Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வியாசராஜரின் முதல் அனுமன்!

முப்பத்தி ஐந்தாவது ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனாக, கர்நாடக மாநிலம் கோலார் அருகில் ``முல்பாகல்’’ என்னும் பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ மடத்தில் உள்ள அனுமனை நாம் இந்த தொகுப்பில் தரிசிக்க இருக்கிறோம்.

வேத அறிஞர்கள் அதிகளவில் வசித்த இடம்

கர்நாடக மாநிலத்தில், கோலார் என்னும் மாவட்டம் உள்ளது. இங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தால், முல்பாகல் என்னும் இடம் வருகிறது. இந்த இடத்தில்தான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் இருக்கிறார். அதுமட்டுமில்லாது. முல்பாகல் மடத்தை சேர்ந்த மகான்

``ஸ்ரீ ஸ்ரீ பாதராஜரின்’’ மூலபிருந்தாவனமும், இவரின் வழிவந்த பல மகான்களின் மூலபிருந்தாவனமும் இங்குதான் உள்ளது. முல்பாகல் என்னும் இந்த பழங்கால நகரம், பெங்களூருவையும் திருப்பதியையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், இந்த இடத்தில் ``வேத அறிஞர்கள்’’ அதிகளவில் வசித்த இடமாக இருந்திருக்கிறது. அப்போது இந்த அறிஞர்களையெல்லாம் கடந்த கால மன்னர்கள் குறிப்பாக, விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள். மேலும், மகாபாரத காலத்திற்கு முன்பே இந்த முல்பாகல் இடம், சிறப்பு பெற்றியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன.

வரலாற்று சிறப்பு வாய்ந்த முல்பாகல்

மைசூர் மாகாணத்தின் கிழக்கு எல்லையை ஒட்டி இப்பகுதி இருப்பதால் இதற்கு ``முதலபாகிலு’’ என்று பெயர் வந்தது. ``முதலபாகிலு’’ என்ற கன்னட சொற்களுக்கு, தமிழில் ``கிழக்கு வாசல்’’ என்று பொருள். பின்னர், முதலபாகிலு என அழைத்துவந்த மக்கள், முலபாகிலு என்று அழைத்து, காலப்போக்கில் முல்பாகல் என்று ஆங்கிலத்தின் சொற்களாக மாறியது. திரேதாயுகத்தில், முல்பாகலை ``பாஸ்கர க்ஷேத்திரம்’’, ``கதலீஷா-வான்’’ மற்றும் ``அர்ஜுனபுரம்’’ ஆகிய பெயர்களில் அழைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இக்ஷ்வாகு வம்சத்தின் குலகுருவான வசிஷ்ட முனிவர், திரேதாயுகத்தில் ராமர், சீதா, லட்சுமணர்களோடு இங்கு வந்ததாக கூறப்படுகிறது. அதே போல், மகாபாரதப் போருக்குப் பிறகு, அர்ஜுனன் தேரின் மீது இருந்த ஆஞ்சநேயகொடியை கடைசியாக இங்கு நிலைநாட்டியதாக ஒரு செவிவழிசெய்தியும் உண்டு. முன்னர் சொன்னதுபோல, முல்பாகல், பல வேத அறிஞர்கள் வாழ்ந்த இடமாக திகழ்ந்தது. அதில் மிக முக்கியமானவர் மகான் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ தீர்த்தர் ஆவார். முல்பாகல் என்றாலே ஸ்ரீ பாதராஜர் நினைவுக்கு வந்துவிடுவார். இவரது வேதாந்த புலமையைப் பாராட்டி, அப்போதைய விஜயநகர அரசர் ஸ்ரீ சாளுவ நரசிம்ம தேவராயரால் பல முறை கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வித்யா குரு

அது மட்டுமா! மகான் ஸ்ரீ பாதராஜரை தனது குருவாக கருதினார், விஜயநகர பேரரசர் ஸ்ரீ சாளுவ நரசிம்ம தேவராயர். ஆகையால், அவருக்கு அனைத்து அரசு மரியாதைகளையும் வழங்கினார். மேலும், குரு ஸ்ரீ பாதராஜருக்கு `ரத்னா அபிஷேகமும்’ நிகழ்த்தியிருக்கிறார். மகான் ஸ்ரீ பாதராஜரை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு, நம் ``அருள் தரும் ஆன்மிகம்’’ இதழை தொடர்ந்து படிக்கவும். அதில் ``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பகுதி வருகிறது. இன்னும் சில தினங்களில் ஸ்ரீ பாதராஜரை பற்றிய தகவல்கள் வரவிருகின்றன, அதை படித்தும் ஸ்ரீ பாதராஜரை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். முல்பாகலில், ``பஜார் தெரு’’ மிகவும் பிரபலமாகும். இங்குதான் ஆரம்பத்தில், ஸ்ரீ பாதராஜர் மடத்தை நிறுவி, தனது பல சீடர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்திருக்கிறார். மேலும், இத்தலத்தில் ``ஸ்ரீ லட்சுமிநாராயண பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார். இன்னொரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தருக்கு, ஸ்ரீ பாதராஜரே வித்யா குரு ஆவார். அதாவது வேதங்களை கற்றுக்கொடுத்த குரு ஆவார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகள், ஸ்ரீ பாதராஜரிடத்தில் வேத, புராணங்கள் மற்றும் துவைத தத்துவத்தையும் பயின்றிருக்கிறார், மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர். ஒரு முறை ஸ்ரீ பாதராஜர், வியாசராஜருக்கு பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, வானத்தில் இருந்து ``மலர் மழை பொழிந்து’’ தேவர்கள் ஆசீர்வதித்தனர், என்று மத்வ நூல்கள் குறிப்பிடுகின்றன.

பரிந்துரைத்த ஸ்ரீ பாதராஜர்

இத்தகைய மகா அற்புதத்தை நினைவுகூரும் விதத்தில், மலர் மாரி பொழிந்த இடத்தில் துளசி மாடத்தை வைத்து அதில் துளசியை வைத்துள்ளனர். இன்றும் துளசி மாடத்தை காணலாம். இன்று வரையிலும் அந்த துளசி பட்டுப்போகாமல் இருப்பது, திருமகளின் அருட்கடாட்சம்! நாட்கள் செல்ல, விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசர், ஸ்ரீ பாதராஜருக்கு ``ராஜகுரு’’ என்கின்ற அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கிறார். ஒரு கட்டத்தில், தலை நகர் விஜயநகரத்தில் கடும் பிரச்னை ஒன்று நிலவுகிறது. உடனே தலைநகரத்திற்கு சென்று அதனை சரிசெய்யுமாறு ராஜகுருவான ஸ்ரீ பாதராஜரிடத்தில் வணங்கி கேட்டுக்கொண்டார், பேரரசர். ஸ்ரீ பாதராஜரின் வயது மூப்பு காரணமாக, தலைநகரத்திற்கு செல்ல முடியாத சூழல். சற்றும் யோசிக்காத ஸ்ரீ பாதராஜர், தனது சீடரான ஸ்ரீ வியாசராஜதீர்த்தரை பரிந்துரைத்து, உடனே தலைநகரத்திற்கு செல்ல வியாசராஜருக்கு ஆணையும் இடுகிறார். குரு பேச்சை மீறாத வியாசராஜர், தலைநகரத்திக்கு செல்கிறார், அந்த பிரச்னையை தனது சாதுரியத்தால் முடித்துவைக்கிறார். காலப் போக்கில், ஸ்ரீ வியாசராஜர் விஜயநகரப் பேரரசின் ராஜகுருவானார். மேலும், சங்கம வம்சத்திலிருந்து துளுவ வம்சத்திற்கு, ராஜ்ஜியத்தில் இருந்த பாதுகாவலர்கள், மந்திரிகள் ஆகியோர்கள் மாற்றப்பட்டாலும், ஸ்ரீ வியாசராஜர் மட்டும் தொடர்ந்து ராஜ குருவாகவே இருந்து, மன்னர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

ஸ்ரீ பாதராஜருக்காக கங்கையே வந்தாள்

தற்போது ஸ்ரீ பாதராஜ மடம், முல்பாகலில் உள்ள ``நரசிம்ம தீர்த்தம்’’ என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மடத்தை கன்னடத்தில் ``முளுபாகிலு’’ என்று கூறுகிறார்கள். மத்வரின் நேரடி சீடரான மஹான் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட ``ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி’’ இங்கு இருக்கிறார். ஆகையால், யோக நரசிம்ம சுவாமியின் சாந்நித்தியத்தை உணர்ந்த ஸ்ரீ பாதராஜர், தன் மடத்தை இங்கு அமைத்துக்கொண்டார். காலங்கள் உருண்டோட, ஸ்ரீ பாதராஜருக்கு கங்கையில் நீராட வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டது. ஆனால், வயது மூப்பு காரணமாக காசிக்கு சென்று கங்கை நதியில் நீராட முடியாத நிலை. தினமும் இதனை எண்ணியெண்ணி குறைப்பட்டுக்கொண்டார். ஒரு நாள், ``கங்கை மாதா’’ ஸ்ரீ பாதராஜரின் முன்பு தோன்றி, உனக்காக நான் நரசிம்ம தீர்த்தத்திலும் வாசம் செய்ய போகிறேன். இனி நீ.. நரசிம்ம தீர்த்தத்துலேயே ஸ்நானம் செய்யலாம். என்றுகூறி ஆசிர்வதித்து மறைந்தாள். இதன் காரணமாக, ஸ்ரீ பாதராஜ மடத்தில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடுவது, கங்கையில் நீராடுவதற்குச் சமமாக கருதப்படுகிறது.இன்னொரு ஆச்சரிய செய்தி என்னவென்றால், இவ்விடத்தில் ``வியாச குகை’’ ஒன்றும் உள்ளது. இந்த குகையில்தான் ஸ்ரீ வியாசராஜர் தவம் செய்திருக்கிறார். வியாசராஜரின் வித்யா குருவான, ஸ்ரீ பாதராஜரின் மூலபிருந்தாவனத்தை நோக்கி, வியாச குகை அமைந்துள்ளது.

முதலில் உருவான அனுமன்

பல ஆச்சரியங்கள் நிறைந்த இந்த முளுபாகிலு மடத்தில், இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், மகான் ஸ்ரீ வியாசராஜர் முதல் முதலில் அனுமனை பிரதிஷ்டை செய்தது இங்குதான். ஆக, ஸ்ரீ பாதராஜமடத்தில் இருக்கும் அனுமன்தான், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த முதல் அனுமனாவார். மேலும், தன் வித்யா குருவான ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ லட்சுமி நாராயணரின் அருகிலேயே தனது முதல் அனுமனையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார், வியாசராஜர்.

1) மகான் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் பிரதிஷ்டை செய்யப்பட யோக நரசிம்மர்,

2) ஸ்ரீ பாதராஜர் பிரதிஷ்டை செய்யப்பட லட்சுமி நாராயணர்,

3) மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்,

4) ஸ்ரீ பாதராஜரின் மூலபிருந்தாவனம்,

5) ஸ்ரீ பாதராஜமடத்தின் வழிவந்த மஹான்களின் மூலபிருந்தாவனங்கள்,

6) நரசிம்ம தீர்த்த புஷ்கரணியில் வாசம் செய்யும் கங்கை,

7) வியாசராஜர் தவம் புரிந்த வியாசகுகை.

இப்படி பல வகையில் அதீத சாந்நித்தியம் நிறைந்த இந்த முல்பாகல் மடத்திற்கு வந்திருந்து அனுமனிடத்தில், நாம் மனதில் நினைத்திருக்கும் காரியத்தை எண்ணினாலே போதும், எண்ணிய காரியத்தை எள்ளளவும் குறையாது, அனுமன் நிறைவேற்றித்தருகிறார். கோயில் தொடர்புக்கு: 08277292062.(இங்கு வியாசராஜர் இரண்டாவதாக பிரதிஷ்டை செய்த அனுமனும் இருக்கிறார். அவரை வரும் காலங்களில் தரிசிக்கலாம்).

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை: 6.00 முதல் இரவு 7.00 வரை.

எப்படி செல்வது: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கிறது முல்பாகல். அதே போல், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் முல்பாகலை அடையமுடியும்.