மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த எட்டு விநாயகர் ஆலயங்கள். அவர்கள் ‘அஷ்ட கணபதிகள்’ என்று போற்றப்படுகின்றனர். அதே போன்று, தமிழ்நாட்டில் கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம், தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காமதாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம், ஷட்சக்தி பீடம் என ஒன்பது கணபதி பீடங்கள் உள்ளன. அவற்றை ‘நவ கணேச பீடங்கள்’ என்கிறார்கள்.
காவிரி நதி கடலோடு கலக்கும் கடைமுகப் பகுதியில் உள்ள திருத்தலம் திருவெண்காடு பதியாகும். இதற்கு சுவேத வனம் என்ற பெயரும் உண்டு. சீர்காழிக்கு அருகில் இத்திருத்தலம் உள்ளது. தேவர்களுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்த இந்திரன், சீர்காழிப்பதியில் தவம் செய்து வந்தான். அப்போது அங்கே கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. இதனால் சிவ பூஜை செய்ய அவன் மிகவும் சிரமப்பட்டான். இந்திரனுக்கு உதவி செய்யவே விநாயகப்பெருமான் காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார் என்கிறது கந்த புராணம்.
குடகு மலையில் காவிரி நதியை தோன்றச் செய்து, சோழ நாட்டிற்கு வளம் சேர்க்கக் காரணமானவர் கணபதி. காவிரி, மகரிஷி என்ற முனிவரால் வளர்க்கப்பட்டவள். அகத்திய மா முனிவரின் அன்பு மனைவி உலோபா முத்திரையும் இவளே. இவள் ஸ்திரீ ரூபம், நதி ரூபம் என்னும் இரு வகை வடிவங்கள் கொண்டவள். உரிய காலத்தில் நதியாகும் வரத்தினைச் சிவபெருமானிடம் பெற்றவள்.
குடகு மலையில் அகத்தியர் தவம் செய்து வந்த நேரம். ஒரு மரத்தடியில், நதி ரூபத்தில் உலோபா முத்திரை இருந்த கமண்டலத்தை வைத்து விட்டுத் தியானத்தில் ஆழ்ந்தார் அகத்தியர். புனித நதியாக காவிரி வெளியேற வேண்டும் என்று தேவர்கள் பிள்ளையாரிடம் வேண்டிட, அவர் காக்கை வடிவம் எடுத்து கமண்டலத்தைக் கவிழ்த்தார். காவிரி தோன்றிய குடகு மலையில் கணபதி வழிபாடு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
காவிரி நதி கடலோடு கலக்கும் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு திருத்தலம் விநாயகர் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகும். இங்கு ஒன்பது கணபதி பீடங்கள் இருந்தன. இதனை உலகிற்குத் தெரியப்படுத்தியவர் பரத்வாஜ முனிவர்.புதனுக்குரிய இந்த திருவெண்காடு திருத்தலம் மிகச் சிறந்ததொரு பரிகாரத்தலமாகும். சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் என்று மூன்று திருக்குளங்கள் இங்கே உள்ளன. இத்திருத்தலத்தைச் சுற்றிலும்தான் ஒன்பது நவ கணேச பீடங்கள் அமைந்துள்ளன.
கணேச பீடம்: ஒன்பது பீடங்களில் முதலாவது கணேச பீடம். இது சித்த பிலம் என்ற இடத்தில் உள்ளது. தற்போதுள்ள பெரும் பள்ளம் என்பதே முந்தைய சித்த பிலம். இங்கு எழுந்தருளியுள்ள கணேச சக்திக்கு ‘மயூரா’ என்று பெயர்.ஸ்வானந்த கணேச பீடம்: திருவெண்காட்டுக்கு அருகிலுள்ளது பால மாயூரம் என்னும் தலம். இங்குள்ள பீடம் சிவன், சக்தி, சூரியன், திருமால், பிரம்மன் ஆகியோரால் கிருத யுகத்தில் நிறுவப்பட்டது. இங்கு சித்தி, புத்தி தேவியருடன் விநாயகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.
தர்மபீடம்: காவிரிப் பூம்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையை ஒட்டி ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு தர்ம விநாயகர் என்று பெயர். இயக்க உருவம் கொண்ட தர்ம தேவதையால் ஸ்தாபிக்கப்பட்டவரே தர்ம விநாயகர். பஞ்சபாண்டவர்களால் வழிபடப்பட்ட இவரை துதித்தால் தர்மம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும், புண்ணியம் சேரும்.
நாராயண பீடம்: காவிரி நதி கடலோடு கலக்கும் இடம் ‘சங்கு முகம்.’ இதன் முன்பு ஒரு அழகிய சிவாலயம் இருந்தது என்றும் காலப்போக்கில் அது அழிந்து போனதாகச் சொல்லப்படுகிறது. அங்கே காவிரியுடன் கடலரசன் விநாயகப் பெருமானை நிறுவி வழிபட்டதால் இக்கணபதி தீர்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
ஓங்கார பீடம்: சீர்காழித் திருத்தலத்தின் ஒரு பகுதியாக இருப்பது நெப்பத்தூர் என்ற திருத்தலமாகும். இதன் புராணப் பெயர் வேதபுரம். இங்குள்ள விநாயகப் பெருமான் பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அதனால் இவருக்கு பரமேஸ்ர விநாயகர் என்று பெயர்.
இப்பிள்ளையாரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.காமதாயினி பீடம்: பூம்புகார் செல்லும் பாதையில் மேலையூர் என்ற ஊர் அருகில் செங்கழுநீர்ப் படித்துறை உள்ளது. செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்திருந்த கரையில் இந்திரன் நிறுவி வழிபட்ட விநாயகர் என்பதால் செங்கழுநீர் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தன்னை வழிபடும் பக்தர்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றும் வல்லமை மிக்கவர்.
புருஷார்த்த பீடம்: சீர்காழி நாங்கூருக்கு அருகில் உள்ளது மதங்க ஆசிரமம். இங்கு மதங்க முனிவர் கணேச பீடம் ஒன்றை உருவாக்கினார். இங்குள்ள விநாயகரை சிவனும் உமையம்மையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருளும் தருபவர்.புஷ்டி பீடம்: கீழ்ப்பெரும்பள்ளம் எனும் கேது தலத்தில் உள்ளது. விநாயகர் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பவர் என்றும், வேண்டும் வரத்தையும் தருபவர் என்றும் கூறுகிறார்கள்.
இங்குள்ள புஷ்டி பீடம் எண்பத்தெட்டாயிரம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஷட் சக்தி பீடம்: கீழ்ப்பெரும்பள்ளத்தில் இருக்கும் இதே தலத்தில் அமைந்திருக்கும் இன்னொரு பீடம் இந்த ஷட் சக்தி பீடமாகும். இங்கு பல கணேச மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் வரப்பிரசாதிகள்.
மகி