Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவேகம் தரும் வெள்ளமடை தர்மராஜா கோயில்

வைணவ திவ்ய ஸ்தலங்கள் 108. ஆங்காங்கு ஊர்தோறும் அபிமான ஸ்தலங்களும் உள்ளன. கோவை மாவட்டம் வெள்ளமடை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் பஞ்ச பாண்டவர்களாகிய மூர்த்திகளுடன் உபயநாச்சிமாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும். பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளமடை கிராமத்திற்கு வடக்கில் உள்ள ஒரு பூமியில் சிறுவர்கள் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருந்த சமயம் மேடான ஒரு பகுதியில் ஒரு மாடு பால் சொரிந்ததைப் பார்த்த ஒரு சிறுவனுக்கு அருள் வந்துவிட்டது. அதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் இச்செய்தியை ஊர் பெரியவர்களிடம் சென்று தெரிவித்தனர்.

மறுநாள் காலை ஊர் பெரியவர்கள் அங்கு சென்று மேடான பகுதியைச் சோதித்த சமயம் ஒரு சிலை கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் அச்சிலையை ஊர் பொதுக் கிணற்றுக்குப் பக்கத்தில் வைத்து ஒரு சிற்பியை வரவழைத்துக் காண்பித்தபோது அவர் ஆராய்ந்து தர்மர் சிலை என்று நிர்ணயித்தார்.

ஊர் பெரியவர்கள் அந்தக் கிணற்றுக்கு மேற்கு பகுதியில் ஒரு பந்தல் அமைத்து அதில் தர்மர் சிலையை எழுந்தருளப் பண்ணி வழிபட்டு வந்தனர். சில வருடங்களுக்குப் பின் அந்த இடத்தில் நாட்டுக்கூரையுடன் ஒரு கட்டடத்தைக் கட்டி அதில் தருமர் சிலையை ஸ்தாபனம் பண்ணியதுடன் மரத்தாலான பஞ்ச பாண்டவர் உற்சவர்களையும் பஞ்ச லோகத்தாலான உபயநாச்சிமார், கருடன், ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகங்களையும் உடன் எழுந்தருளப்பண்ணி தொடர்ந்து வழிபாடு செய்துவந்தனர். பல வருடங்களுக்கு ஒரு முறை 18 நாள் நோன்பு செய்து கடைசி நாளன்று 60 அடி குண்டத்தில் தீமிதிக்கும் உற்சவத்தைக் கொண்டாடினர்.

1971ம் ஆண்டு ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி அந்தக் கோயிலுக்கு அருகில் 35 சென்ட் நிலப்பரப்பில் ஒரு கோயில் கட்ட தீர்மானித்து 1974ம் ஆண்டு வைகாசி மாதம் திருப்பணி நிறைவடைந்தபின் முன்னாள் கல்வி அமைச்சரும் பெரியநாயக்கன் பாளையம் இராமகிருஷ்ண வித்யா பீடத்தின் செயலருமான திரு. அவினாசிலிங்கம் அய்யா அவர்கள் தலைமையில் சுவாமி சோமானந்தா அவர்களால் சம்ரோக்ஷணம் நடைபெற்றது.

கோயிலைச்சுற்றி மதிள்சுவர் எழுப்பியும் மடை பள்ளி, வாகனசாலை அமைத்ததோடு கருடவாகனம், சேஷவாகனம், ஸ்ரீஆண்டாள் ரதம் செய்து வழிபாடுகள் இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

2004ஆம் ஆண்டு பரமபத வாசலும், 2008 ஆம் ஆண்டு பிரசாத விநியோகக் கூடம், தோரண வாயில், சுற்றுத்தளம் திருப்பணிகள் நிறைவுற்றன. மற்றும் நித்யாத்ஸவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 2011 ல் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தனி சந்நதியும் 1000 சதுர அடியில் முன் மண்டப விரிவாக்கமும் திருப்பணி நிறைவடைந்து சம்ரோக்ஷணம் செய்யப்பட்டது.

1974ம் வருடம் புதிய கோயில் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நந்தா தீபம்சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. திருவீதி புறப்பாட்டில் உபய நாச்சிமார் கருடன், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ திரௌபதி சமேத பஞ்ச பாண்டவர்களுடன் ஒரே வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும்.

ஆகம விதிப்படி, 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாதா மாதம் பௌர்ணமி பூஜையும், ஆண்டு தோறும் கோயில் தொடக்க நாள் விழாவும் நடைபெறுகிறது. பிரதி மாதம் புனர்பூசம், ரோகிணி நட்சத்திர தினங்களில் உபய நாச்சிமாருடன் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் ஆண்டாள் கோஷ்டியினரால் லட்சுமி சகஸ்ர நாமம் செய்து விளக்கு பூஜையும், சனிக்கிழமைகளில் பாகவத கோஷ்டியினரால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சன காலத்தில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமமும், நித்யபடியும் சேவிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஆடி 18, ஆவணி மாதம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் 5 சனிக்கிழமைகள், விஜயதசமி, ஐப்பசி மாதம் தீபாவளி, மார்கழி மாதம் 30 நாளும் ஸ்ரீ ஆண்டாள் ரதத்தில் திருப்பாவை பஜனையுடன் திருவீதி உலா, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் ஆகிய நாட்களில் உற்சவங்கள் திருவீதி புறப்பாட்டுடன் கொண்டாடப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் இப்பகுதியில் சரிவர மழை இல்லாததால் வெள்ளமடை கிராம ஜனங்கள் தர்மராஜா கோயிலில் 7 நாள் விராட பர்வம் படித்து 8ம் நாள் அன்னகூட உற்சவம் செய்வது என முடிவு செய்து 1.8.13 முதல் 7.8.13 முடிய 7 நாட்கள் கோயில் ஆராதகர் விராட பர்வத்தை பக்த ஜனங்கள் முன்பு படிக்கப்பட்டது. அன்னகூட உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. பக்கத்து கிராமத்தில் உள்ளவர்களும் வந்து கண்டுகளித்தனர். உற்சவத்திற்குப்பின் 3 நாளில் இப்பகுதியில் பலத்த மழை பெய்து பத்து ஆண்டுகளுக்குப்பின் கோயில் அருகில் உள்ள குளம் நிரம்பி மறுகால் போயிற்று. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விதைப்பு வேலைகளில் ஈடுபட்டனர்.

இந்தக் கோயிலை திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தக் கோயிலுக்கு செல்ல (வெள்ளமடை) கோவையில் இருந்து 32எ, 45, 57 பேருந்துகள். ஆராதகருக்கு கோயிலுக்கு அருகில் குடியிருப்பு பக்த ஜனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.