Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளர்ச்சி தரும் வசுமதி யோகம்

வாழ்வில் ஒவ்வொரு வகையான அமைப்பை யோகங்கள் தருகின்றன. அவை எப்படி தருவிக்கின்றன என்பதே பெரிய ஆய்வுதான். எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், எல்லோரும் வெற்றி பெறுகிறார்களா என்பது

கேள்விதான். ஒரு பெரிய விஞ்ஞானியாக இருப்பதற்கு ஆய்வுகள் என்பது ரொம்ப அவசியம். ஆய்வுகள் செய்வதற்கு சுய முயற்சி அவசியமாகும். அந்த சுய முயற்சியின் ஆய்வுகள்தான் வெற்றியாளனாகவும், விஞ்ஞானியாகவும் ஒரு தனி மனிதனை மாற்றுகிறது. பொதுவாகவே மறைவு ஸ்தானங்களான ஆறாம் (6ம்) பாவகம், எட்டாம் (8ம்) பாவகம் மற்றும் பன்னிரண்டாம் பாவகங்களில் கிரகங்கள் அமரும் பொழுது வேலை செய்யாது என்றும், பலன் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்களும் யோகப் பலன்களைச் செய்கின்றன. அவ்வாறான யோகத்தை காணலாம். அந்த யோகமானது, சுய முயற்சியை தருகிறது. இவ்வாறு சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவதை ஒரு யோகமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. சுய முன்னேற்றத்தால் வெற்றி பெறுவதற்கான ஒரு யோகம் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும் யோகம்தான் வசுமதி யோகமாகும்.

வசுமதி யோகம் என்றால் என்ன?

உபஜெய ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய மூன்றாம் பாவகம் (3ம்), ஆறாம் பாவகம் (6ம்), பத்தாம் பாவகம் (10ம்), பதினொராம் பாவகம் (11ம்) ஆகிய பாவகங்களில் இயற்கை சுபர்கள் என்று சொல்லக் கூடிய வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன், வியாழன் ஆகிய கிரகங்கள் அமைந்திருப்பது வசுமதி யோகம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி அமர்ந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அமர்வது கூடுதல் அமைப்பாகவும் இதனால் யோகம் வலிமையாகச் செயல்படுவதாகவும் உள்ளது.

‘வசுமத்’ என்பது செல்வத்தை குறிக்கும் அமைப்பாகும். எனவே, தனத்தை உற்பத்தி செய்யும் ஸ்தானங்கள் என்பதை ‘வசுமதி’ என்று சொல்லப்படுகிறது.

வசுமதி யோகத்தின் தன்மைகளும் சில விளக்கங்களும்

சில நேரங்களில் இந்த நான்கு பாவகங்களிலும் உள்ள கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று இருப்பதும், இந்த யோகத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய அமைப்பாகும். மேலும், பலவித யோகங்கள் உள்ளடக்கிய அமைப்பே இந்த வசுமதி யோகமாகவும் வருகின்றது. உதாரணத்திற்கு, வியாழன் - சந்திரன் இணைந்து கஜகேசரி யோகமாக செயல்படும் ஒரு சுபயோகம். அதுபோலவே, புதன் - சுக்கிரன் இணைந்து பதி யோகமாக உள்ளது. புதன் - சந்திரன் இணைந்து சங்கம யோகமாகச் செயல்படும் அமைப்பாகவும் உள்ளது. சில நேரங்களில் சொந்த வீட்டை பார்க்கும் கிரகங்கள் வலிமையும் அடைகின்றன என்பது கிரகங்களின் தனிச் சிறப்பாகவும் உள்ளது.

சுய முயற்சியால் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த யோகத்தின் தனிச் சிறப்பாகும்.

பொதுவாக கேந்திர ஸ்தானங்கள், திரிகோண ஸ்தானங்கள் ஆகியவற்றின் தொடர்புகள் கொண்டு உபஜெய ஸ்தானங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவதால், இந்த யோகம் சிறப்பானதாகும். இந்த யோகம் மிகவும் சிறப்பான யோகம் என வராஹமிஹிரரின் அழுத்தமான பதிவாகும். மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்கள் வேலை செய்யாது என்ற பதிவை இந்த யோகம் சிறப்பாக வேலை செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இந்த உபஜெய ஸ்தானங்களில் கிரகங்கள் வக்கிரமாக இருந்தாலும், அந்த கிரகங்கள் நன்மையான பலன்களை செய்யும்.

நான்கு பாவகங்களில் சுபகிரகங்கள் அமைவது அவ்வளவு சுலபமானது அன்று. அவ்வாறு உருவானாலும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த யோகம் அரிதாக ஏற்படுகின்றது.

நான்கு பாவகங்களில் மட்டும் சுபகிரகங்கள் இருந்தால், இந்த யோகமானது 95% சதவீதம் ஏற்படுகின்றது.

மூன்று பாவகங்களில் மட்டும் சுபகிரகங்கள் இருந்தால், இந்த யோகமானது 70% சதவீதம் ஏற்படுகின்றது.

வசுமதி யோகத்தின் பலன்கள்

*சுய முயற்சியினால் தனத்தைப் பெற்று முன்னேற்றத்தை வெகுவாக பெறுவார்கள்.

*சுபகிரகங்கள் இருந்து கிடைக்கும் வெற்றி என்பது சுயமாகவும் எதிரிகளை நேரடியாக சந்திக்காமல் பெறும் வெற்றியாகும்.

*செல்வச் செழிப்பை உண்டாக்கும் யோகமாக இந்த யோகம் உள்ளது.

*எந்த பின்னணியும் இல்லாமல் சுயமாக உழைத்து வெற்றி பெறுபவர்களுக்கு இந்த அமைப்பு கண்டிப்பாக உண்டு.

*இந்த யோகத்திற்கு சுய தொழில் மிகவும் சாதகமான பலன்களை வழங்குகிறது.

*இரண்டு தொழில்கள் செய்யும் அமைப்பை உடையவர்களாக இருப்பதற்கு அதிக வாய்ப்புண்டு.

*சுப கிரகங்கள் அதிகமான தொடர்பு ஏற்படுவதால், நேர்மையாக செல்வதில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

*இந்த யோகத்தில் சில அசுப பலன்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், ஆறாம் (6ம்) பாவகத்தில் அமர்ந்த கிரகம் சில நேரங்களில் சில சங்கடங்களையும் உண்டாக்குகிறது.