Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிறப்பே அறியானை பெற்றவள்

காரைக்கால் அம்மையார் கதை-1

மறைத்திருந்த திரையை சட்டென விலக்கி, கருவறையில் அமைந்திருந்த நான்கடி உயர லிங்கத்திருமேனிக்கு, சண்டேஸ்வரக்குருக்கள் பஞ்சமுக கற்பூரஆரத்தியை காட்டினார். வட்டமாய் ஆரத்தியைக் காட்டி, லிங்கரூபத்தின் நெற்றிக்கெதிரே நிறுத்தினார். லிங்கத்தின்முன் நீர்க்கோடுபோல, நீளமாய் மேல்நோக்கி துடித்த, அந்த ஆரத்தியைக் கண்டு, எதிர்நின்ற மக்களனைவரும், ``பட்பட்டென்று’’ கன்னத்திலறைந்துகொண்டார்கள்.

தலைக்குமேல் கைகளிரண்டையும் கூப்பி, ``என்சிவமே’’ வென தொழுதார்கள். விளக்குகளின் வெளிச்சத்தையும் மீறி, தகதகத்த லிங்கரூபத்தைக் கண்டு பரவசமாகி, ``ஓம் நமசிவாய’’ என பிளிறினார்கள். காதுகள் விடைக்க, லிங்கரூபத்தையே பார்த்துக் கொண்டிருந்த, நந்திசிலையின் இடப்பக்கத் தூணருகே நின்றிருந்த, ருத்திராட்சமும், திருநீறுமணிந்திருந்த அடியவர் கூட்டமொன்று, சட்டென சிவமந்திரப்பாடல்கள் பாடியது.

அன்பும்சிவமும் இரண்டென்பர் அறிவிலார். அன்பேசிவமாவது யாரும் அறிகிலார். அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. ராகத்துடன், தேர்ந்த தாள லயத்துடன், அழகான அப்பாடல்களை தொடர்ந்து பாடியது. மெல்லமெல்ல, அந்தப் பாடல்களால் பரவசமான மொத்த கூட்டமும், அடியவர்களுடன் இணைந்து உற்சாகமாய் பாடியது. அத்தனை ஆரத்திகளும் முடிந்ததும், பாடிய மொத்த ஜனங்களும், வரிசையாக உள்ளங்கையில் திருநீறுவாங்கி, ``சிவோஹம்’’ சொல்லி, நெற்றி முழுதும் தேய்த்துக் கொண்டது. மீண்டும் கைகூப்பி கண்மூடிபிரார்த்தித்து, அவரவர் பிரார்த்தனையை, மதிசூடிய பெருமானின் மடிமீது வைத்தது.

முன் வரிசையில், குடும்பத்துடன்நின்று வணங்கிக்கொண்டிருந்த, தனதத்தருக்கும் பிரார்த்தனையிருந்தது. காரைவனத்தின் (இன்றைய காரைக்கால்) பெருந்தனவந்தரான அவருக்கு, செல்வம்குறித்த கவலையில்லையெனினும், தன் ஒரே மகள் புனிதவதியைக் குறித்த கவலையிருந்தது. நல்லவனாய், அன்பானவனாய், அற்புதக் கணவனாய் அவளுக்கு அமையவேண்டுமென்ற பிராத் தனையிருந்தது. ``என் செல்லமகளுக்கு நல்லவரனாக அமைத்துத்தா’’ என்கிற வேண்டுதலை கைலாசநாதர்முன் வைத்தார்.

ஆனால், அவர் மகள் புனிதவதிக்கு வேறொரு பிரார்த்தனையிருந்தது. எல்லா கன்னிப்பெண்களை போல நல்ல கணவனுக்கு ஆசைப்பட்டாலும், அவளுக்கு வேறொரு வேண்டுதலிருந்தது. ``எவருக்கு வாழ்க்கைப்பட்டாலும், உன்னைவிட்டு நகராது, உனதெல்லையிலேயே, உன்காலடியிலேயே வாழும் பாக்கியம் வாய்க்கவேண்டும் அப்பா’’ என்கிற மன்றாடலிருந்தது.

“அப்பா” அப்படித்தான் கைலாச நாதரை அவள் விளித்தாள்.

எல்லோரும் ``என்சிவனே, என் ஈசனே’’ என அழைக்க, ``அப்பா’’ வென அழைப்பதே அவளுக்குப் பிடித்திருந்தது. ``இது வெறும் லிங்கத்திருமேனியல்ல. நம்தந்தை’’ என்றாள். “ஏனவ்விதம் அழைக்க வேண்டும்” என கேட்பவர்க்கு, “ஏனெனில் இந்த உலகின் அத்தனைஉயிர்க்கும் அப்பனாய் நின்று, படியளந்து பசிதீர்க்கும் ஈசனை, அப்படியழைப்பதே பொருத்தமென” உறுதியாக உரைத்தாள். வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்ரசாதம் வழங்கிக்கொண்டிருந்த, வேதவித்தான சண்டேஸ்வரக் குருக்கள், மனைவி தர்ம வதியுடனும், மகள் புனிதவதியுடனும் வந்திருந்த தனதத்தரை கண்டு, ``வாரும்’’ என வாயால் அழைக்காமல், புன்னகையாய் தலையசைத்து வரவேற்றார்.

சட்டென கருவறைக்குள் சென்று, லிங்கத்திருமேனிக்கு சாத்தியிருந்த மாலைகளிலொன்றை எடுத்துவந்து, சிவநெறி தவறாத தனதத்தரின் கழுத்திலிட்டார். உடனிருந்த அவரது இல்லாள் தர்மவதியின் கைகளில் மலர்சரம் தந்தார். இருவருக்கும் சிவபிரசாதமளித்தார். இருவரையும் தாண்டி, கண்மூடி பிரார்த்தித்துக்கொண்டிருந்த புனித வதியின் முன்நின்றார். அவர்வந்தது தெரியாமல், பிரார்த்தித்துக்கொண்டிருந்த புனிதவதியையே உற்றுப்பார்த்தார்.

அன்று, புனிதவதி பச்சைநிறத்தில் அரைகச்சையும் பாவாடையும் அணிந்திருந்தாள். நெற்றியில் பட்டையாய் அழகாய் விபூதி தரித்திருந்தாள். கழுத்திலணிந்திருந்த அழகிய முத்து மாலையும், சரியாய் தொண்டைக்குழியில் அமர்ந்திருந்த வெள்ளிப்பூணிலான உருத்திராட்சமும், அவள் முகலட்சணத்தை மெருகூட்டின. கைகளிலணிந்திருந்த நான்கடுக்கு வளையல்களும், விரல்களிலிருந்த பவழ மோதிரங்களும், புஜங்களில் மாட்டியிருந்த வாகைவளையல்களும், பெருந்தனவந்தனரின் மகளவள் என்பதைக் காட்டின. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, செல்வந்தரின்மகள் என்கிற கர்வம் துளிகூட இல்லாத அமைதியாலும், குழந்தை தனமும், குமரித்தனமும் இணைந்த பேரழகாலும், அந்த முகத்தில் தெய்வகடாட்சம் வழிந்தது.

``நான்பார்த்து வளர்ந்த மகள்’’ என பெருமிதத்துடன் புனிதவதியைக்கண்ட அந்த அந்தணர், தெய்வீக அம்சமாய் கண்மூடிப் பிராத்தித்துக் கொண்டிருந்தவளை பார்த்து, ``மகளே, இந்தகணத்தில், இந்த நொடியில், நீ பிரார்த்திக்கிற உன்வேண்டுதல்கள் அத்தனையும் பலிதமாகட்டும், கைலாசநாதர் உன் அத்தனை நல்எண்ணங்களையும் ஆசிர்வதிக்கட்டும்’’ என மனதால் கையிரண்டும் உயர்த்தி ஆசிர்வதித்தார். அவரது ஆசி பலிக்குமென்பதுபோல், கருவறைவாசலில் வடதிசையிருந்த கௌளி சத்தமிட்டது.

வடதிசையில், வாயு மூலையிலிருந்து பல்லி பலன் சொன்னால் சுபசெய்தி வருமென்பதும், அதன் வடதிசை வாக்கு பலிதமாகும் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆசிர்வதித்துவிட்டு திரும்பி, “உங்களோடு சற்று பேசவேண்டும் தனதத்தரே’’ என கேட்க நினைப்பதற்குள், ஜனங்களின் நெரிசலில் சிக்காதிருக்க தனதத்தர் விடைபெற்றுக்கொண்டார். ஆனால், அவரோடு பேசியே ஆகவேண்டும் என்பதற்காக, விரைவாக முன்மண்டபத்திற்கு வந்து, குடும்பத்துடன் கொடிமரத்தினருகே விழுந்து வணங்கிவிட்டு, வெளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த தனதத்தரை எதிர்கொண்ட சண்டேஸ்வர குருக்கள், ``வாருங்கள் தனதத்தரே’’ என சந்தோசமாய் வரவேற்றார்.

``வியாபார நிமித்தமாய் சென்ற கடற்பயணம், சுபமாய், சுகமாய் முடிந்ததா? மன்னிக்க வேண்டும். சந்நதிமுன் தங்களை சரிவர விசாரிக்க இயலவில்லை’’ என்றார். உடன்நின்ற தர்மவதி அம்மையாரை வணங்கினார். புன்னகைத்த புனிதவதியைப் பார்த்து, ``நலமா புனிதவதி’’ என வினவினார். ``மிக்க நலம் ஐயன்’’ என்று வணங்கிய புனிதவதியை, கைதூக்கி ஆசிர் வதித்தார். சண்டேஸ்வர குருக்களுக்கும், தனதத்தருக்கும் நல்லநட்பும், தோழமையுமுண்டு. இருவருக்குள்ளும் குடும்ப உறவைப்போன்ற அன்புண்டு. இருகுடும்பத்தின் சுக, துக்கங்களுக்கான கேள்விகளும், விசாரிப்புகளும் இருவரிடமும் உண்டு.

அது, தனதத்தர் பெரும்வணிகர் என்பதாலல்ல. அரசரோடு நெருங்கிய நட்புக்கொண்டவர் என்பதாலோ அல்லது அரசுவழங்கும் உயரிய விருதான ``எட்டி’’ விருது (சிறந்த வணிகருக்கான விருது) பெற்றவர் என்பதாலோ அல்லது அதற்கான ``தங்கமலர்’’ பரிசு பெற்றவர் என்பதாலோ அல்ல. தனதத்தர் சிவநெறி மாறாச்செல்வர். நேர்மையும், ஒழுக்கமும் தன் வாழ்வியல் தத்துவமென கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக, கைலாசநாதர் மீது பெரும்பக்தி உள்ளவர்.

இந்த ஆலயத்திற்கு வணிக மரபிற்கே உரிய பண்போடு, அக்கறையோடு, அநேக உபயங்கள் செய்தவர். கருவறையில், லிங்கத்திருமேனிக்கு பின்புறம் திருவாச்சியும், அதைச்சுற்றியுள்ள அகல் விளக்குகளும், உள்ளே இருபுறமும் தொங்க விடப்பட்டுள்ள, மூன்று முழ சரவிளக்கும், தனதத்தரின் உபயங்களே. நந்திசிலை அருகேயுள்ள, நடைபழகும் குழந்தையின் உயரமுள்ள அழகிய பாவைவிளக்கும் அவர்பங்கே. அனல்பிழம்பாய் நிற்கும் ஈசனுக்கு, வெக்கை தெரியாதிருக்கட்டுமென்று, கருவறைமுழுதும் வேய்ந்திருக்கும் வெட்டி வேர் பந்தலும், மெல்லஅசைந்து லிங்கத் திருமேனி மீது வழியும் அமிர்ததாரையும், கைலாசநாதர் மீது அவர்கொண்ட அன்பே. பிரிவுகளால் அத்தனைப் பிளவுபடாத அந்த ஆறாம் நூற்றாண்டில், ஒருஅந்தணரையும், வணிகரையும், சிவபக்தி இணைத்திருந்தது. நேர்மையும், ஒழுக்கமும் சேர்த்திருந்தது.

குருக்களின் வரவேற்பிற்கு, வணக்கமும், புன்னகையும் ஒருசேர தெரிவித்த தனதத்தர், ``கைலாசநாதனின் கருணையால், எல்லாம் நலமே சுவாமி. பயணநோக்கம் சிறப்பாய் முடிந்தது. கடற்பயணமும் பெருந்தொந்தரவை தரவில்லை. சகலமும் நம் சிவன் கருணை’’ என்றார். மனைவி தர்மவதியின் பக்கம் திரும்பி ``நீங்களிருவரும் முன்னேசென்று வாசல் கோபுரத்தருகே காத்திருங்கள். நான் பேசிவிட்டு வருகிறேன்’’ என மனைவியையும், மகளையும் அனுப்பினார். அவர்களிருவரும் சண்டேஸ்வர குருக்களை வணங்கி, விடைபெற்று சென்றனர். சண்டேசுவர குருக்கள் மீண்டும் தன்பேச்சை தொடர்ந்தார்.

``எப்போது வந்தீர்கள்’’.

``பன்னிரண்டு நாள் பயணத்தின் முடிவில், நேற்றிரவு

கரையேறினேன்’’

``இந்த முறை விரைவில் திரும்பிவிட்டீர்கள்’’

``ஆம், ஏனோ தெரியவில்லை. என்மகள் புனிதவதியின் ஞாபகமாகவே இருந்தது. சில சுபகனவுகள் அவளை நினைவுறுத்திக் கொண்டேயிருந்தன. மீதமிருந்த மிளகு மூடைகளையும், யானைக் கோடுகளையும் (யானைத் தந்தங்கள்), சீனத்து நண்பனிடம் கைமாற்றிவிட்டு, கிளம்பிவிட்டேன்’’

``கொள்ளையர் தொந்தரவேதும்?’’

``இல்லை. ஆனால் எங்களுக்குமுன் சென்றிருந்த கப்பலில் கொள்ளை நடந்திருந்தது. முக்கடல் சங்கமத்தில், நடுக்கடலில் நின்றிருந்த நாவாய்க்குள், ஜாக்கிரதையாய் ஏறிப் பார்த்ததில் நாசம் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட 50க்கும் மேலான ஆட்களை, குத்திக் கிழித்திருந்தார்கள். அதில் குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்த எழுவரை காப்பாற்றினோம். இறந்துகிடந்த மற்றவர்களை, வெள்ளைத்துணியில் சுற்றி, யாரோ, எக்குலமோ, இறந்தபின் சேருமிடம் சிவனடி தானே. அதனால் “ஓம்நமசிவாய” சொல்லி, கடலில் தூக்கிப்போட்டோம்

“நாற்பத்து சொச்சப்பிணங்களையும் நடுக்கடலில் தூக்கிப் போட்டபோது, ``சடேர்சடேரென்ற’’ சத்தமும், கடல் அவற்றை விழுங்கியகாட்சியும், இன்னமும் காதுக்குள்ளும், கண்ணுக்குள்ளும், நிற்கிறதய்யா. ஒருவேளை நான் விரைவில் திரும்பியதுகூட, அந்தக் காட்சியை கண்டதாலோ என்னவோ’’.

அதன்பின், அந்த நிகழ்வுக்குப்பின், பெரும் மவுனம் நாவாய் முழுதும் சூழ்ந்து கிடந்தது. அந்த மவுனத்தை உடைக்க, சுக்கான் இயக்கிக்கொண்டிருந்த மாலுமி மெல்லிய குரலில், ``ஓம் நமசிவாய. ஓம்.. ஓம் நமசிவாய’’ என பாடினார். அவரோடு துடுப்புவலிப்பவர்களும், இணைந்து பாடினர். மெல்லமெல்ல எல்லோரும் இணைந்துகொண்டனர். காவலுக்கு அழைத்துப்போயிருந்த பாதுகாவலர்கள், ஆயுதங்களையோரமாய் வைத்துவிட்டு, கப்பலின் விளிம்போரம் அமர்ந்தபடி, அமைதிகொஞ்சும் கடல்பரப்பைப் பார்த்தபடி, ``ஓம் நமசிவாய ஓம், ஓம் நமசிவாய’’ என உடன்சேர்ந்து உரத்தக்குரலில் பாட ஆரம்பித்தனர். அவர்கள் பாடுவதைக் கேட்டு, சற்றுநேரத்தில் நாவாய் மொத்தமும் “நமசிவாயம்” பாடத் துவங்கிவிட்டது.

பெரும் நிசப்தம் கொண்ட நடுக்கடலில், ``ஹூம்ம்’’ என்கிற காற்றினோசையின் நடுவில், நமசிவாயம் பாடும்போது எப்படி யிருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். கிட்டத்தட்ட எங்களுக்கு கைலாயமலை தரிசனம்போன்ற அனுபவமாயிருந்தது’’. கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது தனதத்தரே. நீங்களனைவரும் சேர்ந்து சொல்லிய நமசிவாய மந்திரமே, உங்கள் அனைவரையும் கவசமாய் காபந்துசெய்து, பத்திரமாக கரை சேர்த்திருக்கிறது. அடுத்து, எப்போது கிளம்புகிறீர்கள்?’’ என குருக்கள் வினவினார்.

``இல்லை சுவாமி, இப்போதைக்கு கிளம்பும் எண்ணமில்லை. மகள் புனிதவதியின் திருமணத்தை நடத்தும் மனநிலையிலிருக்கிறேன். காலம் இனி கடத்தாது, முழுவீச்சில் திருமணத்தை முடித்திடலாமென எண்ணுகிறேன்”. ``அப்படியா. புனிதவதியின் திருமணத்தை முடிக்குமெண்ணத்தில் இருக்கிறீர்களா? ஆஹா.ஆஹா. என்னே நம் ஈசனின் கருணை. சரியானநேரத்தில் இதைப்பற்றி என்னிடம் பேசினீர்கள்’’ என சந்தோசத்தில் கைதட்டி குதூகலித்தார்.

உண்மையில், உத்தமப்பெண்களின் திருமணத்திற்கு, பெண்ணைப் பெற்றவர்கள், அத்தனை மெனக்கெடத் தேவையில்லை தாமாகவே முன்வந்து, நல்லோர்கள் வழி

நடத்துவார்கள். குலமாதர்களை தங்கள்மகளென பாவித்து, பாரத்தை ஏற்பார்கள். இங்கு, இப்படியொரு பிள்ளையுண்டு என வலிந்து விவரம்தெரிவிப்பார்கள். அங்கும் அதுதான் நடந்தது.

ஏனெனில், நல்ல தலைமுறை குறித்தகவலை, எல்லாக் காலத்திலும், எல்லோர்க்கும் உண்டு.

தொடரும்...

குமரன் லோகபிரியா