ஆத்மாவாகிய புருஷன் யார் என்று வால்மீகி கேட்டார். அதற்கான பதிலையே நாரதர் சொன்னார். அப்படிச் சொன்ன பதிலே ராமாயணமானது. இதற்கு என்ன ஆதாரமெனில், ஸ்ரீமத் பாகவதத்தில் 5வது ஸ்கந்தம், 19வது அத்தியாயத்தில் ஸ்ரீராமர் இப்பொழுதும் கிம் புருஷ வர்ஷத்தில் இருக்கிறார். அப்படி எந்நாளும் இருப்பவரை ஹனுமார் உபாசித்துக் கொண்டிருக்கிறார். ஜம்பூத்வீபத்தில் ஒன்பது வர்ஷங்களில் ஒன்றே கிம் புருஷ வர்ஷமாகும். இந்த வார்த்தையை கவனியுங்கள். கிம் + புருஷன். அதாவது புருஷன் யார். ஆத்மாவாகிய புருஷன் யார்? என்று விசாரிக்கும் புத்தியோகமே இங்கு கிம் புருஷ வர்ஷமாக விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆத்மாவாகிய புருஷன் என்கிற விசாரணை வேண்டும். இந்த விசாரணையானது மனதானது வெளிநாட்டம் இருக்கும் வரை நடக்காது. இப்படி மனதாகிய குதிரையை அடக்கியாளக்கூடிய சக்தி வெளியில் இல்லை. அது ஆத்ம ஞானம் என்கிற அந்த சக்தியால்தான் முடியும். அதனால்தான் இந்த குதிரையை அடக்க வேண்டியே அஸ்வமேத யாகம் என்கிற ஒன்றை குறித்து தொடக்கத்தில் விளக்குகிறது. இப்போது அஸ்வமேத யாகம் என்பதின் தத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், ராமாயணத்தில் கிம் புருஷ உற்பத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதில் இல என்கிற ராஜா அஸ்வமேத யாகம் செய்து ஆத்மாவாகிற புருஷனை அடைந்தான் என்று வருகின்றது.
இதிகாசங்கள் மனதை குதிரையாக சொல்லியிருக்கிறது. இப்படி இந்த மனமெனும் குதிரையானது வெளியே ஓடுவதை உலகமாக சொல்கிறது. இங்கு கவனமாக புரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தையே யாகத்திலுள்ள அக்னியாக சொல்கிறது. இப்போது அஸ்வம் என்றால் நிலைத்திராத மனம் ஆகும். மேதஸ் என்றால் சங்கல்பம் என்கிற கொழுப்பாகும். யாகம் என்றால் இந்த இரண்டையும் சங்கல்பம் என்கிற கொழுப்பையும், மனதையும் ஞானமாகிற அக்னியில் ஹோமம் செய்வதே அஸ்வ மேத யாகம் என்பதாகும்.
இப்படிச் செய்தால் கிம் புருஷ வர்ஷத்தில் புருஷனைக் காணலாம். அங்கு யார் இருக்கிறார்கள் என்று ராமாயணம் கூறுகிறது தெரியுமா?
அங்குதான் ஆத்மா ராமன் இருக்கிறான். அது சரி. இந்த கதையை யார் யாருக்கு கூறுகிறார்கள் என்று பார்ப்போம். ஆதியில் நாரதர் வால்மீகிக்கு கூறினார். எனவே, நாரதர் என்கிற குருவுக்கும் வால்மீகி என்கிற சிஷ்யனுக்கு இடையே நடந்த சம்வாதமாகும். எனவே, இந்த ராமாயணம் உபநிஷத துல்லியமானது. ஞான நூலாகும். ராமாயணத்தை வாசிக்க வாசிக்க பல்வேறு ஞான அடுக்குகள் மலர்போல விரியத் தொடங்கும்.
கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)