Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்சி தந்து ஆட்சிபுரியும் வேலன்

குன்று இருக்கும் இடமெல்லாம் முருகன் குடி கொண்டு இருப்பான் என்பது நமது ஆன்றோர்களின் வாக்கு. ஆம் உண்மைதான். தமிழ் கடவுளான முருகன் குன்று இருக்கும் இடமில்லாமல் பல இடங்களில் குடி கொண்டு மக்களுக்கு அருள்புரிகிறார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மணவாளநல்லூர், அ/மி கொளஞ்சியப்பர் திருக்கோயில். இங்கு முருகன் சுயம்பு வடிவில் பலிபீடத்தில் ரூபத்தில் காட்சி தருகிறார். ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறையில் உள்ள முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமாகும்.பூம்புகார் அருகே மேலை யூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் அருள்புரிகிறார்.

முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கும் கோவில் “காட்டி சுப்ரமணியா” எனும் குக்கே சுப்ரமண்யா தலம். இது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதில்லை.தனது மாமன் திருமாலைப்போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திகாட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ளது.செம்பனார் கோவில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக் கோலத்தில் காட்சி தருகிறார்.

கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடன் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று. திருப்போரூரில் மூல விக்கிரமாக முத்துக்குமார சுவாமியாய் காட்சி தருகிறார் முருகப் பெருமான். கந்தன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.திருவையாறு ஐயாறப்பன் சந்நதி பின்புறம் கையில் வில் அம்போடு முருகன் அருள்பாலிக்கிறார் தனுசு சுப்பிரமணியன்.எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான்.

இங்குள்ள முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதமர்ந்து காட்சி தருகிறார். வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.பக்தர்கள் தங்கள் பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் காட்சி தருவார்.இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் முருகன் சிலையும், உடன் வள்ளி தெய்வானை சிலைகளும் உள்ளன.கோயிலின் கருவறை எந்த நாகரிக அலங்காரமும் இல்லாமல், திரு விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகனை காணும் படி இருப்பது மேலும் அழகைக் கூட்டுகிறது.

கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்”இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை ஒன்று, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை.இரண்டாவதாக உள்ளது பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.உலகிலேயே நவபாஷாண சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர் குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது.

முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.முருகப்பெருமானுக்கு இரண்டு முகங்களும் எட்டுக் கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.