?தேர்த் தட்டு வார்த்தை என்பது என்ன?
- பாலாஜி, மதுரை.
வைணவத்தில் மூன்று முக்கியமான மந்திரங்களில் சரம ஸ்லோகம் என்பது ஒன்று. ரகசியமானது. இந்த சரம ஸ்லோகம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. ஒன்று வராகப் பெருமாள் பூமாதேவிக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இரண்டாவது ஸ்ரீராமபிரான் விபீஷணனுக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இதைத்தான் கடற்கரை வார்த்தை என்று சொல்வார்கள். மூன்றாவதாக தேரில் அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதையை உபதேசம் சொன்ன பொழுது ஒரு சரம ஸ்லோகம் சொல்லுகின்றான். அந்தச் சரம ஸ்லோகத்திற்குத்தான் தேர்த் தட்டு வார்த்தை என்று பெயர். அந்த சரம ஸ்லோகம் இதுதான்.
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் மரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிமயாமி மா ஸுச.
‘‘இதன் சுருக்கமான பொருள்: - எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடை’’ என்பதாகும். தர்மங்களை விட்டுவிட்டு என்றால் பலனை எதிர்பார்க்காது, பலனைத் தியாகம் செய்து விட்டு என்று பொருள்.
?செல்போன் அதிக நேரம் பார்த்தால் கண் கெட்டுவிடும் என்கிறார்களே.
- வானதி, சென்னை.
ஆமாம். ஆனால் அதைவிட மனது கெட்டுவிடுகிறது. இன்றைக்கு நான்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 10 கெட்ட விஷயங்களைக் கடக்க வேண்டி இருக்கிறது. அதற்கு மன உறுதி தேவைப்படுகிறது.
?குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை எப்படிச் சொல்வது?
- சரண்யா, வேலூர்.
நிதானமாகச் சொல்ல வேண்டும். திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். பொறுமையோடு சொல்ல வேண்டும். அவசரப்பட்டு உணவையும் திணிக்கக் கூடாது. நல்ல விஷயங்களையும் திணிக்கக் கூடாது. இதில் இன்னொரு விஷயம். நீங்கள் சொல்லுகின்ற விஷயத்தை நீங்களே பின்பற்ற வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் காதால் கேட்டுக் கற்றுக் கொள்வதை விட கண்ணால் பார்த்துத்தான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே, பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அவர்கள் நடத்தையைப் பார்த்து குழந்தை தானாகக் கற்றுக் கொள்ளும். செல்போன் பார்த்தால் கண் கெட்டுவிடும் என்று குழந்தைக்குச் சொல்லிவிட்டு கணவனும் மனைவியும் மணிக்கணக்காக செல்போனைத் தள்ளிக் கொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை.
?நம்மீது யாராவது குறை சொன்னால் கோபம் வருகிறதே?
- நாகராஜன், திருச்சி.
நாம் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம் என்பதால்தான் கோபம் வருகிறது. நம்முடைய சட்டையில் நம்மை அறியாமலேயே ஒரு அழுக்கு படிந்து விட்டால், சார் உங்கள் சட்டையில் அழுக்கு என்று சுட்டிக் காட்டினால் அவருக்கு நன்றி தெரிவிப்போம். அதைப்போலவே, நம்முடைய குற்றங்கள் எனும் அழுக்குகளை சுட்டிக் காட்டுபவரிடம் நன்றி தான் தெரிவிக்க வேண்டும். ஒரு உதாரணம். கண்ணாடி நம் முகத்தில் அழுக்கைக் காட்டினால் கண்ணாடியை உடைக்க மாட்டோம் மாறாக முகத்தைச் சுத்தம் செய்வோம் அதுபோலவே நம் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களிடம் கோபப்படுவதை விட குறைகளைச் சரி செய்து கொண்டால் சிறந்து வாழலாம்.
?ஏன் 108 திவ்ய தேசங்கள் என்று சொல்கிறார்கள்?
- விஷ்ணுதாசன், பெங்களூர்.
ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ‘‘வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?’’ என்று கேட்க, ‘‘ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச’’ என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தையும் சேர்த்தால் 108. பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்க்காணும் பாடல் மூலம் தருகிறார்;
“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு;
ஓரிரண்டாம் - சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்.”
அதாவது, சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (வைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இன்னொரு கோணம் உண்டு. எந்தெந்த தலங்களை ஆழ்வார்கள் தமிழால் பாடியிருக்கிறார்களோ அந்தத் தலங்களை திவ்ய தேசம் என்று சொல்வது வைணவ மரபு.
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்
பணைத்தோள் எருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே.
தமிழ் ஒலிக்கும் இடம் நோக்கி பாம்புப் பாயோடு திருமால் புறப்பட்டு விடுவாராம். இதை விட தமிழுக்கு ஏற்றம் என்ன இருக்க முடியும்?
?ஞானம் பெறுவதற்கு சாஸ்திரங்கள் தேவையா?
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.
ஒரு விஷயம் பயன்படுமா பயன்படாதா என்பதைத் தெரிந்து கொள் வதற்கும், அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு அவசியம். சாத்திரங்களை மட்டும் படித்தறிவதால் ஞானம் பெற முடியாது என்பது உண்மைதான். ஆயினும் ஞானம் பெறும் வழியை உணர்த்துவதில் சாஸ்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே ஞானத்தைத் தேடுபவர்களுக்கு சாஸ்திரங்களும் அவசியம்.
?எந்தெந்த வயதில் என்னென்ன சாந்தி செய்து கொள்வது?
- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
இந்த கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். இது கோயிலில்தான் செய்து கொள்ள வேண்டுமா என்றும் கேட்கிறார்கள். பொதுவாக உலகியல் ரீதியான காரியங்களை அவரவர்கள் இல்லத்தில் செய்து கொள்வதுதான் விசேஷம். கோயில் போன்ற பொது இடங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளை நடத்துவது பெரியோர்கள் காட்டிய வழி அல்ல. நன்கு விவரம் தெரிந்த பெரியவர்கள் பெரும்பாலும் தங்கள் இல்லங்களில் நடத்திக் கொள்வதையே ஆதரிப்பார்கள். வீட்டில் முறையாக நடத்தப்படும் வேள்விகளாலும் மந்திரங்களாலும் வழி பாடுகளாலும் திருமகள் அருள் நிலைத்திருக்கும். இனி எந்தெந்த வயதில் எந்தெந்த கர்மாக்களை செய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
1. 55ம் வயது ஆரம்பம் - பீம சாந்தி
2. 60-வது வயது ஆரம்பம் - உக்ரரத சாந்தி
3. 61 வது வயது ஆரம்பம் - சஷ்டி அப்த பூர்த்தி
4. 70 வது வயது ஆரம்பம் - பீமரதசாந்தி
5, 72 வது வயது ஆரம்பம் - ரத சாந்தி
6. 78வது வயது ஆரம்பம் - விஜய சாந்தி
7. 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்திராயண சுக்ல பட்சம் நல்ல நாள் - சதாபிஷேகம்
8. பிரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) பௌத்தரனுக்கு புத்திரன் பிறந்தால் அதாவது கொள்ளு பேரன் பிறந்தால் செய்து கொள்ள வேண்டியது.
9. 85 வயது முதல் 90க்குள் - மிருத்யஞ்சய சாந்தி
10. நூறாவது வயதில் சுபதினத்தில் - பூர்ணாபிஷேகம்
இவையெல்லாம் இறையருள் பெற பல்வேறு மங்களகரமான மந்திரங்களை ஜெபித்து இயற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் ஆகும். இதில் பல்வேறு தேவதைகளுக்கான மந்திரங்கள் உள்ளன. மனித வாழ்வில் வரும் இதுபோன்ற நல்வாய்ப்புகளை விரிவான வழிபாட்டிற்கும், இறையடியார் சேர்க்கைக்கும், தான தர்மங்கள் செய்வதற்கும், உரிய ஒரு வாய்ப்பாக கருத வேண்டுமே தவிர, நம் செல்வம், வசதி, பதவி, ஆடம்பரம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற் கான வாய்ப்பாக கருதி விடக்கூடாது.
?ஜென்ம நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்?
- வண்ணை கணேசன், சென்னை.
வீடு கட்டலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். அன்னதானம் செய்யலாம். அசையும், அசையா சொத்துக்களை பார்வையிடுதல் வாங்குதல் செய்யலாம், பத்திரம் பதிவு செய்யலாம், ஹோமங்கள் செய்யலாம், புதிய பதவியோ புதிய வேலையோ ஏற்கலாம்.