Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருமண முன்னேற்பாடுகள்

வீட்டைக் கட்டிப்பார்; திருமணம் செய்து பார் என்று சொல்வார்கள். வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்? எவ்வளவு அலைச்சல் இருக்கும்? எவ்வளவு கவனமாக செய்ய வேண்டும்? அத்தனை செலவும் அத்தனை அலைச்சலும், அத்தனை கவனமும் ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கும் தேவை. கட்டிய இல்லத்தில் நாம் காலம் காலமாக வாழ வேண்டும்.

அதற்காகத் தான் அத்தனை முன்னேற்பாடுகள். அதே மாதிரி திருமணம் செய்து கொண்ட மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும். அந்த குடும்பத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு மிக சிறப்பான நிகழ்ச்சி. அதில் எந்த தடங்கல்களும் சிக்கல்களும் குழப்பங்களும் வரக்கூடாது. சரியாக திட்டமிட்டு வேண்டிய பொருள்களைச் சேகரித்துக்கொண்டு முறையாகச் செய்தால் இதற்கு வாய்ப்புகள் குறைவு. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்து முடித்தாலும் அதற்கான முன்னேற்பாடுகள் இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட வேண்டும்.

திருமணத்திற்கான சடங்குகளைச் செய்யத் தேவையான பொருட்களைப் பட்டியலிட்டுச் சேகரித்துக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சியின் போது அது வேண்டும் இது வேண்டும் என்று தடுமாறக் கூடாது.

ஆடம்பரமான - விலை அதிகமுள்ள பொருட்கள் தேவையில்லை. ஆனால், சடங்குகளைச் சிரத்தையுடனும் ஈடுபாட்டோடும் நம்பிக்கையோடும் செய்வது அவசியம்.

நல்ல புரோகிதரிடம் முறையான பட்டியலை முன்கூட்டியே வாங்கி அதில் உள்ள பொருள்களைச் சேகரிப்பது மட்டுமல்ல, அதைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மணமேடையில் தேவையான பொருட்களை கொண்டு போய் ஏதாவது ஒரு அறையில் வைத்து விட்டு அந்தச் சமயத்தில் அல்லாடக்கூடாது. தனித் தனி தாம்பாளங்களில் அந்த பொருட்களைச் செக்லிஸ்ட் வைத்து சரி பார்க்க வேண்டும். அதனைக் கலைக்கக் கூடாது.

பல திருமணங்களில் பார்த்திருக்கலாம். ஒரு சிறு பொருளுக்காக மந்திரத்தை நிறுத்திவிட்டு புரோகிதர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்னும் சில நேரத்தில் அந்தப் பொருளை வாங்கி வைத்திருப்பார்கள். அது வேறு ஒருவரிடம் இருக்கும். அவர்கள் வேறு எங்கோ சென்று விடுவார்கள். திருமாங்கல்யம், மெட்டிபோன்ற பொருள்களை, பொறுப்பான நபர்களிடம் கொடுத்து அவர்கள் மேடையிலேயே இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சடங்குகள் செய்யும் போது புரோகிதர்களுக்கு பொருள்கள் எடுத்து கொடுப்பதற்கும் அவர்களோடு இணைந்து நல்ல முறையில் நடத்தி கொடுப்பதற்கும் பொறுப்புள்ள பெண் வீட்டுகாரர் ஒருவரும் மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஒருவரும் மேடையிலேயே இருக்கவேண்டும். காரணம் பாதபூஜைக்கு ஒருவரை அழைப்பார்கள். ஆனால் அவர் வாசலில் எங்கோ இருப்பர். அல்லது வேறு ஏதோ பொருள் வாங்குவதற்காக வெளியிலே சென்று இருப்பார். அப்போது அந்த சடங்கு அப்படியே நின்றுவிடும். மற்றவர்கள் காத்திருப்பது போல ஆகிவிடும். கடைசியில் சில முக்கிய சடங்குகளை அவசரம் அவசரமாக முடிக்க வேண்டியிருக்கும்.