சந்நதியில் சிலர் கைதட்டுவதும் சிலர் நூல் போடுவதும் செய்கின்றனர்? இவற்றில் எது சரியானது?
- ம. ஸ்ரீகிருஷ்ணா, மயிலாடுதுறை.
இரண்டுமே சரியில்லை. பஞ்சமூர்த்திகளில் ஒருவராக சண்டிகேஸ்வரரும் இடம்பெற்றுள்ளார். சிவன் சொத்தினைக் காக்கும் கணக்காளராக இவரைக் கருதுவதால் ஆலயத்திற்கு வந்துவிட்டுச் செல்லும்போது அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பது போல் அவரது சந்நதிக்கு முன்னால் கைகளைத் தட்டிக் காண்பிப்பது போல் இந்த பழக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இன்னும் சிலர் சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பதால் அவருக்கு காது கேட்காது என்றும் கைகளை தட்டி நம் பிரார்த்தனைகளை அவரிடத்தில் முன்வைக்கும்போது நம் சார்பாக அவர் அதனை இறைவனிடத்தில் எடுத்துக் கூறுவார் என்றும் சொல்வார்கள். இந்தக் கருத்தினில் அவர் தியானத்தில் இருப்பவர் என்பது மட்டுமே சரி. அவரது தியானத்தைக் குலைக்கும் வகையில் நிச்சயமாக கைகளைத் தட்டக் கூடாது. வலதுகையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் இந்த மூன்று விரல்களையும் ஒன்றிணைத்து இடது உள்ளங்கையின் மேல் வைத்து வழிபடுவது என்பது சிவாகம முத்திரை வழிபாடுகளில் ஒன்று. அதனை ஆகமம் கற்றறிந்த அர்ச்சகர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அதனைப் பார்த்து நாமும் அதுபோல் செய்யக் கூடாது. அதேபோல் நம் ஆடையில் உள்ள நூலைப் பிரித்து அவர் சந்நதியில் போடுவதால் ஆடைகள் பெருகும் என்று சொல்வதும் மூடநம்பிக்கையே. நிச்சயமாக இதுபோன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
?உலகிலேயே மிகக் கொடிய பாவங்கள் எவை?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பஞ்சமாபாதகங்கள் என்று சொல்வார்கள். பிரம்ம ஹத்யா, சிசு ஹத்யா, ஸ்வர்ணஸ்தேயா, சுராபானா, குருதல்பகமனா இதி பஞ்சமாபாதகா: என்று சாஸ்திரம் சொல்கிறது. அதாவது ஒழுக்கம் நிறைந்த பிராமணனை அல்லது பிரம்மத்துவத்தை கடைபிடித்து வரும் ஆன்மிகவாதிகளை கொலை செய்வது அல்லது அவர்கள் மனம் கோணும்படி நிந்திப்பது அவர்களது சொத்துக்களை அபகரிப்பது பிரம்மஹத்யா என்று அழைக்கப்படுகிறது. இது கடுமையான பிரம்மஹத்தி தோஷத்தைத் தந்துவிடும். குழந்தைகளைக் கொல்வது அல்லது கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பது சிசு ஹத்யா ஆகும். ஸ்வர்ணஸ்தேயா எனும் தங்கத்தைத் திருடுதல், சுராபானா எனும் மனதினை மயக்கி மூளையைத் தடுமாறச் செய்யும் மதுவினை அருந்துதல் ஆகியவையும் மகா பாதகச் செயல்களே. கடைசியாக குருவின் பத்தினி தாய்க்கு சமானம் என்பதால் அவரை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது அல்லது குருபத்னியை மானபங்கப்படுத்துவது என்பதும் மன்னிக்கவே முடியாக மாபெரும் பாதகமாகவும் பார்க்கப்படுகிறது. மேற்சொன்ன ஐந்துமே இந்த உலகில் மிகக் கொடிய பாவங்கள் என சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
?திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அந்த வேண்டுதலை நிறைவேற்ற இக்கோயிலில் செய்யலாம் என்று பல கோயில்களிலும் சொல்கிறார்களே, உண்மையா? அப்படிச் செய்யலாமா?
- கு. குருராஜன், திருச்சி.
கூடாது. இதுவும் திருப்பதிக்கு இணையான ஸ்தலம்தான், இங்கும் இந்த இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நீங்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றலாம் என்று சொல்லலாமே தவிர, திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட நேர்த்திக்கடனை இந்த ஆலயத்தில் செலுத்துங்கள் என்று சொல்வதை ஏற்க இயலாது. எந்த ஆலயத்திற்காக வேண்டிக் கொள்கிறோமோ அங்குதான் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
?மனநோய் சித்தபிரமை வராமலிருக்க எந்த கடவுளை வணங்குவது சிறந்தது?
- த. சத்யா, சென்னை.
ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டு வருவது நல்லது. மனோபலம், புத்தி பலம், உடல்பலம் அனைத்தும் ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஒரு சேரக் கிடைக்கிறது. ஏற்கனவே மனநோய், சித்தபிரமை, பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் எனில் சரபேஸ்வரர் வழிபாடு என்பது உகந்தது. சரபேஸ்வரரை வழிபடு வதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து முழுமையாக குணம் பெற இயலும்.