ஜோதிடக்கலையில் பல அற்புதமான உளவியல் கருத்துக்கள் உண்டு. ஜோதிடம் உண்மையா பொய்யா என்பதெல்லாம் இன்னொரு புறம் இருந்தாலும், ராசிக் கட்டத்திலும் கிரக காரகத்துவத்திலும் உள்ள சில விஷயங்கள் நமக்கு எப்படி வாழ வேண்டும் என்கின்ற வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லித் தரும். சென்ற வாரம் செவ்வாயைப் பார்த்தோம். செவ்வாய் வீரிய கிரகம். ரத்தத்தைப் பிரதிபலிக்கும் கிரகம். அதனால்தான் அறுவை சிகிச்சை செய்கின்ற மருத்துவர்கள், போரில் வீரத்தோடு செயலாற்றுகின்ற போர் வீரர்கள் மற்றும் போர்படைத் தளபதிகள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தைரியம் நல்ல முறையிலும் இருக்கும். கெட்ட முறையில் இருக்கும். தைரியம் ஒரு திருடனைத் துரத்தி பிடிக்க வைக்கும்.
அதே தைரியம், பிடிக்க வரும் போலீஸ்காரரைத் தள்ளி விட்டு ஓடச் செய்யும். அல்லது யாரையாவது தாக்கச்செய்யும். பத்து பேர் இருந்தாலும்கூட ஒரு கத்தியைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்ற சில மோசமான நபர்களை நாம் பார்க்கின்றோம். போலீஸ்காரருக்கு வேலை செய்த அதே செவ்வாய், இங்கே மோசமான ஒரு கொலைகாரனுக்கும் வேலை செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். எப்படி வேலை செய்கிறது என்பதுதான் வேறுபாடு. செவ்வாயின் தைரியம் சில ஜாதகங்களில் நேர்மறையாகவும் வேலை செய்யும். சில ஜாதகங்களில் எதிர்மறையாகவும் வேலை செய்யும். நேர்மறையாக வேலை செய்யும் ஜாதகங்களில் செவ்வாய் காவல்துறை அதிகாரி, அரசியல் தலைவர், தொழிற்சங்க தலைவர், ராணுவ அதிகாரி போன்ற உயர்ந்த அதிகாரம் மிக்க பதவிகளைப் பெற்றுத் தரும். பல ஐபிஎஸ் அதிகாரிகளின் ஜாதகங்களில் செவ்வாய் சிறப்பாகவும், முதன்மையாகவும் இருக்கும். செவ்வாய் எதிர்மறையாகச் செயல்படத் தொடங்கினால், அடிதடி வம்பு வழக்குகளில் ஈடுபடும் அசட்டுத் தைரியத்தை தந்து தண்டனையை வாங்கித் தரும்.
தினம் ஒரு சண்டை போட்டு பஞ்சாயத்து பேசும் சிலரின் ஜாதகங்களில் செவ்வாயின் எதிர்மறை ஆதிபத்தியம் பார்த்திருக்கிறேன். செவ்வாய் எந்த ஆதிபத்தியத்தைப் பெற்றிருக்கிறது, யாரோடு சேர்ந்து இருக்கிறது, யாரால் பார்க்கப்படுகிறது என்பதை வைத்துத் தான் இந்த விஷயங்களைத் தீர்மானிக்க வேண்டும். செவ்வாய்க்கு கால புருஷனின் முதல் வீட்டையும், எட்டாவது வீட்டையும் ஆட்சி வீடாகத் தந்து இருக்கிறார்கள். கால புருஷனின் பத்தாம் வீடாகிய சனி வீட்டில் அவர் உச்சம் பெறுகிறார். கால புருஷனின் நான்காவது வீடாகிய கடகத்தில் அவர் நீசம் பெறுகிறார். ஒரு வேடிக்கை பாருங்கள். மேஷம்தான் முதல் வீடு. ஒன்றாம் இடத்திற்கு ஆதிபத்தியம் பெற்ற செவ்வாய் எட்டாம் இடத்துக்கும் ஆதிபத்தியம் பெற்றிருக்கிறார். எட்டாம் இடம் என்பது பொதுவாக கஷ்டங்களைத் தரும் இடம். ஒரே செவ்வாய் லக்னத்திற்கும் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கும், ஆதிக்கம் பெற்றிருப்பதை நினைத்துப்பாருங்கள். இது சுக்கிரனுக்கும் பொருந்தும். ஆனால், இப்பொழுது செவ்வாயைப் பற்றி மட்டும் பார்ப்போம். மேஷம் லக்னமாக இருந்தால் எட்டாம் இடமாகிய விருச்சிக ராசியின் வேலையை லக்கினாதிபதியாகிய அதே செவ்வாய்தான் செய்ய வேண்டும்.
ஒருக்கால், விருச்சிக லக்கினமாக இருந்தால் ஆறாம் இடமாகிய மேஷத்தின் வேலையை இதே செவ்வாய்தான் செய்ய வேண்டும். இது முக்கியமான ஒரு உளவியல் அமைப்பைக் குறிக்கிறது. ஒன்று, ஆறு, எட்டு ஆகிய இடங்களோடு தொடர்பு கொண்ட செவ்வாய் சில விஷயங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மேஷத்தின் லக்னாதிபதி செவ்வாய் கெட்டுவிட்டால், எட்டாம் இடத்துப் பலனாகிய விபத்துக்களையும், கஷ்டங்களையும், துக்கங்களையும், தண்டனைகளையும், அவமானங்களையும், தருவதற்குத் தயங்குவதில்லை. முரட்டு பிடிவாதம் (லக்ன செவ்வாய்) கஷ்டங்களை (எட்டாமிட பலனை) பெற்றுத்தரும்.
செவ்வாய் கெட்டுவிட்டால் அவன் மிகவும் கொதிப்புள்ளவனாக இருப்பான்; அல்லது தவறான வீரம் உள்ளவனாக, பிடிவாதக்காரனாக இருப்பான். அப்படியானால் அவனுடைய செயல்களே அவனுக்கு தண்டனைகளைப் பெற்றுத் தரும். ஒருவனை அடித்து, காயப்படுத்தி ரத்தத்தை பார்க்கும். அல்லது அடிபட்டு ரத்தத்தைப் பார்க்கும். (ரத்தம் செவ்வாயின் காரகம்) இதே செவ்வாய் சுபபலம் பெற்றுவிட்டால், அதுவும் ரத்தத்தைப் பார்க்கும். ஆனால், ஒரு அறுவை சிகிச்சை அறையிலே, கத்தி வைத்து, ஒரு நோயாளியை உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியில் அந்த ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
எட்டாம் இடம் என்பது ரத்தம், கத்தி போன்ற விஷயங்களைச் சொல்வதாக இருந்தாலும், அது நேர்மறையா எதிர்மறையா என்பது செவ்வாய் நேர்மறையாக இருக்கிறதா எதிர்மறையாக இருக்கிறதா என்பதை பொருத்து இருக்கிறது. அதைப் போலவே விருச்சிகம் லக்னமாகக் கொண்டால், மேஷம் ஆறாம் இடமாக வரும். ஆறு என்பது வேலை, பிறருக்கு செய்யும் சேவை, வழக்குகளை வெற்றி கொள்ளுதல் முதலிய நல்ல காரகத்துவத்தை அடக்கி இருக்கிறது.
அதே ஆறு என்பது பகை, நோய், கடன் முதலிய கெட்ட ஆதிபத்தியத்தையும் அடக்கி இருக்கிறது. இங்கே செவ்வாயின் நேர்மறை பலன் நோயை மாற்றும் மருத்துவராகச் செயல்பட வைக்கிறது. கடனை மாற்றும் முதலாளியாக செயல்பட வைக்கிறது. பகையை மாற்றும் வீரராக செயல்பட வைக்கிறது. வேலையையும் சேவையையும் செய்ய வைக்கிறது. பலமுறை மற்றவர்களுக்காக ரத்த தானம் செய்ய வைக்கிறது. ஒருக்கால் இந்த விருச்சிக செவ்வாய் கெட்டுவிட்டால், அடிதடியில் ஈடுபட்டு, கை கால் உடைந்து, ஆறாம் இடத்து பலனான நோயையும், ரத்த காயங்களையும் அனுபவிக்க வைக்கிறது. வழக்குகளில் மாட்டி, நிம்மதி இழக்கச் செய்கிறது. இவன் யாரை அடித்தானோ அவனுடைய பகை மாறாமல் இருப்பதால், வாழ்நாள் பகையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுக்கிறது.
அப்படியானால், செவ்வாய் நமக்கு என்ன தர இருக்கிறது? அந்தச் செவ்வாய் நமக்கு எப்படி இருக்கிறது? என்பதைப் புரிந்து கொண்டு, எப்படி வாழ வேண்டும் என்பதை ஆராய வேண்டும். பத்தாம் இடத்தில் (மகரம்) செவ்வாய் உச்சம் பெறுகிறது. அது சனியின் வீடு. 10 என்பது ஜீவனஸ்தானம். முயற்சிக் காரகனும் உத்தியோக காரகனுமாகிய செவ்வாய், சரியான தொழிலில் ஈடுபடுகின்ற பொழுது ஜீவனம் வலுப்பெறு கிறது. பத்தாம் இடமாகிய மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று நேர் பார்வையாக நான்காம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகர் தொழிலில் சம்பாதித்த பணத்தால் சுகம் பெறுகிறார். வீடு வாங்குகின்றார். தாயைக் காப்பாற்றுகின்றார். நான்காம் பார்வையால் தன்னுடைய ராசியாகிய மேஷத்தைப் பார்த்து இந்த பலன்களை ஜாதகர் அனுபவிக்கும்படிச் செய்கிறார்.
எட்டாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்த்து தன்னுடைய பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்க்கும் ஆற்றலைப் பெறுகிறார். அதே செவ்வாய் நீசமடைந்து கெட்டு விட்டால், தன்னுடைய காரகத்துவம் அத்தனையையும் இழந்து, கடன்காரனாக, நிலம் இல்லாதவனாக மாற்றுகின்றார். செவ்வாய்க்கு சகோதர காரகத்துவமும் உண்டு. ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா இல்லையா என்பது அந்த ஜாதகத்தில் உள்ள செவ்வாயின் நிலைமையைப் பொருத்தது.அடுத்து, செவ்வாய் தோஷம் சில ஜோதிடர்கள் சொல்வதுபோல மிகக் கொடுமையானதா என்பதையும், அந்த செவ்வாய் தோஷம் எப்படி வேலை செய்கிறது என்பதையும் அடுத்து பார்ப்போம்.