ஜோதிட ரகசியங்கள்
ஒருவருடைய வாழ்வில் தசா புத்திகள் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தின்படி தொடங்கி நடந்து வரும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஆரம்பித்து சுக்கிர தசை, சூரிய திசை, சந்திர திசை என்று போகும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடங்கும் போதே ராகு திசை தொடங்கும்.
இந்தத் திசைகள் எல்லாமே அவரவர் வாங்கிவந்த வரத்தின்படி நன்மையாகவோ, தீமையாகவோ இரண்டும் கலந்ததாகவோ அமையும். அது அந்தந்த ஜாதக பலாபலன்களைப் பொறுத்தது. ஆனால், ஒருவன் மிகச் சிறப்பாக பண வசதியோடு ஆடம்பரமாக அதிர்ஷ்ட சாலியாக வாழுகின்ற பொழுது, அவருக்கு என்ன சுக்கிர தசை அடிக்கிறது என்று சொல்கின்றோம்.
சனி திசையில் ஒருவன் கோடீஸ்வரனாக இருக்கலாம். குரு தசையில் ஒருவன் தொழில் நிறுவனத்தை தொடங்கி பல்வேறு கிளைகளை ஆரம்பித்திருக்கலாம். ராகு திசை ஒருவனை மிகப்பெரிய புகழ் அடைய வைத்திருக்கலாம். ஆனால், ஒரு சிறப்பான வாழ்க்கையைச் சொல்லும் பொழுது “சுக்கிர தசை அடிக்கிறது” என்று சுக்கிரனைத்தான் சொல்லுகின்றோம்.
ஏன் இப்படிச் சொல்லுகின்றோம்?
சுக்கிர திசை எல்லாருக்கும் கொட்டிக் கொடுத்து விடுகிறதா? எத்த னையோ ஜாதகங்களில் சுக்கிர திசை வந்து, பணத்தையும் ஆரோக் கியத்தையும் உறவையும் கெடுத்து, குடும்பத்தைப் பிரிய வைத்து, மிகப்பெரிய துன்பத்தைத் தந்து விடுகிறது. சனி திசை என்றால் பயப்படும் நாம், சுக்கிர திசை என்றால் ஆனந்தமாக இருப்பது எதனால்?
இது ஜோதிடம் சார்ந்த விஷயமல்ல. உளவியல் சார்ந்த விஷயம். அப்படிச் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் சுக்கிரனுடைய காரகங்கள்.
ஒருவன் ஆடம்பரமாகவும், ஆடை, வாகனம், வீடு முதலிய வசதிக ளோடும் மனதளவில் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் சுக்கிரன்தான் துணை புரிகிறான்.
அழகு, அன்பு, செல்வம், கலை, ஆடம்பரம், மகிழ்ச்சி, காதல், வாகனம் என வசதியான வாழ்க்கையைக் குறிப்பிடுவதும், அன்றாட சிற்றின்பங்களான, உண்ணுதல், உடுத்துதல் பாலியல் வேட்கைகளைத் தணித்துக் கொள்ளுதல் என அனைத்துக்கும் சுக்கிரன் காரக அதிபதியாக இருப்பதால் சுக்கிரனை அனைவரும் விரும்புகின்றனர்.
உறவுகளின் பெண்கள், மனைவி, மகள், மற்றும் சகோதரியாக வரும் உறவுகளைக் குறிப்பது சுக்கிரன். ஒருவன் தனக்குச் சொந்தமாக கையிலே வைத்திருக்கக் கூடிய நகைகளையும் ஆடைகளையும் ரொக்கத்தையும் குறிப்பது சுக்கிரன். அதனால்தான் காலச்சக்கரத்தின் இரண்டாம் வீடாகிய ரிஷபத்தையும், ஏழாம் வீடாகிய துலாத்தையும் சுக்கிரனுக்கு ஒதுக்கித் தந்தார்கள்.
அடிப்படைக் கல்வி, இனிமையான பேச்சு, குளுமையான பார்வை, (கண்களுக்கு அதிபதி அல்லவா), ஆடம்பரமான தோற்றம், அழகான குடும்பம், செல்வம் என வாழ்க்கையின் முக்கியமான அனைத்தையும் குறிப்பது இரண்டாம் பாவம்.
தனகாரகன் என்று குருவைச் சொன்னாலும், தனஸ்தானமாகிய இரண்டாம் வீட்டை அவருக்கு சாஸ்திரம் வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதைப்போலவே ஏழாம் இடம் சுக்கிரனுக்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது. அது துலா ராசி. துலாம் என்பது தராசு சின்னத்தைக் குறிக்கிறது.
உலகத்திலேயே சமமான உறவு கணவன் மனைவி உறவுதான். மீதி உள்ள உறவுகள் அனைத்தும் ஒன்று ஏற்றமாகவோ அல்லது இறக்கமாகவோ இருக்கும். ஆனால், கணவன் மனைவி உறவு மட்டும் தராசு தட்டு போல சமமாக இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தைத் தாண்டி இதில் நுட்பமான வாழ்வியல் சூத்திரமும் இருக்கிறது. கோபதாபங்கள், சந்தோஷங்கள், ஒருவருக் கொருவர் விட்டுத் தருதல் போன்ற விஷயங்கள் தராசு போல (ஏற்ற இறக்கமாக இல்லாமல்) இருந்தால், வாழ்க்கை அற்புதமாக இருக்கும் என்பதற்குத் துலா ராசி ஒரு எடுத்துக்காட்டு.
கோபத்தால் ஒரு தட்டு தாழ்கிறது என்று சொன்னால் அன்பு என்னும் இன்னொரு பொருளை வைத்து அதை சமம் ஆக்க வேண்டும். வால்மீகியில் ஒரு ஸ்லோகம். அனுமன் ராமனைப் பார்த்து விட்டான். அனுமனுடைய அழகைக் கண்டு மயங்குகிறான். குணத்தைக் கண்டு வியந்து போகிறான். அழகும் குணமும் ஒருவரிடத்தில் ஒருசேர இருக்குமா என்று எண்ணிப் பார்த்துத் திகைக்கிறான். இப்போது அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது. ராமனைப் பார்த்த அனுமன் சீதையைப் பார்க்கவில்லை. இவ்வளவு அழகாகவும் குணவானாகவும் இருக்கின்றானே ராமன், இவனுக்கு இணையாக ஒருத்தி கிடைத்திருக்குமா?
ராமனுடைய அழகையும் குணத்தையும் பார்த்தால் அதற்கு இணையாக ஒருத்தி இருப்பதாகக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
அதனாலோ என்னவோ சீதையைப் பற்றி அடையாளங்களை அனுமனிடம் மட்டும் சொல்லி அவனைத் தென்திசை நோக்கி அனுப்புகின்றான் ராமன்.
பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே, அசோக வனத்திலே சீதையைப் பார்த்து விடுகின்றான் அனுமன்.
அப்பொழுதுதான் இந்த துலா ராசி வேலை செய்கிறது. ஏற்கனவே ஒரு தட்டிலே ராமனுடைய குணத்தையும் அழகையும் வைத்து விட்டான். அந்தத் தட்டு தாழ்ந்து கிடக்கிறது. அதற்கு இணையான அழகு நிறைந்த பெண்ணை அடுத்த தட்டில் வைத்தால் தான் தட்டு சமமாக இருக்கும். இப்பொழுது சீதையைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகையும் குணத்தையும் எடுத்து இன்னொரு தட்டிலே வைத்தான். என்ன ஆச்சரியம்? இப்பொழுது இரண்டு தட்டும் சமமாக நிற் கின்றன. ஒன்றுக்கொன்று ஒரு குன்றிமணி அளவு கூட குறையவில்லை. வால்மீகியின் அற்புதமான ஸ்லோகம்.
துல்ய ஷீல வயோ விருத்தாம் துல்ய அபிஜன லக்ஷணாம் |
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அசித ஈக்ஷணா
|| 5-16-5
“துல்ய ஷீல வயோ விருத்தாம் துல்ய அபிஜன லக்ஷணாம்”
என்ற வாக்கியம் முக்கியம்.
வயதில் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அழகில் இருவருக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.
கண்களின் அழகு பார்க்கின்ற போது. இரண்டுமே தாமரைக் கண்கள். குளிர்ச்சி பொருந்திய கண்கள். இருவர் கண்களிலும் கருணை. ஆணுக்குரிய உடல்வாகும் கம்பீரமும் அவனுக்கு இருக்கிறது. (ஆண் யானையை கம்பன் ஒப்பிடுவான்) பெண்ணுக்குரிய உடல்வாகும் குணமும் இவளுக்கு இருக்கிறது. (அன்னத்தை கம்பன் ஒப்பிடுவான்) வயது,அழகு, குணம், மற்ற லட்சணங்கள் இருவருக்கும் துல்லியமாகப் பொருந்துகிறது.
தக்காளியையும் வெங்காயத்தையும் எடை போடும் பொழுது கொஞ்சம் குறைவாகவோ கூடுதலாகவோ எடை இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தங்கத்தை எடை போடும் பொழுது எடை துல்லியமாக இருக்கும். அதைத்தான் துலாக்கோல் காட்டுகிறது. இது கல்யாண வேத மந்திரத்திலும் வருகிறது.
“நாம் இருவரும் சமமாக இருக்க வேண்டும். நீ கூடுதலாகவோ நான் குறைவாகவோ, நான் கூடுதலாகவோ நீ குறைவாகவோ இருந்து விடக்கூடாது” என்று கணவன் மனைவியைப்பார்த்து அக்னி முன்னால். சொல்லும் மந்திரம் இருக்கிறது. இன்னும் நுட்பமாக சொல்லப்போனால், பாலியல் வேட்கையில் கூட ஒரு சமத்துவம் இருக்கும். தம்பதியர்கள் உயிர் பிரியும்போது தவிர மற்ற எந்த நேரத்திலும் பிரிய மாட்டார்கள். அவன் உயிர் பிரிந்தாலும் இவளுடைய உயிரும் போய்விடும். இவ்வளவும் சொல்லுகின்ற ராசி தான் துலாம் ராசி. துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் மட்டும் ஒரு ஜாதகத்தில் சரியாக அமைந்து விட்டால், வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்துவிடும். இதனால் தான் சிறப்பான வாழ்வை வாழும் போது சுக்கிரதசை அடிக்கிறது என்கிறோம்.
(தொடரும்)