Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரமாத்மா தரிசனம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 102 (பகவத்கீதை உரை)

நம் புலன்களை வேலைக்காரர்களாக நடத்தும் எஜமானனாக நம்மை பாவித்துக் கொள்வதில் நாம் அசௌகரியப்படுகிறோம். அவ்வப்போதைய சொற்ப இன்பங்களை ஊட்டி, புலன்கள் நம்மை ஒவ்வொரு முறையும் வென்று விடுகின்றன. ஆனால் அதுதான் புலன்களின் பொறுப்பு, கடமை. அதேசமயம், அவற்றை அலட்சியப் படுத்த நம்மால் முடிகிறதா, அப்போதே நாம் அவற்றின் எஜமானன்தான். சுகம், துக்கம் இரண்டையும் கடந்து நிற்கும் திறமை நமக்கு இன்னமும் கைவரப் பெறவில்லை. அதனால் இரண்டும் தன்னிச்சையாக அதனதன் சுற்றுப்படி நமக்குள் புகுந்து கொள்கின்றன. ‘வெளியே நில்’, ‘கெட் லாஸ்ட்’ என்று சொல்ல நமக்குப் பக்குவமில்லை. ஆனால் ஒரு யோகியால் இது முடியும்.

ஜிதாத்மன ப்ரசாந்தஸ்ய பரமாத்மா

ஸமாஹித சீதோஷ்ணஸுகது கேஷு ததா மானாபமானயோ (6:7)

‘‘தன்னை வென்று, மனம் தெளிந்த

வனுக்கு வெப்பத்திலும் - குளிர்ச்சியிலும், இன்பத்திலும் - துன்பத்திலும், புகழ்ச்சியிலும் - இகழ்ச்சியிலும் அந்த பரமாத்மாவின் தரிசனமே நிரந்தரமாக நிலைத்திருக்கும்.’’

அதாவது எப்போதுமே பரம்பொருளிடம் லயித்து விடுபவனுக்கு எல்லாமே ஒன்றுதான். தன்னை வென்றவனை, தன் உடல் புலன்களோ, இயற்கை பூதங்களோ, பிற உயிர்களோ, எதுவுமே எந்த பாதிப்பையும் உண்டாக்காது. இவனைப் பொறுத்தவரை வெளித் தொடர்புகள் சுற்றமுமில்லை; பகையுமில்லை.

எல்லாமே ஒன்றுதான். சான்றோர் புறக்கணிக்கும் கீழான ஆசைகளை அடக்கியவனுக்கு இது சாத்தியம். ஏனென்றால் இவன் சிந்தையில் எப்போதுமே பரமாத்மாவே நிறைந்திருக்கிறார், வாழ்க்கைக் கண்ணாடியில் அவன் பார்த்தானானால் பிம்பமாகத் தெரிவது பரமாத்ம சொரூபமே. ஆமாம், தன்னையே அவனால் கண்ணாடியில் காண முடியாது. இதனாலேயே தனக்கும் பிம்பத்துக்குமான இடைவெளியில் எந்த மறைப்பு உண்டானாலும், அவனால் அதை உணர முடிவதில்லை. எல்லா நலன் களிலும் பிரதானமானதாகிய இந்த பரமாத்ம தரிசனம், அவனுக்கு அவனே அறியாமல் பல நலன்களை உருவாக்கித் தருகிறது. அந்த நலன்களையும் அவன் அந்தப் பரம்பொருளுக்கே சமர்ப்பிக்கிறான்.

‘‘விஷய சுகங்களில் சிறிதும் ஈடுபடாத மனம், ஈஸ்வரனிடம் சென்று அவனுடன் ஒன்றி விடுகிறது. இப்படித்தான் பந்தங்களிலிருந்து ஆன்மாக்கள் முக்தியடைகின்றன. அதேசமயம், ஈஸ்வரனை நோக்கிப் போகும் பாதைக்கு எதிராகச் செல்லும் ஆன்மா, பந்தப்பட்டு விடுகிறது,’’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

காட்சிகளை நோக்கி பார்வை பாய்வது இயற்கைதான். அது பதார்த்தங்களின் மீதும் பாயும், பரமாத்மாவை நோக்கியும் செல்லும். பதார்த்தங்களின் மீது பாய்வதைக் கட்டுப்படுத்தினால், பரமாத்ம அனுபவத்தை எளிதாக அடைய முடியும். பதார்த்தம் ஏதேனும் ஓரிடத்தில்தான் இருக்கும்; ஆனால் பரமாத்மாவோ அகிலமெங்கும் வியாபித்திருக்கிறார். ஆகவே பரமாத்மாவை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது எளிதானது, இல்லையா?

ஒரு கதை. ஒரு பெரிய பையன், சிறு வயது நண்பர்களை அழைத்துக் கொண்டு ஒரு மாந்தோப்புக்குள் நுழைகிறான். காவலாளி இருப்பான் என்பதால், அந்த முயற்சியில் உள்ளே செல்வதாகிய முதல் கட்டமே திருட்டுத் தனமாகத்தான் அமைகிறது! மாமரங்களில் மணம் வீசும் பழங்கள் குலை குலையாகத் தொங்குகின்றன.

பெரியவன், உடன் வந்தவர்களுக்கு சலுகை அளிப்பது போல, ‘‘உங்களுக்கு விருப்பமான பழங்களைப் பறித்துக் கொள்ளுங்கள்,’’ என்று ‘அனுமதி’ அளிக்கிறான். பிள்ளைகள் தலா இரண்டு அல்லது மூன்று என்று தம் கைகள் கொள்ளுமளவுக்குப் பறித்துக் கொள்கிறார்கள். இப்போது பெரியவன், ‘‘இப்போது நாம் துரிதமாகச் செயல்பட வேண்டும். எந்நேரமும் காவலாளி வந்து விடலாம். ஆகவே நாம் பறித்த பழங்களை, இப்போதே எங்கேனும் மறைவிடத்திற்குப் போய் சாப்பிட்டு விடுவோம். பிறகு தோட்டத்தை விட்டு வெளியேறுவது சுலபமாக இருக்கும்,’’ என்கிறான்.

அதைக் கேட்டு சிறுவர்கள் ஆளாளுக்கு மரத்துக்கு பின்னாலும், மரக் கிளை மேலும், பம்ப் செட் அறைக்குள்ளும், மாட்டு வண்டிக்கு அடியிலுமாகப் போய் பழத்தை உட்கொள்கிறார்கள். ஆனால் ஒரே ஒருத்தன் மட்டும் கையில் பழங்களை வைத்துக் கொண்டு மலங்க, மலங்க நின்று கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்து பெரியவன், ‘‘நீ ஏண்டா, இங்கே நிற்கிறாய். காவலாளியின் கண்களில் பட்டுத் தொலைக்கப் போகிறாய். உன்னால் எங்கள் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே எங்காவது ஒளிந்து கொண்டு, யாரும் பார்க்காத வண்ணம் பழங்களைச் சாப்பிடு,’’ என்று கடுமையாகச் சொல்கிறான்.

பாலகன் நிமிர்கிறான். ‘‘எங்கே ஒளிந்து கொள்வது? அதுவும் யாரும் பார்க்காத ஒளிவிடம் என்கிறாய். ஆனால் பகவான் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். அப்படியானால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருப்பார்? எப்படி அவருக்கும் தெரியாமல் ஒளிவது?’’ என்று கேட்கிறான். இவன்தான் யோகி. செய்வது திருட்டு.

இதன் பலனை தலைமறைவாகத்தான், ஒளிந்து கொண்டுதான் அனுபவிக்க வேண்டும், என்ன கேவலம்! பகிரங்கமாக, பலர் அறிய, சுதந்திரமாக உண்ணும் சுகம் இல்லை; பிறருக்கு பயந்து கொண்டு, தன்னை வெளிக்காட்டாத மறைவிடத்திற்குப் போய் சாப்பிடும்போது, அந்த மாம்பழம்தான் இனிக்குமா, சுவைக்குமா? யாரேனும் பார்த்து விடுவார்களே என்ற பயம் சுவையே இல்லாமலேயே செய்து விடுமே! இந்த நோக்கில் சிந்திக்கும்போது பகவான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வைத் தவிர்க்க முடியுமா? இச்செயலால் ஆன்மா அல்லவா அசிங்கப்படுகிறது!

தவறு செய்ய விரும்பாத அல்லது தவறிழைக்க பயப்படுகிற ஆன்மாவால்தான் எந்தக் கோணத்துப் பார்வையிலும் பரம்பொருளைக் காண முடியும். அதாவது நாம் பிரமையிலிருந்து விடுபடவேண்டும்; உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். நேரான ஒரு கம்பு, தண்ணீருக்குள் போனால், உள்ளே வளைந்து விடுகிறது - அதாவது வளைந்ததுபோலக் காணப்படுகிறது. கம்பை வெளியே எடுத்தால், அது பழையபடி நேராகத்தான் இருக்கிறது. வெளியே அசல், உள்ளே பிரமை. அதுதான் காட்சி. ஆனால் பிழையான காட்சி.

தண்ணீருக்குள் கம்பு வளைந்திருக்கிறது என்ற நேருக்கு நேரான காட்சியை கண்கள் பார்க்கின்றன. ஆனால் அது வளைவல்ல, காட்சிப் பிழை என்கிறது அறிவு. அதாவது நம் புலன்கள் பொருளைப் பார்க்கும்; அறிவுதான் மெய்ப்பொருளைப் பார்க்கும். இந்த அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது ஆன்மா சந்தோஷப்படுகிறது. அனுபவங்களால் அறிவு முதிர்ச்சி பெறுகிறது - பெற வேண்டும். அனுபவங்கள் அடுத்தடுத்து நிகழ்வதும் அவை ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவதும்தான் அறிவு வளர்ச்சிக்கு உரம்.

‘நேற்றுபோல் இன்று இல்லை; இன்றுபோல் நாளை

இல்லை’ என்பார்கள். ஆகவே அனுபவங்களே

வாழ்க்கையின் அடிநாதம். எதுவரை?

வாழ்க்கையின் கடைசி அனுபவமான மரணம்வரை! யாராலும் தவிர்க்கவே முடியாத இறுதி அனுபவம் இது. இறைவன் நிர்ணயித்தது. இது எப்போது நிகழும்? இதுவும் இறைவன் நிர்ணயித்ததே. மரணத்தைக் கட்டாயமாக்கிய பரமன், ஒரு சலுகையாக ஆயுளை - வயதை - அளித்திருக்கிறான். இன்றோடு உலகத்துக்கு குட்பை சொல்லிவிட்டுப் போகலாம் என்று தெரியவந்தால், என்னவாகும்? இத்தனை நாள்தான் வாழப் போகிறோம்.

அதுவரை நல்லதையே செய்து புண்ணியம் தேடிக் கொள்வோம் என்ற நினைப்பு மேலோங்குமா அல்லது அதற்குள் முடிந்தவரை எல்லா சுகங்களையும் அனுபவித்து விடுவோம் என்று தோன்றுமா? இரண்டுமே தோன்றக்கூடும். காரணம், நம் மனசு! இதில் எதைத் தேர்ந்தெடுப்பது? சொந்த சுகமா அல்லது பொது நன்மையா? இந்தக் குழப்பத்தில் தவிப்பது ஆன்மாதான். ஆமாம், அது இந்தக் கூட்டிலிருந்து போய் இன்னொரு கூட்டைத் தேட வேண்டுமே! கடைசிவரையிலான பாபம் அல்லது புண்ணியத்தையும் சுமந்துகொண்டு போக வேண்டுமே!

இப்படி ஆன்மா தவிக்க வேண்டாம் என்பதாலேயே பரம்பொருள் மரணத்தை மர்மமாக வைத்திருக்கிறது என்றும் சொல்லலாம். ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். அதாவது நாமே அறிய முடியாமல் நமக்கு நிகழக்கூடிய இறுதி அனுபவம்!

அதனால்தான் மூப்பு எய்தியவர்கள் இந்த உலகை விட்டுச் செல்வதை பகவான் சுட்டிக் காட்டுகிறார்; தயாராக இருக்கும்படி அறிவுறுத்துகிறார். இதனால் ‘மூப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அலட்சியம் காட்டக் கூடாது என்பதால் சில அகால வயது மரணங்களையும் நமக்குக் காட்டுகிறார். புரிந்து கொள்ள வேண்டியது நம் அறிவின் பொறுப்பு. அதாவது ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம் ஆனால் அதுவும் அவரவருக்கு அவன் விதித்திருக்கும் போதுதான் நிகழ்கிறது. இன்னும் எத்தனை நாளோ என்ற மர்மத்தில் ஆழ்ந்து விடுபவன் அந்த அனுபவம்வரை துக்கத்திலேயே வாழ்கிறான். ஆனால் விதியின் இந்த உண்மை தெரிந்த பிறகும் சந்தோஷமாக வாழ்வதே ஆன்மாவுக்குக் காட்டும் மரியாதையாகும். அதாவது புலன்களிடமிருந்து தன்னை வெல்வது.

ஊர்ப் பெரியவருக்கு மரியாதை செய்வதற்காக சிலர் ஒன்றுகூடி அவருக்கு பழங்கள், மலர்கள், சால்வைகள் என்றெல்லாம் திரட்டிக் கொண்டு சென்றார்கள். அவர்களை வரவேற்று அமர வைத்த அவர், அவர்கள் தம் முன் நீட்டிய பொருட்களை சைகையால் மறுத்தார். வந்தவர்கள் வியந்தார்கள். ‘‘உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் இவற்றைக் கொண்டு வந்திருக்கிறோம். உங்கள் மீதான எங்கள் அபிமானத்தை நாங்கள் வேறு எப்படி காட்ட முடியும்? உங்களைப் போன்ற ஒருவர் எங்களுக்கு வழிகாட்டியாக அமைவது எங்களுக்கெல்லாம் பெருமையான விஷயம். ஆகவே அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்,’’ என்று பலவாறாக வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் அவர் முழுமையாக மறுத்தார். ‘‘நீங்கள் மரியாதை செய்கிறீர்கள். சரி, இதை ஏற்கும் இதே கணத்தில் அவமரியாதைக்கும் நான் தயாராக இருக்க வேண்டும். அந்த அவமரியாதையையும் மறுக்கும் பக்குவம் எனக்கு வர வேண்டும். அதற்கு இந்த மரியாதையை நாம் மறுப்பதுதான் சரி,’’ என்று கூறிவிட்டார். அதாவது சுகத்தின்போது நாம் விழிப்படைய வேண்டும். பாராட்டுகளால் மகிழும் நாம், ஏச்சுகளையும் சமமாக பாவித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாராட்டு என்பது நம் தகுதிக்கான அங்கீகாரம் என்பதைப் போல, ஏச்சும் நம் ஒழுங்கீனத்துக்கான விமரிசனம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் பாராட்டை ஏற்று அதன் சுகத்தைக் கண்டுவிட்ட நாம், பழிக்கப்படும்போது மட்டும் எதிர்க்கிறோம், அது அவதூறு என்பதை நிரூபிக்கப் பலவாறு முயற்சிக்கிறோம். ஆகவே, பாராட்டின் போது ஏற்காததும் அல்லது குறைந்த பட்சம் அடக்கமாக இருந்து விடுவதும், எதிர்மறை விளைவின் போது நம்மை சமநிலையில் நிறுத்தி வைக்கும்.

ஒருவர் நம்மைப் புகழும்போது உள்ளே மனசு பரபரப்படைகிறது. வெளியே வெட்கமாக முகம் காண்பித்தாலும், மனசு, ‘இன்னும் கொஞ்சம் சொல்லு, இன்னும் கொஞ்சம் சொல்லு’ என்று ஏங்குகிறது. அதேபோல நாம் நிந்திக்கப்படும்போது மனசு சட்டென்று கோபம் கொள்கிறது. அந்த நிந்தனைகளுக்குத் தான் ஆட்பட்டவன் இல்லை என்று பல காரண காரியங்களை விவரிக்கிறது. இதற்குப் பலனில்லாத பட்சத்தில் கோபம், அதை அடுத்து பகை என்றாகிறது.

இரு நிலைகளிலும் நாம் பரமாத்மாவையே தரிசிக்க வேண்டும். அதைக் கொடுப்பதும் நீயே, இதைக் கொடுப்பதும் நீயே என்ற அந்தராத்ம உணர்வு கொள்ள வேண்டும். அதாவது நாம் ஸ்வயம் ஆக வேண்டும். இந்த நிலையில்தான் நம்மால் பரமாத்மாவை உணர முடியும், அணுக முடியும். அதன் மூலம் நம்மை வெல்ல முடியும்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்