Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரச மரத்திற்கு என்ன சிறப்பு?

?அரச மரத்திற்கு என்ன சிறப்பு?

- பவஸ்ரீ, நுங்கம்பாக்கம்.

அந்தப் பெயரே சிறப்புதான். பறவை களில் கருடன் ராஜ பறவை போல, மரங்களிலே ராஜ மரம் அரசமரம். திருமணச் சடங்குகளில் அரச மரக்கிளை ஒன்றை - அரசாணிக் கால் (அரசு ஆணைக் கால்) - நட்டு, அதற்கு உபசாரங்கள் செய்து, அதன் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடக்கும். ராஜாவே அந்த திருமணத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்வது போல, இன்றைக்கும் அந்தப் பழக்கம் உண்டு. பகவான் கீதையில், மரங்களில் நான் அரச மரமாக இருக்கின்றேன் என்று சொல்கிறான். அமாவாசை திங்கட்கிழமை வந்தால் அதற்கு ‘‘சோம அமா’’ என்று பெயர். அன்றைக்கு அரச மரத்தை பிரதட்சணம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மும்மூர்த்தி சொருபமாக அரசமரம் விளங்குகிறது. அதற்குச் சான்று இந்த ஸ்லோகம்.

‘‘மூலதோ பிரம்ம ரூபாய மத்யே விஷ்ணு ரூபாயே

அக்ரத சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:’’

அரசமரம் சுற்றுகின்ற பொழுது இந்தச் ஸ்லோகத்தைச் சொல்லிச் சுற்றுவதால் பலன் அதிகம்.

?பகவானை எப்போது நினைக்க வேண்டும்

- சங்கராமன், தஞ்சை.

மூச்சு விடும் போதெல்லாம் நினைக்க வேண்டும்

?காதுகுத்தி கடுக்கண் போடுகின்றார்கள், என்ன காரணம்?

- ரகுபதி, திருவண்ணாமலை.

காதுமடலில் குத்துவது என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களை மட்டுமே காது கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு கௌரவமாகவே, காதுக்கு பொன்னாலான கடுக்கன் (கர்ண பூஷணம்) போடுகிறார்கள். நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுக்கு செய்யப்படும் உபசாரம் அது.

?ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் சத்துருக்கனன் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை

- சி.குமாரஸ்வாமி, சென்னை.

பகவானுக்குத் தொண்டு செய்வதை விட பாகவதருக்குத் தொண்டு செய்வதுதான் தொண்டின் எல்லை நிலம். அதைத்தான் பக வானும் விரும்புவான் என்பதற்கு எடுத்துக்காட்டு சத்ருக்கனன். இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். ராமனுடைய அழகில் மயங்காதவர்கள் யாருமே இல்லை. ரிஷிகள் கூட தாங்கள் பெண்ணாக இருந்து ராமனின் தோள் சேர விரும்புகிறார்கள். ஆனால் ராமனுடைய அழகுக்கு மயங்கி விட்டால், அவனுக்கே வசமிழந்து, பரம பாகவதனான பரதனுக்குத் தொண்டு செய்யாமல் போய்விடுவோமே, என்று ராமனைப் பார்க்க துடிக்கும் தனது இந்திரியங்களை வென்றவன். சத்துருக்கனன். ராமாயணத்தில் அவனுக்கு ஒரே பாட்டுக்காரன் என்று பெயர்.

பதினனான்கு ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நேரத்தில் இராமன் வர வில்லை என்று எண்ணி தீக்குளிக்க எண்ணிய பரதன், தம்பியான சத்துருக்கனிடம் ‘‘நீ இந்தப் பதவியை ஏற்றுக் கொள்’’ என்று கேட்கின்ற பொழுது அவன் மறுத்துப் பேசுகின்ற பாட்டு அற்புதமானது.‘‘எனக்கு முன்னால் மூன்று பேர் இருக்கிறார்கள். மூத்தவன் ராமன் காடாளப் போகிறேன் விட்டுவிட்டு போய்விட்டான். அவனுக்கு துணையாக இன்னொரு தம்பியும் போய்விட்டான்.

குறிப்பிட்ட காலத்திற்குள் ராமன் வராவிட்டால் உயிரை விடுவேன் என்று நீயும் இந்த அரச பதவியைக் கைவிட்டு “இனி நான் அரசாள மாட்டேன்” என்று உயிர் விடத் துணிந்தாய். இப்படி மூன்று பேரும் வேண்டாம் என்று கைவிடத் துணிந்த அரசை, உங்களைப்போலவே எண்ணம் உள்ள உள்ள நான் எப்படி ஏற்றுக் கொள்வேன் என்று எதிர்பார்க்கிறாய்?’’ என்று கேட்கின்ற கேள்வி நம் ஒவ்வொருவர் இதயத்தையும் துளைக்கும். அந்தப் பாட்டு இதோ.

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப்

போனானைக் காத்து, பின்பு

போனானும் ஒரு தம்பி; ‘’போனவன்

தான் வரும் அவதி போயிற்று’’ என்னா,

ஆனாத உயிர் விட என்று அமைவானும்

ஒரு தம்பி; அயலே நாணாது,

யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே,

இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

?கடைசி நினைவு பகவானைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?

- சுமதி, மதுரை.

கடைசி மூச்சு விடும் போது என்ன நினைவு இருக்கிறதோ அதுவே அடுத்த ஜென்மத்துக்கு வழிவகுக்கும் என்பது பெரியோர்கள் சொன்ன சாஸ்திர உண்மை. தவ வலிமை படைத்த ஜட பரதன், ஒரு மான் குட்டியைப் பார்த்து, அதனைத் தான் காப்பாற்ற வேண்டும், இல்லாவிட்டால் அதற்கு உயிர் போய்விடும் என்ற அதனையே நினைத்துக்கொண்டு உயிர் விட்டான். மோட்சம் பெற வேண்டிய அவனுக்கு அந்த எண்ணத்தினால் மறுபிறப்பு கிடைத்தது.

பொருள் ஆசையோடு உயிர் விட்டால் அந்தப் பொருளை அடைவதற்கே ஒரு பிறவி எடுக்க வேண்டும். இறைவனை நினைத்து உயிர் பிரிந்தால், பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை; இறைவனையே அடைந்து விடலாம் என்பதால் தான் இறக்கும் போது பகவான் நினைவு வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நினைவு வர வேண்டும் என்பதற்காகத்தான் சுற்றி உள்ளவர்களும் அந்திம நேரத்திலே பகவான் நாமாவைச் சொல்லுகின்றனர்.

?சுகங்களைத் தருவது பகவானின் கருணை என்றால் துக்கங்கள் வருவது?

- சேலம்.ஆவுடையப்பன்.

அதுவும் பகவானின் கருணை தான் என்று பெரியவர்கள் சொல்கின்றார்கள். சாஸ்திரங்களில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி துக்கங்களை கருணையுள்ள கடவுள் தருவார் என்றால் அதற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.சுகங்களை அடுத்தடுத்து அனுபவிக்கும் ஒருவன் அதிலேயே மூழ்கி இறைவனை மறந்து விடுகின்றான். அதனால் ஆன்ம உயர்வு பெறுவதற்கு வழி இல்லாமலேயே போய்விடுகிறது. ஆனால் துக்கங்களின் போது, அவனுக்கு விரக்தி ஏற்படுகிறது. வைராக்கியம் ஏற்படுகிறது. இந்த வைராக்கியத்தால் பகவான் மீது அசஞ்சலமானபக்தி ஏற்படுகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் பகவான் மட்டுமே குறி என்கிற உணர்வோடு இருக்கின்ற பொழுது, பகவானின் தரிசனம் எளிமையாகி விடுகிறது.

இதற்கு ஒரு அழகான சான்றும் உண்டு. குந்தி தேவி பாண்டவர்கள் ஜெயித்து பட்டாபிஷேகம் கிடைத்த பிறகு கண்ணனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறாள். ‘‘கண்ணா, எங்களுக்குத் துன்பங்களைக் கொடு’’ அப்பொழுது கண்ணன் கேட்கிறான். இத்தனை காலம் பட்ட துன்பம் போதாதா? ‘‘இன்னுமா இப்படிக் கேட்பது?’’ அப்போது குந்தி தேவி சொல்கின்றாள்.

‘‘ராஜ்ஜியம் இல்லாமல் காட்டில் அலைந்த போது நீ கூட இருந்தாய். ஆனால் எங்களுக்கு ராஜ்ஜியத்தை தந்துவிட்டு இப்போது நான் விடைபெற்றுக் கொண்டு போகிறேன் என்று போகிறாயே. எனவேதான், மறுபடியும் துன்பப்பட விரும்புகிறேன் காரணம் நீ கூட இருப்பாய் அல்லவா?’’ என்று கேட்கிறாள். இந்தத் தத்துவத்தை உணர்ந்து கொண்டால்தான் துக்கம் கூட சில சமயங்களில் இறைவனின் கருணை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

?கண்ணனுடைய முக்கியமான மூன்று தலங்களில் அதாவது குருசேத்திரம் துவாரகை பிருந்தாவனம் இவைகளில் எது சிறந்தது?

- மோகனகிருஷ்ணன்,விராலிமலை.

மூன்றுமே சிறந்ததுதான். தர்ம சேத்ரமாகிய குருசேத்திரத்தில் அவன் பகவத் கீதையைச் சொன்னான். துவாரகை மோட்ச புரி. ஆனால், பிருந்தாவனம் பிரேம பாவமாகிய ஆனந்தம் பொங்கிப் பூத்த இடம். ராதை மிக விரும்பிய இடம். கோபியர்கள் கொஞ்சி விளையாடிய இடம். ஒவ்வொரு வரும் ஆனந்தத்தின் உச்சியை அடைந்த நிலம். ஆண்டாள் கண்ணனைத் தேடி பல திவ்ய தேசங்களைப் பாடுகிறாள்.

நிறைவாக அவள் கண்ணனை எங்கே கண்டதாகப் பாடினாள் தெரியுமா. “வினதைச் சிறுவன் சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே’’ என்று பிருந்தாவனத்தில் கண்ணனைப் பார்த்ததாகச் சொல்லுகின்றாள். பக்தியின் ஞானபாவம் பிடிபட்ட இடம் குருஷேத்திரமும் துவாரகா புரியும் என்றால், பக்தியின் பிரேம பாவம் வெளிப்பட்ட இடம் பிருந்தாவனம்.

?சிரார்த்த தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் இலை போடுவதைப்போல, மகாவிஷ்ணுவுக்கும் இலை போடுகிறார்களே, என்ன காரணம்?

- ஆனந்த்குமார், ஸ்ரீரங்கப்பட்டினம்.

எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து அந்தந்த விஷயத்தை அவரவர்கள் மூலமாக நடத்துவதற்குக் காரணமாக

இருப்பவன் மகாவிஷ்ணு.

இதை திருமழிசையாழ்வார்,

இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-

இனியறிந்தேன் காரணன் நீ, கற்றவை நீ,

கற்பவை நீ நற்கிரிசை நாரணன்நீ

நன்கறிந்தேன் நான்!

- நான்முகன் திருவந்தாதி- 96 என்கிற பாசுரத்தில் விளங்குகின்றார்.

யாகங்களைக் காப்பவர் மகாவிஷ்ணு என்பதால் யாக சம்ரட்சனன் என்று அவரை அழைப்பர். அதைப்போல ச்ரார்தத்தை முறையாகக் காப்பாற்றித் தருபவர் என்பதால் சிரார்த்த சம்ரட்சனன் என்று அழைப்பர். அதனால் பித்துருக்களுக்கு தெற்கு நுனியாக இலை போட்டால், பெருமாளுக்கு வடக்கு நுனியாக இலை போடுவார்கள். பித்ருக்களின் இலையில் திலத்தை (எள்) போட்டால், மகாவிஷ்ணுவின் இலையில் அட்சதையைப் போடுவார்கள்.

பித்ருக்களின் இலையில் ஒரு மடங்கு உபச்சாரம் (வெற்றிலைப்பாக்கு, பழம், தட்சனை) வைத்தால், மகாவிஷ்ணுவின் இலையில் இரண்டு மடங்கு உபசாரம் வைப்பார்கள். அங்கு அப்பிரதட்சணமாகச் சுற்றினால், மகா விஷ்ணுவின் இலையை பிரதட்சணமாகச் சுற்றுவார்கள், இவைகளை யெல்லாம் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

?எல்லோரிடமும் சுமுகமான உறவு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

- ஜகன், வந்தவாசி.

ஒருவரைப் பற்றி நாமாகவே நல்லவன் கெட்டவன் என்ற முடிந்த முடிவுக்கு வந்துவிடக் கூடாது. எல்லா நல்லவர்களிடத்திலும் சில கெட்ட குணங்கள் இருக்கும். எல்லா கெட்டவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, தகுதி அறிந்து, ஓர் எல்லையோடு பழகினால், எல்லோரிடமும் சுமுகமான உறவைக் கடை பிடிக்கலாம். அப்படிக் கடைப்பிடிக்கும்போது தேவையில்லாத மன அழுத்தங்கள் வராது. ‘‘குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’’ என்று இதைத்தான் திருக்குறளும் சொல்லுகின்றது. பல பிரச்னைகளுக்கு திருக்குறளில் தீர்வு இருக்கிறது.

?தேதி மழை என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறார்களே, அது என்ன விஷயம்?

- கணேசன், ராணிபேட்டை.

ஆமாம். இது பஞ்சாங்கத்தில் உள்ள ஒரு விஷயம். இந்த மாதம் இன்ன தேதியில் மழை பெய்தால் அவ்வருடம் நல்ல மழை பெய்யும் என்பதை தேதி மழை என்பார்கள். ஆனி மாதம் பத்தாம் தேதி, ஆடி மாதம் எட்டாம் தேதி, ஆவணி மாதம் ஆறாம் தேதி, புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி, ஐப்பசி மாதம் இரண்டாம் தேதி, கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி என இந்தத் தேதிகளில் மழை பெய்தால் அந்த மழையை தேதி மழை என்று சொல்வார்கள்.

?சில கோயில்களில் கருடாழ்வாருக்கு சங்கு சக்கரம் இருக்கிறது? அனுமனுக்கு அதைப்போல இருக்கிறதா?

- கிஷோர், வடபழனி.

கும்பகோணம் அருகே ஆதனூர் என்ற இடத்தில் ஆஞ்சநேயர் சந்நதியில், சுதர்சன சக்கரம் தலையில் தாங்கிக் காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வக் காட்சி.

?விரதம் என்பதற்கு உபவாசம் இருப்பது என்றுதான் பொருளா?

- என்.எஸ்.சிவக்குமார், திருநெல்வேலி.

விரதம் என்னும் சொல் உண்ணும் உணவைச் சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். விரதம் என்பது ஒரு வகை வழிபாடு ஆகும். ஆனால், இதைவிடச் சிறப்பான பொருளும் உண்டு. ஒரு உறுதியான கொள்கைக்கு விரதம் என்று பொருள். ராமன், ‘‘என்னைச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதை என்னுடைய விரதமாகக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் விரதம் என்பது “கொள்கை” என்று ஆகிறது. எனவே ஒரு கொள்கையில் உறுதியோடு இருப்பதை விரதம் என்று சொல்லலாம். சாப்பிடாமல் இருப்பது மட்டும் விரதம் அல்ல. பொய் சொல்லாமல் இருப்பது, பிறரைக் கஷ்டப்படுத்தாமல் இருப்பது, பிறருக்குத் தான தருமங்கள் செய்வது, என்று எத்தனையோ விரதங்கள் இருக்கின்றன.

தொகுப்பு: தேஜஸ்வி