Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தெளிவு பெறுஓம்- ?சுதர்சன ஜெயந்தி எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

- வி.ராஜசேகரன், மதுராந்தகம்.

ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும். ?எல்லா கோயில்களிலும் சுதர்சனருக்குத் தனிச் சந்நதி உண்டா?- வா.நடராஜன், சென்னை.

சில கோயில்களில் ஸ்ரீ சுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில் ஸ்ரீ சுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னி க்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள் - பதினாறு திவ்யாயுதங்களுடன் சேவை சாதிப்பார்! அவரது திருவுருவின் பின்னால் நரசிம்மர் இருப்பார்!

ஒரு ஷட்கோண (அறு கோணம்) சக்கரத்தின் மத்தியில் சக்கரத்தாழ்வாரும், பின்பக்கம் த்ரிகோண (முக்கோணம்) சக்கரத்தின் மத்தியில் யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் திருமால் ஆலயங்களில் பெருமாளுக்கு வலதுபுற சந்நதிகளிலும் ஒருசேர சேவிக்கலாம்.

?பொதுவாக பெருமாள் கோயில்களில் ஒரு தாயார் தானே மூலவர் இருப்பார். ஸ்ரீ ரங்கத்தில் தாயார் சந்நதியில் இரண்டு தாயார்கள் இருக்கிறார்களே அது என்ன தாத்பர்யம்?

- வித்யா லட்சுமி, ஸ்ரீ ரங்கம்.

ஸ்ரீ ரங்கம் தாயார், சந்நதியில் கர்ப்பகிரகத்தில் இரண்டு தாயார்கள் இருப்பார்கள். அதில் ஒரு தாயார் அன்னியர்கள் படையெடுப்புக்குப் பின்னால் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மற்றொரு தாயார் அந்தப் படையெடுப்பு நிகழும் போது அவர்கள் கையில் கிடைக்கக்கூடாது என்ற காரணத்தால் சுற்றுப்புறத்தில் உள்ள வில்வ மரத்தின் பக்கத்தில் துளசி மாடத்தில் பூமிக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்டவர் இந்த படையெடுப்பு முடிந்தபின் பூமியில் இருந்த தாயாரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் அப்போது கிடைக்கவில்லை வருந்தி வேறொரு தாயார் திருமேனியைத் தயாரித்து பிரதிஷ்டை செய்தனர். பிறகு சில வருடங்கள் கழித்து ஸ்ரீ ரங்கநாதர் திரும்பி வந்தபின் முதல் தாயார் தோன்றினார் அதனால் அவரையும் பழையபடி அவரது ஸ்தானத்திலேயே பிரதிஷ்டை செய்து வைத்தனர்.

?சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? திருமணப் பொருத்தத்தில் இதை முக்கியமாகப் பார்க்கிறார்களே?

- சாரதா மணிகண்டன், அரக்கோணம்.

திருமண பொருத்தத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான ஜாதக கட்ட பொருத்தங்களில் இதுவும் ஒன்று. உதாரணமாக பெண்ணின் லக்கினத்திற்கு ஆணின் லக்னம் எட்டு அல்லது ஆறாக வந்தால் அதற்கு சஷ்டாஷ்டக தோஷம் என்று பெயர். பலர் இதை ராசிக்கு மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் நடைமுறையில் லக்னத்திற்கும் பார்க்க வேண்டும். ஒருவருடைய எண்ணமும் சிந்தனைகளும் மற்றவரின் எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் பொருத்தமாக இருக்குமா என்பதை குறிப்பிடுவது இது. இருவருடைய லக்னமும் ராசியும். எட்டு அல்லது ஆறாக வந்தால் தோஷம். இதிலும் விதி விலக்குகள் உண்டு. மேஷத்திற்கு விருச்சிகம் 6/8 என சஷ்டாஷ்டகமாக வந்தாலும் இரண்டு ராசிக்குரியவரும் ஒருவர்தான் (செவ்வாய்) என்பதால் இணைக்கலாம். அதைப்போலவே ரிஷப துலா லக்னங்கள். (இருவருக்கும் சுக்கிரன்)

?ஜேஷ்டாபிஷேகம் என்றால் என்ன?

- எம்.கார்த்திக், திருவள்ளூர்.

மாதங்களில் ஆனி மாதத்திற்கு ஜேஷ்ட மாதம் என்று பெயர். மாதங்களிலேயே பெரிய மாதம் இது. அதிக பகல் கொண்ட மாதம் இது. அதனால் சூரியன் இந்த மாதத்தைக் கடப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கின்றது. இந்து காலக் கணிதத்தின் படி உத்தராயண காலத்தின் இறுதி மாதமாக ஆனி மாதம் வருகின்றது. இது தேவர்களுக்கு மாலை காலமாகும். எனவே இக்காலத்தில் செய்யப்படுகின்ற கோயில் விழாக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இந்த மாதத்தில் வைணவக் கோயில்களில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஜேஷ்ட நட்சத்திரம் என்றால் கேட்டை நட்சத்திரம். ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகம் என்பதால் இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயர்.

ஸ்ரீ ரங்கத்தில் அன்றைய தினம் நம் பெருமாள் (உற்சவர்) கவசங்களை எல்லாம் களைந்துவிட்டு ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். இதை சேவிப்பது மிகமிக விசேஷமாகும். யானை மீது தங்க குடத்தில் காவேரி தீர்த்தம் எடுத்து வருவார்கள். அன்று பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு சேர்ப்பது வழக்கம் திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை பூர்ணமாக இந்த நாட்களில் சேவிக்க முடியாதபடி படித்திரை விட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் பெரிய திருப்பாவாடை தளிகை நடக்கும். பெரிய பெருமாள் சந்நதியில் பிரசாதத்தை பரப்பி பலாச்சுளை, தேங்காய், வாழைப்பழம், மாங்காய், நெய் என ஏராளமாக சேர்த்திருப்பார்கள்.

உப்பு சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். விசேஷமான உற்சவம் இது. இது ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. சில கோயில்களில் ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும். சில கோயில்களில் ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியில் நடைபெறும். திருமலையில் இந்த ஜேஷ்டாபிஷேகம் ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தில் தொடங்கி, கேட்டை நட்சத்திரத்தில் நிறைவு பெறுகின்றது.

?சுதர்சனம் என்றால் என்ன பொருள்?

- சாய் விஜயஸ்ரீ , பொள்ளாச்சி.

``சு’’ என்றால் நன்மை, புனிதம் என்று பொருள். தரிசித்தால் நன்மையும் செல்வமும் தரக்கூடியவர் என்பதால் இவருடைய திருநாமமே சு+தர்சனம் = சுதர்சனம் ஆயிற்று.. பெருமாளுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், சக்கரத்தாழ்வாரின் பெயரை, தன்னுடைய திருநாமமாகக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். ``ஆழியான்’’ என்று பெருமாளுக்குப் பெயர்.

?விபூதி என்றால் திருநீறு என்று மட்டும் அர்த்தமா?

- மல்லிகா வரதராஜன், சேலம்.

விபூதிக்கு பல அர்த்தங்கள் உண்டு விபூதி என்றாலே செல்வம் என்று பொருள். திருநீறு என்பதில் உள்ள திரு செல்வத்தைக் குறிக்கும். வைணவத்தில் நித்ய விபூதி என்று வைகுண் டத்தைச் சொல்லுவார்கள். லீலா விபூதி என்று இந்த உலகத்தைச் சொல்வார்கள்.

?சுதர்சனரை வழிபட்டால் என்ன நன்மை?

- ரங்கசாமி, மதுரை.

ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையவர். வெற்றி வீரர். பெருமாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுப்பவர். அடியார்களை அனவரதமும் ரசிப்பவர். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும் அவர் பின் புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து சந்நதி வலம் செய்தால், நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலட்சமிகளையும், எட்டு திக்கு களையும் வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும்.

?சக்கரத்தாழ்வாருக்கு வேறு பெயர்கள் உண்டா?

- தமிழ்ச்செல்வி, சென்னை.

சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றும் போற்றுவர். பெரியாழ்வார் ``வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’’ என்று இவரை வாழ்த்துகிறார். ஸ்வாமி தேசிகன் இவரை ``சக்ர ரூபஸ்ய சக்ரிண’’ என்று போற்றுகிறார் - அதாவது இவர் மஹாவிஷ்ணுவிற்கு இணையானவர் என்கிறார்! ``சுதர்ஸ னாஷ்டகம்’’ என்ற ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றியுள்ளார்!

?பன்மொழிப் புலமையை அடைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

- ஆர்.சுப்ரஜா, சென்னை.

எந்த தெய்வத்தை உறுதியாக வணங்கினாலும் கல்வியும் மொழி ஆற்றலும் கிடைக்கும். ஆயினும் நம்முடைய சான்றோர்கள் கல்விக் கடவுளாக சரஸ்வதியையும் ஹயக்ரீவரையும் தட்சிணா மூர்த்தியையும் சொல்கின்றார்கள். எனவே குறிப்பாக இந்தத் தெய்வங்களை வணங்கி கல்வியையும் பன்மொழிப் புலமையையும் பெறலாம். இதற்கு உதாரணமாக குமரகுருபரர் வாழ்க்கையைச் சொல்லலாம். அவர் கலைவாணியின் மீது சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடி பன்மொழி ஞானத்தைப் பெற்றார் என்பது வரலாறு. அதைப்போலவே வேதாந்த தேசிகர் ஹயக்ரீவ பெருமாள் உபாசனை செய்து ஞானத்தைப் பெற்றார்.

?ஈமக் கடன் செய்வதற்குத்தான் பிள்ளை வேண்டுமா? அதுதான் சாஸ்திரம் என்றால், பிள்ளை இல்லாதவர்கள் நற்கதி அடைய முடியாதா?

- பார்வதி அம்மாள், ஸ்ரீ வில்லிப்புத்தூர்.

சாஸ்திரங்களில் பல விஷயங்கள் இருந்தாலும், விதிவிலக்குகளும் இருக்கின்றன அதையும் அனுசரிக்க வேண்டும். ஒரே பார்வையில் எல்லா விஷயத்தையும் நாம் ஆராய்ந்து முடிவெடுக்க கூடாது. மிகப் பெரிய சக்கரவர்த்தியான தசரதனுக்கு பல ஆண்டுகளாக பிள்ளை இல்லை. அவன் தன்னுடைய குருவான வசிஷ்டரிடம் இது குறித்துக் கவலைப் படுகின்றான். அப்பொழுது வசிஷ்டர் அவனிடம் ``பிள்ளை இல்லை என்று ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நீர்க்கடன் செய்வதற்கு பிள்ளை இல்லை என்று வருத்தப் படுகிறாயா?’’ என்று கேட்கும் பொழுது தசரதன், ``அது அல்ல காரணம். எனக்குப் பின்னால் இந்த உலகத்தை நன்றாக ஆட்சி செய்வதற்கு ஒரு வாரிசு இல்லையே என்று கவலைப்படுகிறேன்’’ என்று பதில் சொல்லுகின்றான்.

அதற்கு ஏற்ற மாதிரி ராமன் தன் அருகில் இல்லாத போதுதான் அவன் மரணமடைகிறான். அவனுடைய இறுதிக் கடன்களை மூத்த புதல்வரான ராமன் செய்யவில்லை. பின்னால் செய்தி அறிந்து சில சடங்குகளைச் செய்கிறான் என்பது வேறு விஷயம். ஆனாலும் தசரதன் நற்கதி அடைந்தான். அடுத்து பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி கிடைக்காதா என்ற கேள்வி. கும்பகோணத்தில் ஒரு பத்தர் இருந்தார். கோயில் திருப்பணி செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவுகள் இல்லை. ஒரு நாள் மரணமடைந்தார். அவருக்குப் பெருமாளே செய்ய வேண்டிய நீர்க்கடன்களை எல்லாம் செய்தார் என்பது வரலாறு. இன்றைக்கும் பெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு நீர்க்கடன் செய்கிறார்.

எத்தனையோ பெரிய மகான்கள் திருமணம் செய்து கொள்ளாமலோ, திருமணம் செய்து கொண்டும் வாரிசு இல்லாமலோ மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நற்கதி கிடைக்கவில்லையா என்ன?வாழும் போது முறையாகவும் பிறருக்கு உபகாரமாகவும் தெய்வ பக்தியுடனும் வாழ்ந்து விட்டால் இது போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

?பகவானின் எல்லா அவதாரத்தில் சக்கரத்தாழ்வார் வருவாரா?

- கேசவபிரசாத், மடிப்பாக்கம் - சென்னை

எம்பெருமானுடைய ஒவ்வொரு அவதாரத்திலும் ஏதோ ஒருவகையில் இவரும் அவதாரம் செய்து நேரடியாகவோ மறை முகமாகவோ எம்பெருமானுடைய சங்கல்பத்தை நிறைவேற்றுபவர். மச்சாவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாக இருந்தவர். கூர்மாவதாரத்தில் மந்திர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த் தெடுத்தனர்; எம்பெருமானுடைய வராக அவதாரத்தில் அவருடைய கோரைப்பற்களாக அவதரித்தவர். நரசிம்ம அவதாரத்தில் பகவான் இரு கைகளில் கூர்மையான நகங்களாக இருந்து இரணியனை சம்ஹாரம் செய்தவர். வாமனா வதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாக இருந்தவர். பரசுராம அவதாரத்தில் கூர் மழுவாக இருந்தவர். ராமாவதாரத்தில் ஜுவாலா மூர்த்தியாகி பாணங்களில் புகுந்து எதிரிகளை சுட்டெரித்தவர். பூரணமான அவதாரமான கண்ணன் அவதாரத்தில் நினைத்தபோது வந்து நின்றவர். பிரத்யட்சமாகவே காட்சி தந்தவர். மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் சக்கரத்தால்தான் நடந்தது.