Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டுக்குப் போவதில் அப்படியென்ன மகிழ்ச்சி?

சென்ற இதழில் இராமன் தனக்கு அரசு பதவி இல்லை என்று சொன்னவுடன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவன் சந்தோஷப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லி, இதைவிட முக்கியமான ஒரு காரணம் இருந்தது என்று முடித்திருந்தோம். அது என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.ஒருவனுக்குத் துக்கம் எப்பொழுது வரும்? சந்தோஷம் எப்பொழுது வரும்? வேண்டாத பொருள் ஒருவனுக்குக் கிடைத்த பொழுது துக்கம் வரும். வேண்டிய பொருள் கிடைக்காத பொழுது துக்கம் வரும்.அதைப்போலவே துக்கம் தருகின்ற பொருள் கையை விட்டுப் போகும் போது சந்தோஷம் வரும். எதிர்பார்த்த பொருள் தானாக வந்து மடியில் விழும் பொழுது சந்தோஷம் வரும். இது அத்தனையும் இராமனுக்கு நிகழ்கிறது. அவன் விரும்பாதது அரச வாழ்வு. அது கிடைத்தபோது அது கடமை என்று ஏற்றுக் கொண்டான். இப்பொழுது கைகேயியால் பறிக்கப்பட்ட பொழுது வேண்டாத ஒரு விஷயம் தன் கைவிட்டுப் போயிற்று என்று சந்தோஷம் கொண்டான். அந்த சந்தோஷம் பாதிதான். இன்னும் பாதி அளவு சந்தோஷம் எப்படி வந்தது என்று சொன்னால், அவனுடைய அவதார நோக்கத்துக்கு உதவக்கூடிய காடு செல்லல் என்கின்ற விருப்பம் தானாகவே வந்து மடியில் விழுகிறது. அதனால் அவனுடைய சந்தோஷம் இரட்டிப்பாகிறது.ஆண்டாள் திருப்பாவை பாசுரத்திலே ஒருத்தி மகனாய்ப் பிறந்து என்று ஒரு பாசுரம். இதில் கடைசி வரி “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து” என்று வரும். வருத்தம் தீர்ந்தது பெரிய விஷயம் அல்ல; மகிழ்ச்சியும் வந்து சேர்ந்தது பாருங்கள். இதற்கு கம்பன் ஒரு அருமையான உதாரணத்தைக் காட்டுகின்றான்.

தெருளுடை மனத்து மன்ன

ஏவலின் திறம்ப அஞ்சி,

இருளுடை உலகம் தாங்கும்

இன்னலுக்கு இயைந்து நின்றான்,

உருளுடைச் சகடம் பூண்ட,

உடையவன் உய்த்த கார் ஏறு

அருளுடை ஒருவன் நீக்க

அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான்.

அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற்பூட்டிய காளையாகவும் கூறுதல் மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம் நீங்கி இருந்தனன்.இப்பொழுது கைகேயின் கூற்றுக்கு இராமன் பதில் சொல்ல வேண்டும். என்ன அழகாக பதில் சொல்லுகிறான் தெரியுமா? அதி அற்புதமான பாடல். எல்லோரும் எடுத்துக்காட்டுகின்ற பாடல்.

மன்னவன் பணி அன்றாகின்,

நும் பணி மறுப்பெனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம்

அடியனேன் பெற்றது அன்றோ?

என் இனி உறுதி அப்பால்?

இப் பணி தலைமேல் கொண்டேன்;

மின் ஒளிர் கானம் இன்றே

போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

இதில் உள்ள நுட்பத்தைப் பாருங்கள். “மன்னவன் பணி அன்று” என்ற இடைவெளிவிட்டு படித்தால், அம்மா, இது மன்னனுடைய ஆணை அல்ல என்பதை மிக நுட்பமாக முதல் வரியிலேயே மறுக்கின்றான் என்று தேறும். காரணம் தசரதன் நேரில் வந்து சொல்லவில்லை. கைகேயி தசரதன் சொன்னதாகச் சொல்வதை வைத்துக் கொண்டு இராமன் ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றான். ஏதோ ஒரு விஷயம் இவர்களுக்குள் நடந்திருக்கிறது. இது தசரதனுடைய விருப்பமாக இருக்கமுடியாது. நேற்று நம்மை வற்புறுத்தி அரசு பதவியை ஏற்றுக்கொள்ள சொன்னவன் சில மணி நேரங்களில் எப்படி மனம் மாறி இருக்க முடியும்? என்பதை ஊகிக்கிறான். இது தசரதன் சொன்னது அல்ல என்று நேரடியாகச் சொன்னால் கைகேயி கோபித்துக்கொள்வாள். அதனால், ‘‘அம்மா நீங்கள் வேறு மன்னன் வேறா? உங்கள் கட்ட ளையாக இருந்தாலும் நான் அதைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றேனே.! இதற்கு நீங்கள் ஏன் தயங்க வேண்டும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்’’ என்று இராமன் சொல்வதாக இந்தப் பாடல் சொல்கிறது. அதைவிட இராமனுக்கு மிகமிக சந்தோஷம் ஏன் வந்தது என்று சொல்லி யிருந்தேன் அல்லவா! அதற்குத்தான் அடுத்த வரி. ‘‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ’’ பரதனைப் பற்றி மிக நன்றாக உணர்ந்தவன் இராமன் அதனால்தான் காட்டிலே பரதன் படை திரட்டிக் கொண்டு வருவதைப் பார்த்த இலட்சுமணன், “நம்மை காட்டில் கூட இவன் நிம்மதியாக இருக்க விடமாட்டான் போல இருக்கிறதே, இப்பொழுது என்ன செய்கிறேன் பார், இவனை இங்கேயே ஒழித்துக் கட்டி விடுகிறேன்” என்று வில்லும் அம்புமாக நின்ற பொழுது இராமன் இலட்சுமணனை கடிந்து கொள்ளுகின்றான்.‘‘பரதனை யார் என்று நினைத்தாய்? உனக்கென்ன ராஜிய ஆசை வந்து விட்டதா? வேண்டுமானால் பரதனிடத்திலே கேட்டு உனக்கு ராஜ்யம் தரச் சொல்லுகிறேன்’’ என்று இலட்சுமணன் வெட்கப் படும்படியாகச் சொல்லுகின்றான்.தன்னைவிட அவன் இந்த ராஜ்ஜியத்தை ஆள்வதற்குத் தகுதி படைத்தவன் என்று கைகேயி நினைக்கிறாளோ இல்லையோ, இராமன் நினைக்கிறான். அதனால் “பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ” என்று சொல்கின்றான். சகோதரத்துவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதல் முடிச்சு போடுகின்றான். அந்த சகோதர மனப்பான்மை தான், தன் குடும்பத்தில் பிறக்காத மற்றவர்களையும் சகோதரர்களாக அணைத்துக்கொள்ளும் அற்புதமான அன்பு மனதை இராமனுக்குக் கொடுத்தது.என் பின்னவன் என்பதைப் பிரித்தால் இப்பொழுது அவனுக்கு ராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் எனக்குப் பின் ராஜ்ஜியம் அவன்தானே ஆளப்போகிறான் என்பது போல வரும். இராமனுக்கு மூன்று மகிழ்ச்சி என்று சொன்னேன் அல்லவா?

1. தன்னிடமிருந்து ராஜ்ஜியம் போனது ஒரு மகிழ்ச்சி

2. தான் காட்டுக்குப் போகும்படியாக ஆனது இரண்டாவது மகிழ்ச்சி

3. இது எல்லாவற்றையும் மீறிய மகிழ்ச்சி, எல்லாத் தகுதியும் வாய்ந்த, பரதனுக்கு இந்த அரசாட்சி கிடைத்தது என்கின்ற மகிழ்ச்சி.

இதுதான் இராமன் மனதை மலரச் செய்தது.

‘‘அம்மா இதைவிட நன்மை தருகின்ற ஒரு செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆகையினால் நான் இப்பொழுதே (அவகாசம் கூடக் கேட்க வில்லை) காட்டுக்குப் போகின்றேன். தங்களிடத்தில் விடையும் கொள்கின்றேன்.’’பாட்டின் கடைசி வரியில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நான் காட்டுக்குப் போகிறேன் என்று வெறுமையாகச் சொல்லியிருக்கலாம். ‘‘மின் ஒளிர் கானம் போகின்றேன்’’ என்று சொல்லுகிறான். இதற்கு பொருள் எழுதியவர்கள் ‘‘அதிகமாக வெயிலடிக்கக் கூடிய காட்டுக்கு’’ என்பது போல எழுதி இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளவன், போகிற இடமும் மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் கருதுவான். ஆகையினால் இராமனுக்குக் காடு என்பது அயோத்தியை விட சிறந்த இடம் என்பதால், மின் ஒளிர் கானம் என்ற வார்த்தையைப் போடுகின்றான். கைகேயி “பூழி வெங் கானம் நண்ணி” என்று சொன்னாள். அதாவது கொடுமையான காட்டுக்குப் போ என்று சொன்னாள். இராமன் மின் ஒளிர் கானம் போகின்றேன் என்கிறான். இதில் ஒரு உளவியல் கருத்து இருக்கிறது.ஒருவருக்கு ‘‘காடா நாடா’’ என்பது விஷயம் அல்ல. அவன் அந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கொள்கிறான் என்பதில் தான் மகிழ்ச்சியோ துக்கமோ

இருக்கிறது.

தேஜஸ்வி