Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம்?

- ராமச்சந்திரன், ஆலம்பட்டி.

ராகு, கேது என்பது நிழல் கிரகங்கள். நிழல் என்பது நம்முடன் கூடவே பிரயாணப்படுவது. சில நேரத்திலே அது வெளிப்படையாக இருக்கும். சில நேரத்திலே அது வெளிப்படையாக இருக்காது. நம்முடைய வினைகளின் தாக்கத்தை மறைமுகமாக கொடுப்பது இந்த நிழல் கிரகங்கள். இதனை சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லுவார்கள். இது காரியத் தடைகளையும், சுபத் தடைகளையும், குடும்ப விருத்தித் தடைகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக, புத்திர பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கேன்சர் போன்ற தீர்க்க முடியாத வியாதிகள் வருவது, எந்த வியாதி என்று கண்டுபிடிக்க முடியாத சில உடல் அவஸ்தைகள், இவைகளுக்கெல்லாம் ராகுவும் கேதுவும் காரணம்.இந்த தோஷ நிவர்த்திக்கு வெள்ளிக் கிழமை காலத்தில் ராகுவின் அதிதேவதையான துர்க்கையை வணங்குவது சாலச் சிறந்த பரிகாரமாக பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். வெள்ளிக்கிழமை தவறினால், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், இந்த வழிபாட்டைச் செய்யலாம். ராகு காலம் என்பது இந்த வழிபாட்டுக்கு உரியதுதான். அப்பொழுது வேறு சுபகாரியங்களை நாம் செய்வது கிடையாது. ராகுவுக்கு பிடித்தமான மந்தாரை மலர்களை சாற்ற வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டும். உளுந்து கலந்த அன்னத்தை நிவேதனம் செய்ய வேண்டும். ராகுவின் காயத்ரி மந்திரத்தை 27 முறை மனம் உருகிப் பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலமாக ராகுதோஷ நிவர்த்தியாகும். சுபகாரியங்கள் நடக்கும்.

இன்று பெரும்பாலானோர், ஞாயிற்றுக்கிழமை திருமணம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சிலர் ஞாயிற்றுக்கிழமை சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்களே?

- பிரபாவதி, சென்னை.

உலகியல் விஷயங்களுக்காகச் சொல்லப்படும் சாஸ்திரங்கள் எல்லாம் காலதேச வர்த்தமானதிற்கு உட்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. ஞாயிற்றுக் கிழமை என்பது எல்லோருக்கும் விடுமுறை நாளாக இருக்கிறது. அதனால் விசேஷத்தில் எல்லோரும் கலந்து கொள்ள முடியும். பொதுவாகவே ஒரு விஷயத்தை இரண்டு கோணத்தில் நாம் பார்க்க வேண்டும். சாஸ்திர ரீதியாகவும் பார்க்க வேண்டும். உலக வழக்கப்படி அல்லது அவரவர்கள் குடும்ப வழக்கப்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். சாஸ்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பது ஏற்புடையதாக இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், அனுஷ்டானத்தில் அது இருக்கிறது என்பதால் தவறில்லை. பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. நாம் செவ்வாய்க்கிழமையை ‘செவ்வாயோ வெறும்வாயோ’’ என்று ஒதுக்கி வைப்போம். ஆனால், செவ்வாய்க்கிழமை மங்கள வாரம் என்று சொல்லி சிலர் சுபகாரியங்களை நடத்துவதுண்டு. நாம் முற்பகலில் செய்யும் சில சடங்குகளை, பிற்பகலில் அல்லது மாலையில் செய்பவர்களும் உண்டு. ஆடி மாதம் முழுக்க சுபகாரியங்களை சிலர் விலக்குவார்கள். சிலர் ஆடி அமாவாசைக்கு பிறகு நல்ல நாளில் திருமணம் செய்வார்கள். காரணம், ஆடி அமாவாசைக்கு பிறகு சாந்திரமான முறைப்படி ஆவணி மாதம் பிறந்துவிட்டதாக கணக்கு. (சில நேரங்களில் ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரதம் ஆடியில் வரும் அல்லவா). அதைப்போலவே கரிநாள், தனிய நாள் இவற்றில் சுபகாரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பார்கள். தமிழகத்தை தவிர இதர மாநிலங்களில் கரிநாள், தனிய நாள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அன்று சுபகாரியங்களைச் செய்கின்றார்கள். ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாத அமாவாசைக்கு பிறகு சுபமுகூர்த்தங்கள் செய்கிறார்கள். அன்று வேறு தோஷங்கள் இல்லாமல் இருந்து, சுப திதியாகவும், நட்சத்திரம் யோகம் நன்றாகவும் இருந்தால், சுப காரியங்களைச் செய்யலாம்.

அருள்ஜோதி