Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வில்லேந்திய வேலவன்

தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல், எண்ணற்ற பல தலங்களிலும் முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இந்து கடவுளர்களில் இளம் வயது கடவுள், முருகப்பெருமான் மட்டுமே. ‘முருகு’ என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான ‘கவுமாரம்’ என்பதன் தெய்வமும் முருகனே ஆவார்.முருகப்பெருமான் பெரும்பாலும் வேலுடன் வேலாயுதபாணியாகவும், தண்டத்துடன் தண்டாயுதபாணியாகவும் திருக்காட்சி தருவார். ஆனால், வேலுடையான்பட்டு என்ற தலத்தில் கோயில் கொண்டருளும் முருகக் கடவுள், வில்லேந்திய கோலத்தில், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூவரின் திருவுருவங்களும் ஒரே கல்லில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுயம்புவாக எழுந்தருளிய சுப்ரமண்யர், வேடுவக் கோலத்தில் சடா முடியுடனும், திருக்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியவராகத் திருக்காட்சி தருகிறார்.வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி நகரியத்தில் வேலுடையான்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது.கி.பி.1935 வரை வேலுடையான்பட்டு கிராமம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிராமங்கள் செழிப்புடன் இருந்தன. கி.பி.1956 ஆம் ஆண்டு சுரங்கம் தோண்ட நிர்வாக அமைப்பு ஒன்றை நடுவணரசு அமைத்தது. கிராமங்களைக் காலி செய்து மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியது. காலி செய்யப்பட்ட கிராமங்களுள் வேலுடையான்பட்டு என்ற ஊரும் ஒன்று. ஊரைக் காலி செய்தாலும் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த சுப்பிரமணியர் கோயில் மட்டும் நிலைத்திருக்கிறது.

தல வரலாறு

புராண காலத்தில், ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காணமுடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், ‘‘இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்’’ என்று கூறினார்.அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின் நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டுகளித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சியளித்தார். அதனால் இத்தலம் ‘வில்லுடையான்பட்டு’ எனப் பெயர் பெற்றது.

பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு ‘சரவண தீர்த்தம்’ என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் ‘வேலுடையான்பட்டு’ என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார். இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண்மேடிட்டு மறைந்தது.கலியுகத்தில், நமக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான். கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள், இந்தப் பகுதியில் இருந்த காட்டுப்பகுதிக்கு மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருநாள் மேயச் செல்லும் பசுக்களைத் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்துகொண்டிருந்தன.

மன்னன் வியப்புற்ற வனாக, அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பெருகி வரவே திடுக்கிட்ட மன்னர், அந்த இடத்திலிருந்த புதரை மெள்ள மெள்ள அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தபோது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் காட்சி தந்தார் முருகப் பெருமான். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானதுதான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோயில்.மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆனால் எங்கு எப்போது கிடைத்தது என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானைத் திருமணச் சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் ஐந்து சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலது பக்கத்தில் தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சந்நதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சந்நதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது. கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா, துர்க்கை ஆகிய சந்நதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.அர்த்தமண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணியசுவாமியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிராகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய சுந்தரேசுவர பெருமான் சந்நதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சந்நதியும், மேற்கு நோக்கிய பைரவர் சந்நதியும் இடம் பெற்றுள்ளது. ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சந்நதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த மண்டபமும் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்திற்கு வெளியே முருகப்பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப்பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்துவிரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார்.இந்தத் திருத்தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத் திருவிழா விசேஷமானது. 12 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து வழிபடுவர். சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து அருள்புரிந்து வருகிறார்.கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால், குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி, பெளர்னமியன்று சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறுகால பூஜைகள் செய்யப்படுகின்றன.இங்கு தினந்தோறும் காலை 6 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மாலை 4.30-ல் இருந்து இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

அமைவிடம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். வடலூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.